Thursday, August 8, 2013

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – வீரமணியின் கபட நாடகம் !

மயிலை, திருவரங்கம், மதுரை போன்ற பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, ஏதேனுமொரு மாரியாத்தா கோயிலில் மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முயற்சிக்கிறது ஜெ அரசு.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க தி.க செய்தது என்ன?

ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் –கல்வி வியாபாரி வீரமணியின் கபட நாடகம்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,
“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 1-ம் தேதியன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதில் திமுக தொண்டர்களும் கலந்து கொள்வார்களென கருணாநிதி அறிவித்திருக்கிறார். திராவிடர் கழகத்துக்கு இந்த கோரிக்கையின் மீது தோன்றியிருக்கும் திடீர் அக்கறை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மதுரை
மதுரையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசும் அர்ச்சகர் மாணவர் (கோப்புப் படம்).
1970-ல் பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது அன்றைய திமுக அரசு. அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பார்ப்பனர்கள், ஆகம விதிப்படி தாங்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்றும், பிற சாதியினர் சாமியைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும் என்றும் வாதிட்டனர்.
“அர்ச்சகர்கள் தங்கள் வேலைக்கு வாரிசுரிமை கோர முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறிய போதிலும், “மத சம்பிரதாயப்படி தகுதியான நபர்களை மட்டுமே அரசாங்கம் அர்ச்சகராக நியமிக்க முடியும்” என்றும் கூறியது. சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை இத்தீர்ப்பு எடுத்துக் காட்டியது. இந்நிலையை மாற்றும்பொருட்டு அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு திமுக முயற்சிக்கவில்லை. மாறாக, “அர்ச்சகர் பணி வாரிசுரிமையல்ல” என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பின்னரும், 1972-க்குப் பின் இன்று வரை திமுக, அதிமுக அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்களில் பெரும்பான்மையினர் வாரிசுரிமை மற்றும் சிபாரிசின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து வீரமணி போராடியதில்லை. விமரிசித்ததும் இல்லை.
பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியை 1993-ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டமாக ம.க.இ.க நடத்தியது. தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து ம.க.இ.க நடத்திய இப்போராட்டத்தில் பெரியார், அம்பேத்கர் படங்களுடன் எமது தோழர்கள் கருவறைக்குள் புகுந்து அரங்கநாதன் சிலையைத் தீண்டினர். தோர்களைத் தாக்கி மண்டையை உடைத்தது பார்ப்பனக் கும்பல். கோயிலுக்கு தீட்டுக் கழிப்பு சடங்கும் நடத்தியது. அன்று தமிழகமே ஆதரித்த இந்தப்போராட்டத்தைக் கண்டித்தவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் ராம.கோபாலன், இன்னொருவர், “வன்முறைப் போராட்டம்” என்று இதனைக் கண்டித்த வீரமணி.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக 1992-லேயே அறிவித்தார் ஜெயலலிதா. சமூக நீதிகாத்த வீராங்கனையென்று அவருக்குப் பட்டமளித்த வீரமணி, 1996 வரை அதனை அமல்படுத்துமாறு போராடவில்லை. 2001 -ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கிடா வெட்டுத் தடை சட்டம் கொண்டு வந்து, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கிடாவெட்டி சாமி கும்பிடுவதையே கிரிமினல் குற்றமாக்கினார். ம.க.இ.க அதனை எதிர்த்து கிடா வெட்டும் போராட்டம் நடத்தியது. திராவிடர் கழகமோ சட்டத்தை ஆதரித்து காவடி எடுத்தது.
பத்திரிகை பேட்டி
பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, சிவனடியார் ஆறுமுகச் சாமி மற்றும் அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன். (கோப்புப் படம்)
2006 -ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அவசர சட்டம் கொண்டுவந்தார். உடனே கருணாநிதிக்கு தஞ்சையில் பாராட்டு விழா நடத்தினார் வீரமணி. பார்ப்பனரல்லாத அர்ச்சகர் கருவறையில் பூசை செய்வது போலவும், பார்ப்பனர்கள் வெளியே நின்று சாமி கும்பிடுவது போலவும் சிலை செய்து கருணாநிதிக்கு பரிசளித்தார். கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்திய சாதனைக்காக வீரமணியைப் பாராட்டி சென்னையில் ஒரு ஆடம்பர விருந்து வைத்தார்கள் அவரது தொண்டர்கள். விருந்து செரிப்பதற்குள் அந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விட்டார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள்.
இதன் விளைவாக 2007-08 இல் அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி முடித்த 206 மாணவர்கள் தெருவில் நின்று கொண்டிருந்தார்கள். கட்சித்தலைவர்கள் மனது வைத்தால் நடந்து விடும் என்று நம்பிய அந்த அப்பாவி மாணவர்கள் எல்லா தலைவர்களையும் பார்ப்பதற்கு நடையாய் நடந்து கால் தேய்ந்தார்கள். தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் முதல் கருப்புச் சட்டை ஆதீனம் வரை அனைவரையும் பலமுறை பார்த்தார்கள். “வழக்கு இருப்பதால் எதுவும் செய்யமுடியாது” என்பதுதான் மாணவர்களுக்கு கிடைத்த பதில்.
இம்மாணவர்களை, தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று சந்தித்து, அவர்களை சங்கமாகத் திரட்டினார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த எமது வழக்குரைஞர்கள். உச்ச நீதிமன்ற வழக்கில் மாணவர்களையும் ஒரு தரப்பாக சேர்த்தார்கள். மாணவர்களை வைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நாளேடுகள், வார இதழ்கள், ஆங்கிலப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் மன்றத்தில் இப்பிரச்சினையை பிரபலப் படுத்தினார்கள். படித்து முடித்து தீட்சையும் பெற்று விட்ட இம்மாணவர்களுக்கு சான்றிதழைக் கூட திமுக அரசு வழங்கவில்லை. அதனைப் போராடிப் பெற்றுத் தந்தார்கள். தமிழகம் முழுவதும் பல நகரங்களில் அர்ச்சக மாணவர் சங்கமும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் இணைந்து உண்ணாநிலைப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கும் மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர்களை எதிர்த்தும், வழக்கை விரைந்து நடத்த முயற்சிக்காத தமிழக அரசைக் கண்டித்தும் மதுரை மீனாட்சி கோயிலை முற்றுகையிடும் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.
வழக்கறிஞர் ராஜு
உண்ணாவிரதத்தில் உரையாற்றும் தோழர் ராஜு (கோப்புப் படம்).
செப், 2010 பெரியார் பிறந்தநாளன்று, திருவண்ணாமலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள் அர்ச்சக மாணவர்கள். அந்தப் புகைப்படம் ஊடகங்களில் பிரபலமாகவே, ஆத்திரம் கொண்ட இந்து முன்னணிக் காலிகளால் தாக்கப்பட்டார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன். “திருவண்ணாமலைக் கோயிலில் பிரசாத லட்டு பிடிப்பதற்குக் கூட பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்” என்று திமுக ஆட்சியில் அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்தது. உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவுடன் அதனை அரசு திரும்பப் பெற்றது.
2009 முதல் இன்றுவரை உச்ச நீதிமன்ற வழக்குக்காக சுமார் 15 முறையாவது டெல்லிக்கு அலைந்திருக்கிறார்கள் எமது வழக்குரைஞர்கள். பார்ப்பன அர்ச்சகர்கள் மூத்த வழக்குரைஞர் பராசரனை அமர்த்தியிருப்பதால், அதனை எதிர்கொள்ளும் பொருட்டு நமது தரப்புக்கு காலின் கன்சால்வேஸ், அந்தி அர்ஜுனா போன்ற மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தியிருக்கிறார்கள். வழக்கு தொடர்பாக இதுவரை ஆகியிருக்கும் செலவை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மட்டுமின்றி ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு போன்ற எமது அமைப்புகள் திரட்டித் தந்திருக்கிறார்கள்.
தற்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகத் தீர்வுக்கு வரவிருப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் 6 மாத அவகாசம் பெற்றது தமிழக அரசு. “இது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சி; ஆகம விதிப்படி அமையாத சிறு கோயில்களில் சூத்திர அர்ச்சகர்களுக்கு வேலை போட்டுக் கொடுத்து வாயை அடைத்துவிட்டு, பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்வதற்கான சூழ்ச்சி” என்று அம்பலப்படுத்தி ஜனவரி 2013-ல் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகுதான், “ஆறுமாதம் தவணை வாங்கி அரசு செய்தது என்ன” என்று அறிக்கை விட்டார் கருணாநிதி.
பெரியாரின் மறைவுக்குப் பின், கடந்த 40 ஆண்டுகளில் இந்தக் கோரிக்கைக்காக வீரமணி உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதை தி.க வின் வெளியீட்டைப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும். கல்வி வியாபாரம் செய்து கல்லா கட்டுவதும், பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மேலும் பெருக்குவதும்தான் வீரமணி நடத்திவரும் தொழில் சாம்ராச்சியத்தின் இலட்சியம். பெரியாரின் சொத்துககு மட்டுமின்றி, அவரது எழுத்துக்கும் வாரிசுரிமை கோரியவரல்லவா வீரமணி! அர்ச்சக மாணவர்களுக்காக மற்றவர்கள் போராடினாலும், பெரியார் எழுப்பிய கோரிக்கை என்பதால், வாரிசுரிமை என்ற அடிப்படையில் அதற்குரிய பெருமை தனக்கே சேரவேண்டும் என்றுகூட அவர் எண்ணக்கூடும்!இவையெல்லாம் இந்தப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள் எமது தோழர்கள்தான் என்பதற்கான ஆதாரங்கள். ஆனால் ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டத்தையொட்டி தி.க போட்டிருக்கும் வெளியீட்டில் இவை பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடப்படவில்லை. உண்மையைச் சொன்னால் இந்த வழக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது. ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் என்பதே ஒரு நாடகம் என்பதனால்தான் இதில் கலந்து கொள்ள முடியாதென்று ம.உ.பா.மைய வழக்குரைஞர்களும் அர்ச்சக மாணவர் சங்கத் தலைவரும் தி.க வினரின் அழைப்பை பல ஊர்களில் நிராகரித்து விட்டார்கள்.
இதுவரை இக்கோரிக்கையில் அக்கறை செலுத்தாத வீரமணி தற்போது திடீரென்று களத்தில் குதித்திருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. “ஆலயத் தீண்டாமையை மத உரிமையாக அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா அல்லது அதனைக் குற்றம் என்று கூறப்போகிறதா” என்பதுதான் இவ்வழக்கின் மையமான கேள்வி. இதனைப் புறந்தள்ளிவிட்டு, மயிலை, திருவரங்கம், மதுரை போன்ற பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, ஏதேனுமொரு மாரியாத்தா கோயிலில் மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முயற்சிக்கிறது ஜெ அரசு. இந்த திட்டத்தை சுமுகமாக நிறைவேற்றித் தருவதுதான் வீரமணிக்கு வந்திருக்கும் திடீர் அக்கறையின் நோக்கமா?

அல்லது தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிவெறியை ராமதாசு தூண்டி வருகின்ற சூழலில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடாமல் திசைதிருப்புவதற்காக இந்த பார்ப்பன எதிர்ப்பா? “அரசியல் சட்டத்தை திருத்தினால்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும்” என்று கருணாநிதியும், “திருத்தாமலேயே ஆக முடியும் “என்று வீரமணியும் முரண்பட்டுப் பேசிக்கொண்டே ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறிக் கொள்கிறார்களே, அடிப்படையான இந்த வேறுபாட்டுக்கு என்ன விடை? இந்தப் போராட்டமென்பது தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவும், இக்கோரிக்கைக்காக உண்மையாகவே உழைத்தவர்களை இருட்டடிப்பு செய்வதற்காகவும் வீரமணி நடத்தும் நாடகம் என்பதில் ஐயமில்லை. இப்போது இதனை நடத்துவதற்கான நோக்கம் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.
பெரியாரின் தொண்டர்களே, சாதி மறுப்பாளர்களே, தமிழ் மக்களே, போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!
31.7.2013
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புடைய பதிவுகள்


Monday, July 15, 2013

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிடர் கழகம் போராட்டத்தில் திமுகவினரும் பங்கேற்பார்கள்

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிடர் கழகம் போராட்டத்தில் திமுகவினரும் பங்கேற்பார்கள்

1கருத்துகள்




சென்னை: 
அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் போராட்டங்களில் திமுகவினர் பங்கேற்பார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதிப் பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனை தொழ வேண்டும்; அனைவருக்கும் அர்ச்சகராகும் உரிமை வேண்டுமென்று கோரி 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் பெரியார் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். 
நான் பெரியாருக்கு ஒரு வேண்டுகோள் அறிக்கை கொடுத்தேன். அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும்; போற்றக்கூடிய புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும்; அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள், எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக ஆகலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. எனவே,  கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு  பெரியாரை கேட்டுக் கொண்டேன். உடனே போராட்டத்தைத் தள்ளி வைக்கச் சம்மதித்தார். 2-12-70ல் சட்டப் பேரவையில் அர்ச்சகர் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது. அர்ச்சகர் சட்டம் கண்டு, சமத்துவம் விரும்பாத சனாதனிகள் வெகுண்டார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 12 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 1972ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 


கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு. மனுதாரர்களால் தவறு என்று கூறப்படும் இந்தச் சட்டம் மத சம்பந்தமான நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிடவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொ ண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லுபடியானதே என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்த போதிலும், நடை முறையில் இனிமேல் செய்யக்கூடிய காரியம் என்ற வகையில் அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடை முறைக்கு வராத அளவுக்கு முடக்கப்பட்டது. அது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். எத்தனையோ முறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் மத்திய அமைச்சர்களிடத்தில் விவாதித்தும்கூட அந்த அரசியல் சட்டத் திருத்தப் பணி நடைபெறவே இல்லை. இது கண்டு கொதிப்ப டைந்த பெரியார் 1973ம் ஆண்டு டிசம்பர் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட் டில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், அந்தப் போராட்டத்தை நடத்தாமலேயே 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி பெரியார் மறைந்து விட்டார். 
சென்னை அண்ணா மேம்பாலத்திற்கருகே 1977ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி பெரியார் சிலை திறப்பு விழா அதிமுக சார்பாக நடைபெற்ற போது திராவிடர் கழகத்தின் சார்பில் அந்த விழாவில் கலந்து கொண்ட மணியம்மையார் அந்நாளைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் பேசும் போது, அர்ச்சகர் சட்டம் முடமாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். 



1978ம் ஆண்டு நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவில் சென்னை கடற்கரையில் நான் பேசும் போது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராமையும் அந்த மேடையில் வைத் துக் கொண்டு பேசும் போது,  பெரியார் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. அப்போது வேத விற்பன்னரும், தமிழ் அர்ச்சனைக்காக பல்லாண்டு காலம் போராடியவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர், இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற கருணாநிதி மந்திரிசபை எல்லா சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகலாம் என முடிவெடுத்து அறிவித்திருப்பது வேதவாக்கு.   ஆகமத்தைச் சொல்லி மற்ற சாதிக்காரர்களை பிராமணர்கள் கோவிலுக்குள் விடாமல் இருந்தார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் பிராமணனுக்கும், ஆகமத்துக்குமே முரண்பாடுதான். பிராமணன் தனக்கு எதிரான ஆகமத்தின் பெயரைச் சொல்லியே மற்ற சாதிக்காரர்களை உள்ளே விட மறுத்து வந்தான்.  பிராமணர் இதையே, தன் தொழிலாக்கிக் கொண்டதால், மற்ற யாரையும் உள்ளே விடவில்லை. 



ராம சாமி நாயக்கர் அந்தக் காலத்தில் என்னிடம் தாத்தாச்சாரியாரே எங்க கையால ஒரு பூவை எடுத்து உங்க சாமிக்குப் போடக்கூடாதாய்யா? என்று கேட்டார். அந்தப் பூவை இப்போது கருணாநிதி எடுத்துப் போட வைத்திருக்கிறார். இது வரவேற்க வேண்டிய ஒரு சீர்திருத்த விஷயம். இதை யாராவது ஆட்சேபி த்தால் அவர்கள் மக்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள்னு அர்த்தம். அவர்களுக்கு நாம் தான் நல்ல புத்தி சொல்லித் திருத்த வேண்டும் என்று பதிலளித்தார் பெரியார்.  திமுக ஆட்சியின் அரசாணை அடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 4  இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் சென்னை, திருவரங்கம் ஆகிய 2 இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி முடித்த நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் பிரச்னை உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. அதன் காரணமாக அவர்களுக்கு உடனடியாக திருக்கோவில்களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட இயலாமல் போயிற்று. அதற்குப் பின்னர் அதிமுக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது. 



உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அர்ச்சகர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர 6 மாத கால அவகாசத்தைக் கேட்டுப் பெற்றது. 6 மாத காலம் முடிந்த பிறகும், இந்தப் பிரச்னையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர், உச்சநீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கியும்கூட மாநில அரசு இதுவரை எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை. எனவே மாநில அரசின் நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை தற்போதுள்ள தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று எங்களுக்கு தெரிய வில்லை. இந்த நிலையில்தான் திராவிடர் கழகம் இதை  வற்புறுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் தேதி ஆர்ப்பாட்டம், மாநாடு, கருத்தரங்குகள் மற்றும்   3ம் கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளது. இந்த போராட்டங்களில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்று அந்தப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டும் வகை யில் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Friday, May 10, 2013

கருவறைத் தீண்டாமை - கீற்று


பிறப்பு, சாதி, இனம், குலம் போன்றவைகளின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனும் பாகுபடுத்தப்படக் கூடாது. குறிப்பாக பொது பணியிடங்களில் ஒரு குடிமகனுக்கு அவர் சார்ந்த சாதி மற்றும் குல ரீதியாக பாகுபாடு காட்டக்கூடாது என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் இந்திய அரசியல் சாசனம் தெளிவுபட கூறுகிறது.
இந்தியாவில், அதிகாரம் மிகுந்ததும், பிரதானமானதுமான குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளிலும், அதேபோல மாநில அளவில் ஆளுநர், முதன்மை அமைச்சர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பதவிகளிலும், பட்டியல் சாதியினரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் பொறுப்பு வகித்து விட்டார்கள். ஆனால், தந்தை பெரியார் தோன்றிய தமிழ்நாட்டில், மாநில அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36,000 இந்து கோயில்களில் அர்ச்சகராகவும், சில குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கும், பார்ப்பன‌ர் சாதியைச் சேர்ந்தவர்களைத் தவிர, இதர சாதியைச் சேர்ந்தவர்களால் நியமனம் பெற முடியாத சூழலே இன்றளவும் நிலவுகிறது.
கோயில் கட்டமைப்பு :
கோயில் என்னும் கட்டமைப்பு ஆதிகால சமூகத்தில் இல்லை. நிலமானிய முறையின் தோற்றத்திற்கும் குறுநில மன்னர்களின் ஆட்சிக்கும் பிறகே சிறிது சிறிதாக உருவாக்கப்பட்டது என்றே வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.பி.7ம் நூற்றாண்டு காலத்தின் போதுதான் தமிழ்நாட்டில் கோயில் என்பது சமூக நிறுவனமாக மாறத் தொடங்கியது. கி.பி.10ம் நூற்றாண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரமே கோயிலைச் சார்ந்து நிற்கும் நிலை உருவானது.
சோழர்களின் ஆட்சி காலத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண் நிலங்கள் உருவாக்கப்பட்டு, ஏராளமான நன்செய் நிலங்கள் உருவாயின. நிலத்தின் விளைச்சலின் காரணமாக அதனைச் சுற்றி குடியேற்றங்கள் தோன்றின. குடியேற்றங்கள் ஊராக உருமாறின. ஊரில் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கோயில் என்றால் (“கோ”- அரசன், “இல்”- இல்லம்) அரசனின் இல்லம் என்றும் ஒரு கருத்து உள்ளது. மேலும் சோழர்களின் ஆட்சி காலத்தில், மாறுபட்ட பூஜை முறைகள் தடை செய்யப்பட்டு, ஆதிக்க கட்டமைப்புடன் கூடிய, ஒரே வகையான ஆகம முறை பூஜைகள் கட்டாய படுத்தப்பட்டதோடு அவைகளை செய்வதற்காக பார்ப்பன‌ர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள் போன்ற பார்ப்பன‌ குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டதோடு, பிரத்தியேக உரிமையுடன் கூடிய நிலங்களும் பார்ப்பன‌ர்களுக்கு வழங்கப்பட்டது.
சங்க காலத்தில் களப்பிரர்கள் ஆட்சியில், அவர்கள் குறுநில மன்னர்களாக இருந்த போது அப்போதைய மொத்த தமிழக நிலபரப்பும் அவர்கள் வசம் இருந்தது. அவர்களின் ஆட்சி காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் நலிந்து போய், முழுக்க முழுக்க சமணர்களின் ஆட்சிதான் நடைபெற்றது. மேலும் அந்த ஆட்சியில் பார்ப்பன‌ர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அதன் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த சோழர்களின் ஆட்சி காலத்தில்தான் பார்ப்பன‌ர்களுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இருப்பினும் தேவாரம், திருமறைகளை தொகுத்து ஓத, 48 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கோயிலில் தமிழில் பாடல்கள் பாடிட பாட்டாலகன், அமுதன் காணி, வானராசி கூத்தன், சூற்றி எனும் நால்வர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். வடமொழியை விட, தமிழ் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
சோழர், பாண்டியர் ஆட்சியில் இம்முறைதான் நிலைநின்றது. அவர்களது வீழ்ச்சிக்குப்பிறகு கி.பி. 14ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பெறும் கோயில்கள் பல தமது செல்வாக்கை இழந்துபோயின. விஜய நகர பேரரசின் காலத்தில் மீண்டும் எழுந்தன. 1750களில் ஆங்கிலேய, நவாப் ஆட்சிகளில் அரசின் நேரடி ஆதரவை கோயில்கள் இழந்தன. இருப்பினும் பல்வேறு வழிகளில் தொடர்ந்து தனது இருப்பை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டே வந்தன.
கோயில் நுழைவு போராட்டம்:
பட்டியலின மக்கள் நுழைய கூடாது என தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, 1939ம் ஆண்டில் ஜுலை மாதம் 10ம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் நுழைந்ததை தொடர்ந்து, அங்கு பணிபுரிந்து வந்த பார்ப்பன‌ பணியாளர்கள் 1945ம் ஆண்டு வரையிலும் அந்த கோயிலுக்குள் நுழையவில்லை. இந்து என்று பொதுபடையாக அழைக்கப்பாடாலும், இப்படியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தமிழகத்தின் பெரிய பெரிய இந்து கோயில்களுக்குள் நுழைந்திட வெளிப்படையாக தடை நீடித்தே வந்தது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டம்,1959
இந்த சூழலில், சுதந்திரத்துக்கு பிறகு, தமிழகத்திலுள்ள பெரும் இந்து கோயில்களை நிர்வகிக்க வேண்டி, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டம், 1959ம் ஆண்டு இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் படி, தமிழ்நாட்டிலுள்ள பெரிய இந்து கோயில்களில், அர்ச்சகர் மற்றும் இதர சில பணிகள் வாரிசுரிமை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படும் என்று கூறியது. இதனைத் தொடர்ந்து கோயில்களில் ஏற்படும் காலி பணியிடங்களில், பார்ப்பன‌ர் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அந்த பணி நியமனங்களை அந்தந்த கோயிலின் அறங்காவலர் குழுவே பார்த்துக்கொள்ளும். இப்படியாக சட்ட ரீதியாக ஒரு பாகுபாடு தமிழ்நாட்டில் நீடித்து வந்தது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்:
இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து பொது கோயில்களில், அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க நீடிக்கும் தடையும், வாரிசுரிமை அடிப்படையிலான பணி நியமன முறையும், கோயில்களுக்குள் அரசே புரியும் தீண்டாமையாகும்; எனவே, அந்த சட்ட பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும், என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 1970ம் ஆண்டு தந்தை பெரியார், கோயில் நுழைவு போராட்டம் அறிவித்தார். உடனடியாக அப்போது தமிழகத்தில், ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசானது, எங்களது நோக்கமும் அதுவாகத்தான் இருக்கிறது என்று கூறியதோடு, விரைவில் அந்த கோரிக்கைகள் சட்டமாக்கப்படும் என்று அறிவிப்பும் செய்ததைத் தொடர்ந்து, தந்தை பெரியார் தனது போராட்டத்தை கைவிட்டார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்ட திருத்தம்:
அதனைத் தொடர்ந்து, 1971ம் ஆண்டு தி.மு.க. அரசாங்கம், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து பொது கோயில்களில் அதுநாள் வரையிலும் இருந்துவந்த, அர்ச்சகர் உள்ளிட்ட இதர பணிகளில் ஏற்படும் காலி பணியிடங்களில், வாரிசுரிமையின் அடிப்படையிலான பணி நியமனத்தை ரத்து செய்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையிலான சட்ட திருத்தத்தை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டத்தில் கொண்டு வந்தது. இப்படியாக கோயில்களில் அர்ச்சகர் உள்ளிட்ட பணியிடங்கள், வாரிசுரிமை அடிப்படையில் நியமிக்கப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:
இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக, “ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில், குறிப்பிட்ட சைவ, வைணவ பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினரை அர்ச்சகராக்க முடியாது என்றும் பிற சாதியினர் சிலையைத் தொட்டால் சாமி தீட்டுபட்டு தனது சக்தியை இழந்து விடும் என்பது ஆகம விதி. எனவே, இந்து மத நம்பிக்கையில் தலையிட அரசுக்கு உரிமை கிடையாது” என்பதால் தமிழக அரசின் இந்த சட்டமானது செல்லாது என்று அறிவிக்க கோரி, 10 பார்ப்பன‌ர்களும், 2 மடாதிபதிகளும் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில், 14.03.1972 அன்று, 5 நீதிபதிகள் அடங்கிய குழுமம், “கோயில் பணியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்கும் உரிமை அரசுக்கு உண்டு அதில் எவரும் வாரிசுரிமை கோர முடியாது” என்று தீர்ப்பிட்டது. ஆனால் அந்த தீர்ப்பில், “கோயிலின் மரபு, பழக்கவழக்கத்திற்கு மாறாக, குறிப்பிட்ட இனத்தைச் சேராத ஒருவர் சாமி சிலையைத் தொட்டால் அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் எனும் ஆகம விதியைக் கருத்தில்கொண்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்” என்று, பார்ப்பனர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக தனது கருத்தைப் பதிவுசெய்தது. இத்தீர்ப்பின் காரணமாக முன்பிருந்த நிலையே மீண்டும் தொடர்ந்தது.
நீதியரசர் மகாராசன் குழு:
இதனைத் தொடர்ந்து, அத்தீர்ப்பினை ஆராய்ந்து அதனை நடைமுறைபடுத்திட, அந்த ஆண்டே, நீதியரசர் மகாராசன் தலைமையிலான ஒரு குழுவினை தமிழக அரசு நியமித்தது. அக்குழுவானது, தமிழகத்தின் பல்வேறு கோயில்களை பார்வையிட்டு, பத்து ஆண்டுகள் விரிவாக ஆய்வு செய்து 1982ம் ஆண்டு தனது அறிக்கையை சமர்பித்தது. அதில், பல கோயில்களில் ஆகம விதிகளுக்குப் புறம்பாக நிகழ்த்தப்படும் பல்வேறு செயல்களை பட்டியலிட்டதுடன், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில், அர்ச்சகர் பயிற்சி பள்ளியை நிறுவிடவும், பணி நியமனங்களில் பழக்க வழக்கங்களை ஒழித்திடவும் பரிந்துரைத்தது. 
ஆதித்யன் வழக்கு:
கேரள மாநிலத்தைச் சேர்ந்த, ஆதித்யன் என்பவர் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், 2002ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், “பழக்க வழக்கத்தின்படி பார்ப்பன‌ர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்பதை ஏற்கமுடியாது” என்று தீர்ப்பிட்டது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்ட திருத்தம்:
16.07.2006 அன்று தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டத்தின் பிரிவு 55ல், “மத நிறுவனங்களில், கடைசியாக பணியிலிருந்தவரின் வாரிசுதாரர் அல்லது பழக்க வழக்கம், மரபு என்பதுபோன்ற காரணத்தின் அடிப்படையில், எவரொருவரும் பணி நியமனம் செய்யப்பட மாட்டார்” என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக, மதுரையைச் சேர்ந்த, ஆதி சைவ சிவாச்சாரியர்கள் நல சங்கம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 14.08.2006 அன்று தடையாணை பெற்றுவிட்டது. இந்நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு, அந்த சங்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பும் இணைந்து இந்த தடையாணையை ரத்து செய்திடவும், அது தொடர்பான பணிகளையும் முன்னெடுத்து வருகின்றன. இருப்பினும், தற்போது வரையிலும் அந்த தடையாணை நீடித்து வருகிறது.  
இதற்கிடையில், 23.05.2006 அன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில், தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டு, நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினை நியமித்தது. அக்குழுவானது, அர்ச்சகர் பயிற்சி, மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வடிவமைத்தது. இதனை தொடர்ந்து, பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படிருந்த பயிற்சி மையங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த, 34 பட்டியல் சாதியினரும், 76 பிற்படுத்தப்பட்ட மற்றும் 55 மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் உட்பட 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகாலம் படித்து அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழும் பெற்றுள்ளார்கள். ஆனபோதிலும் மேலே கண்ட உச்சநீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக இவர்களில் எவரும் பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, அடிப்படை உரிமைகளாக உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளவைகளுக்கு முரணாக பின்பற்றப்படும் பழக்க வழக்கம், மரபுகள் போன்ற எவையும் செல்லதக்கதல்ல. எனவே, உச்சநீதிமன்றமானது, விரைவில் தன்முன் விசாரணைக்கு வரவுள்ள இவ்வழக்கில், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்கி, அனைத்து சாதியிலுள்ள இந்துக்களும் அர்ச்சகர் ஆவதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதோடு, தமிழகத்தில் தொடரும் மத ரீதியான தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்து தரப்பினர்களது விருப்பமாகவும் இருக்கமுடியும். தமிழகத்தில் சமநீதியை நிலைபெறச் செய்திட உச்சநீதிமன்றம் வழிவகுக்குமா என்பது இந்த வழக்கில் வழங்கவிருக்கும் தீர்ப்பின் வாயிலாகவே தெரியவரும்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23802

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்                                                                                            செவ்வாய், 07 மே 2013 10:50

Saturday, May 4, 2013

It’s an uphill task to be a priest


It was once a place where Sanskrit ‘slokas’ and verses from Panniru Thirumurai (a 12-volume compendium of hymns in praise of Lord Shiva) were recited. Today, the walls of the two-storey building at Dhanappa Mudali Street here reverberate with the noise of kitchen vessels and the loud snores of contract labourers engaged for civil works at the Meenakshi Sundareswarar Temple.

The building, which previously housed one of the six institutes established across the State by the Hindu Religious and Charitable Endowments (HR and CE) Department in 2007 to train Hindu youth, irrespective of their caste, to become priests, is currently used as accommodation for construction labourers. The six institutes have become defunct after the first batch passed out in 2008.

Madurai-based Adi Saiva Sivachariyargal Sangam, an association of Saivite priests, had filed a case in the Supreme Court challenging the move to open the priesthood to all castes. The result was that the 206 youngsters, part of the first batch of students trained at the government-run institutes, have been left in the lurch without employment opportunities in view of the case pending in the apex court.

T. Marichamy, 29, gave up his job as a studio photographer and joined the training course in 2007, in the hope of becoming a priest in a popular temple. The son of a mason, he studied up to Standard XII before taking up photography as a profession. His interest in performing religious rituals had made him join the priest training institute.

Catch-22 situation

“However, belying all expectations, I am working as a priest at Veera Kaliamman Kovil, a small private temple at Gandhipuram near K. Pudur and eking out a living by attending private religious functions. After having learnt religious scriptures and getting used to the way of life of a priest, I cannot go back to my old profession as a photographer. I am now in a catch-22 situation,” he complained.

The predicament of P. Thiyagarajan (25) of Arapalayam is no different. The son of a retired government servant, he enrolled at the institute and now works for a private temple on Bypass Road. He also performs house warming ceremonies.

These two and many of their counterparts came together in 2009 to form the Tamil Nadu Government Trained Archakars Association (TNGTAA) and impleaded themselves as a defending party in the ongoing court case. “But the case is only getting prolonged owing to frequent adjournments. The issue can be resolved only if the government intervenes and takes proactive steps,” said V. Ranganathan, president of TNGTAA.

A cruel tag

S. Vanchinathan of Human Rights Protection Centre- Tamil Nadu, a non-governmental organisation that has assisted the prospective priests to fight the case, said: “Caste is not something a person chooses by himself. It is a cruel tag that is thrust upon him for having been born to a particular family.

It is a shame to discriminate people on the basis of caste. In a country where the Constitution is higher than any individual or institution, it is unacceptable to state that a person belonging to any caste, who can hold high offices such as that of the President and Prime Minister, cannot become a priest. Priesthood cannot be the fiefdom of a particular denomination. It must be thrown open to all trained individuals irrespective of their caste.”

Gender bias

Madras High Court advocate K.R. Laxman pointed out that apart from caste, there was also gender discrimination in some of the temples. A case in point is that of A. Pinniyakkal, a 50-year-old woman of Nalluthevanpatti in Usilampatti taluk. She was unable to enjoy her right to priesthood in the local Durgai Amman temple owing to deep-rooted gender bias against the woman in her village.

It all began in 2004 when her father P. Pinnathevar, a priest-cum-oracle of the village temple, fell sick at the age of 74. Bedridden, he handed the ‘kurungol’ (a holy yellow cloth) to his daughter in a symbolic act of anointing her as the next priest-cum-oracle. The villagers had no objection when she donned the role of the temple priest. The trouble began after her father’s death on November 12, 2006.

A vicious campaign was started in the village to oppose a woman being made a temple priest. It was projected as a bad omen. The campaign gained momentum and soon people from about 18 villages, all devotees of the temple, joined the protest against Ms. Pinniyakkal.

She filed a civil suit before a munsif court in Usilampatti. But the villagers prevented her entry into the temple. Apprehending a law and order problem, the then tahsildar invited the conflicting parties to a peace committee meeting on September 14, 2007.

At the meeting, about 90 per cent of the participants expressed their reservations over a woman becoming a temple priest.

Therefore, the tahsildar passed an order authorising a male villager to be the priest pending the outcome of the civil suit. Disagreeing with the decision, Ms. Pinniyakkal walked out of the meeting and filed a writ petition in the High Court Bench challenging the tahsildar’s order.

Allowing the writ petition on September 1, 2008, the High Court came down heavily on the tahsildar for having buckled to the majority of villagers at the cost of petitioner’s rights.

“The altars of God must be freed from gender bias,” the court said and passed orders directing the petitioner to be made the priest of the temple until the disposal of the civil suit before the lower court.
It also directed the Collector to provide police protection to the woman. The judgement was challenged on appeal but was confirmed by a Division Bench. Despite the court orders, the woman could perform the rituals at the temple only on two occasions, with police protection.

In view of the unrest brewing among the villagers, the officials locked the temple and asked Pinniyakkal to wait for the civil court to deliver its verdict. On December 21, 2010, the munsif court ruled in her favour. But that made no difference to her status as the case is pending before a sub-court.

“No matter how long it takes, I have full faith in my ‘Aaththa’ (goddess Durgai Amman). She will never let me down. Some day, I will enter the portals of the temple as its priest,” Ms. Pinniyakkal said.

A vicious campaign was started in the village to oppose a woman being made a temple priest. It was projected as a bad omen. The campaign gained momentum and soon people from about 18 villages joined the protest against Pinniyakkal

MADURAI, May 1, 2013 

Thursday, May 2, 2013

அர்ச்சகர் பணி பார்ப்பனருக்கு மட்டும் உரியதல்ல!

ஜெயலலிதாவுடைய ஆட்சி அவாளுடைய ஆட்சி என்பதால் சுமுக தீர்வு என்ற பெயரால் கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வேலை வாய்ப்பு என்ற அடிப்படையிலே தீர்வுகாண ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.



அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் ! கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் !
உச்சநீதிமன்றத்தில் மதுரை சிவாச்சாரியார்களுடன் சுமுகத் தீர்வு காண முயற்சிக்கும் பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்போம்
கண்டன ஆர்ப்பாட்டம்
துரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக 22.04.2013 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரெங்கநாதன் தலைமையேற்றார்.
மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு.மு.திருநாவுக்கரசு, ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன், விவசாயிகள் விடுதலை முன்னணி உசிலை வட்டாரச் செயலாளர் தோழர் ந.குருசாமி, ம.உ.பா.மையத்தின் மதுரைக் கிளைத் துணைச் செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு.சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர் திரு.அறவாழி, ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் திரு.ம.லயனல் அந்தோணிராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அர்ச்சக மாணவர்கள் அர்ச்சகர் தோற்றத்திலேயே கலந்து கொண்டதோடு வேத மந்திரங்கள், தேவார திருவாசகங்களை தமிழிலும், சமஸ்கிருதத் திலும் துல்லியமாக ஓதி தாங்கள் பார்ப்பனர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை திரளான பொதுமக்களுக்கு உணர்த்திக் காட்டினர்.
முதலில் பேசிய வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் பெரியார் நெஞ்சில் தைத்த இந்த முள்ளை இதுவரை யாரும் அகற்ற முன்வரவில்லை. மனித உரிமை பாதுகாப்பு மையம் அர்ச்சக மாணவர்களை ஒன்றுதிரட்டி சங்கம் அமைத்து இன்று உச்ச நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது. இது எங்களுடைய (இந்து) மத உரிமையை பாதிப்பதாகும் என்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டர்களாகிய ஆதி சிவாச்சாரியார்கள் நலச் சங்கத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். சட்டம் இயற்றி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளையும் திறந்து 206 மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்து அவர்கள் தீட்சையும் பெற்றுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திலுள்ள தடையை நீக்குவதற்கு தி.மு.க.அரசு முயற்சி செய்யவில்லை. அர்ச்சக மாணவர்களுக்கு வேலை தரவும் முடியாது என்று மறுத்து விட்டது. 2008ம் ஆண்டு பயிற்சி முடித்த மாணவர்கள் இன்று வரை வேலை இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அர்ச்சக மாணவர்களை உச்சநீதிமன்ற வழக்கில் ஒருதரப்பினராகச் சேர்த்து நாங்கள் போராடி வருகின்றோம். இப்போது ஜெயலலிதா அரசு இந்த வழக்கில் மதுரை சிவாச்சாரியார்களுடன் சுமுக தீர்வு ஏற்படுத்திக் கொள்வதாக உச்சநீதிமன்றத்திலே அறிவித்திருக்கிறது. அது எந்த வகையான சுமுக தீர்வு என்று சொல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள அர்ச்சக மாணவர் தரப்பினை கேட்காமல் எவ்வாறு சுமுக தீர்வு எட்ட முடியும். சுமுக தீர்வு என்ற பெயராலே அர்ச்சக மாணவர்களை ஒதுக்குப்புறமாக உள்ள கோவில்களில் குறைந்த சம்பளத்திற்கு நியமிக்கும் மோசடித் திட்டம் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்கள் எவ்வாறு உடன் பட முடியும். அர்ச்சக மாணவர்களுக்கு வேலை வழங்கவில்லையென்றால் மீனாட்சி கோவில் கருவறைக்குள் நுழைந்து மீனாட்சியிடமே கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசினார்.
மதுரை வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி பேசும்போது அர்ச்சகர் ஆக நியமிக்கப்பட்டுள்ள ஒருவர் அவருடைய வேலையை தனது உறவினர்கள் மூலம் செய்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது. அவரை கருவறைக்குள் அனுமதித்தது யார்? பார்ப்பன பட்டர்கள் அனைவருமே தீயவர்களாக உள்ளனர். அதனால் தான் இந்த நாடு சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். அதுவரை மாணவர்களோடும், ம.உ.பா.மையத்தோடும் இணைந்து வழக்கறிஞர் சங்கம் போராடும் என்று கூறினார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் திரு.மு.திருநாவுக்கரசு பிறப்பால் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கி வைப்பது சட்டத்துக்கு புறம்பானது. தேவநாதனும், சங்கராச்சாரியும் தொட்டால் தீட்டுப்படாத சாமி அரசு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் தொட்டால் மட்டும் தீட்டாகி விடுமா என்று கேள்வி எழுப்பினார்.
ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன், உச்சநீதிமன்றத்தில் வழக்கை நடத்தாமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்ற அரசுகள் வழக்கை விரைந்து நடத்தி முடித்து பணிநியமனம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உசிலை வட்ட வி.வி.மு. செயலர் தோழர் குருசாமி பேசும் போது தந்தை பெரியார் தொடங்கிய இந்தப் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். உச்சநீதிமன்றத்திலே மீனாட்சி கோவில் பட்டர்கள் வழக்கு தொடுத்த போது அதில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் பார்ப்பன பட்டர்களை திருப்திப் படுத்துகின்ற வகையிலும், சட்டம் இயற்றிய அரசை திருப்திப் படுத்துகின்ற வகையிலும் தீர்ப்பு வழங்கியது. இதைத் தான் ஆப்பரேசன் வெற்றி, நோயாளி மரணம் என்று பெரியார் குறிப்பிட்டார். நாங்கள் அர்ச்சக மாணவர்களை கைவிடமாட்டோம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இந்த தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று கூறினார்.
அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் ரெங்கநாதன், திக்குத் தெரியாத காட்டில் நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு திகைத்து நின்ற வேலையிலே மனித உரிமை பாதுகாப்பு மையம் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திரு.ராஜூ எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார். சிதறிக் கிடந்த எங்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி பல்வேறு போராட்டங்களின் வாயிலாக எங்களுடைய பிரச்சினையை மக்களின் கவனத்திற்கு கொண்டு போய் இன்றைக்கு அது எல்லோராலும் அறியப்பட்ட ஒரு பிரச்சனையாக மாறியிருக்கிறது. ஒன்றுபட்டு போராடி ம.உ.பா.மையத்தோடு இணைந்து நாங்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இழிவை அகற்றுவதோடு மாத்திரமல்லாமல் பணி நியமனமும் பெறுவோம் என்று கூறினார்.
இறுதியாக உரையாற்றிய ம.உ.பா.மையத்தின் மாவட்டச் செயலாளர் திரு.ம.லயனல் அந்தோணிராஜ், மீனாட்சி கோவில் ஆதி சிவாச்சாரியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தப் பார்ப்பன பட்டர்கள் கோவிலுக்குள்ளே பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நுழையக் கூடாது என்று சொல்லி மீனாட்சிக்கு அர்ச்சனை செய்ய மறுத்து அம்போ என்று விட்டு விட்டு ஓடிவிட்டவர்கள் தான். மேலும் வெள்ளைப் பரங்கியர்களுடைய ஆட்சி போனது எண்ணி வருந்தி எங்களுடைய ஆட்சியும் பறிபோய் விட்டது என்று கூறியவர்கள் தான் இந்தப் பார்ப்பனப்பட்டர்கள். இன்றைக்கும் பார்ப்பனர்கள் தங்களுடைய வாரிசுகளை மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பி தாய்நாட்டின் நலனுக்கெதிராக அந்நியர்களுக்கு சேவகம் செய்து சுகபோக வாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான். ஒவ்வொருவரும் தங்களுடைய விருப்பப்படி ஒரு தொழிலையோ அல்லது பணியையோ தேர்ந்தெடுத்துக் கொள்வதைப்போல அர்ச்சக மாணவர்களும் இறைவனுக்கு திருத்தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆவலோடு தான் இந்தப் பயிற்சிக்கு வந்தார்கள். பல இன்னல்களுக்கு மத்தியிலே படித்து முடித்தார்கள். ஆனால் அரசு ஊழியர்களாக சம்பளம் பெற்றுக் கொண்டு அர்ச்சகர் பணி செய்யும் சிவாச்சாரியார்கள் அரசை எதிர்த்து சாதியின் பெயராலே, ஆகமத்தின் பெயராலே கருவறைக்குள்ளே தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள். அதை இந்த அரசு அனுமதிக்கிறது. அரசியல் சட்டம் தீண்டாமையை குற்றம் என்று வரையறுக்கிறது. ஆனால் பார்ப்பனர்கள் இந்துக்களின் உரிமை என்கிறார்கள். அப்படியானால் அரசியல் சட்டம் பெரிதா, ஆகம விதிகள் பெரிதா? என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். ஆனால் பெரிய கோவில்களிலே அர்ச்சகர்களாக இருக்கும் பார்ப்பனர்களிடம் தான் இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளும், அதிகார வர்க்கத்தினரும், அரசியல் தலைவர்களும், முதலாளிகளும் போய் பவ்வியமாக நின்று பிரசாதம் வாங்குகிறார்கள். இவர்கள் எப்படி பார்ப்பனப்பட்டர்களுக்கு எதிராக இருப்பார்கள்.
அரசை நம்பி படித்து முடித்து பட்டம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்பும் வேலை தரப்படாமல் அனாதைகளாக அர்ச்சக மாணவர்கள் விடப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதாவுடைய ஆட்சி அவாளுடைய ஆட்சி என்பதால் சுமுக தீர்வு என்ற பெயரால் கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வேலை வாய்ப்பு என்ற அடிப்படையிலே தீர்வுகாண ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
மாணவர்களுடைய ஒத்துழைப்போடு சட்ட ரீதியாகவும் நடைமுறையிலும் இதனை நாங்கள் முறியடிப்போம். சூத்திரப் பஞ்சம சாதிகளின் மீதான இந்த இழிவை துடைத்தெறிவோம். அர்ச்சகர் மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்காவிட்டால் மீனாட்சி கோவில் கருவறைக்குள் நுழைந்து உரிமையை நிலைநாட்டியே தீர்வோம் என்றார்.
பழனி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் காட்டு ராஜா சமஸ்கிருத ஸ்லோகங்களையும், தமிழ்ப்பதிகங்களையும் இறுதியில் பாடினார். கூடியிருந்த மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நின்று கவனித்து கேட்டு பாராட்டிச் சென்றனர்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் நன்றி சொல்ல ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது. ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்களும், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறுதி வரை நின்று சிறப்பித்தனர்.






















மனித உரிமை பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை