பிறப்பு, சாதி, இனம், குலம் போன்றவைகளின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனும் பாகுபடுத்தப்படக் கூடாது. குறிப்பாக பொது பணியிடங்களில் ஒரு குடிமகனுக்கு அவர் சார்ந்த சாதி மற்றும் குல ரீதியாக பாகுபாடு காட்டக்கூடாது என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் இந்திய அரசியல் சாசனம் தெளிவுபட கூறுகிறது.
இந்தியாவில், அதிகாரம் மிகுந்ததும், பிரதானமானதுமான குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளிலும், அதேபோல மாநில அளவில் ஆளுநர், முதன்மை அமைச்சர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பதவிகளிலும், பட்டியல் சாதியினரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் பொறுப்பு வகித்து விட்டார்கள். ஆனால், தந்தை பெரியார் தோன்றிய தமிழ்நாட்டில், மாநில அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36,000 இந்து கோயில்களில் அர்ச்சகராகவும், சில குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கும், பார்ப்பனர் சாதியைச் சேர்ந்தவர்களைத் தவிர, இதர சாதியைச் சேர்ந்தவர்களால் நியமனம் பெற முடியாத சூழலே இன்றளவும் நிலவுகிறது.
கோயில் கட்டமைப்பு :
கோயில் என்னும் கட்டமைப்பு ஆதிகால சமூகத்தில் இல்லை. நிலமானிய முறையின் தோற்றத்திற்கும் குறுநில மன்னர்களின் ஆட்சிக்கும் பிறகே சிறிது சிறிதாக உருவாக்கப்பட்டது என்றே வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.பி.7ம் நூற்றாண்டு காலத்தின் போதுதான் தமிழ்நாட்டில் கோயில் என்பது சமூக நிறுவனமாக மாறத் தொடங்கியது. கி.பி.10ம் நூற்றாண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரமே கோயிலைச் சார்ந்து நிற்கும் நிலை உருவானது.
சோழர்களின் ஆட்சி காலத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண் நிலங்கள் உருவாக்கப்பட்டு, ஏராளமான நன்செய் நிலங்கள் உருவாயின. நிலத்தின் விளைச்சலின் காரணமாக அதனைச் சுற்றி குடியேற்றங்கள் தோன்றின. குடியேற்றங்கள் ஊராக உருமாறின. ஊரில் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கோயில் என்றால் (“கோ”- அரசன், “இல்”- இல்லம்) அரசனின் இல்லம் என்றும் ஒரு கருத்து உள்ளது. மேலும் சோழர்களின் ஆட்சி காலத்தில், மாறுபட்ட பூஜை முறைகள் தடை செய்யப்பட்டு, ஆதிக்க கட்டமைப்புடன் கூடிய, ஒரே வகையான ஆகம முறை பூஜைகள் கட்டாய படுத்தப்பட்டதோடு அவைகளை செய்வதற்காக பார்ப்பனர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள் போன்ற பார்ப்பன குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டதோடு, பிரத்தியேக உரிமையுடன் கூடிய நிலங்களும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது.
சங்க காலத்தில் களப்பிரர்கள் ஆட்சியில், அவர்கள் குறுநில மன்னர்களாக இருந்த போது அப்போதைய மொத்த தமிழக நிலபரப்பும் அவர்கள் வசம் இருந்தது. அவர்களின் ஆட்சி காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் நலிந்து போய், முழுக்க முழுக்க சமணர்களின் ஆட்சிதான் நடைபெற்றது. மேலும் அந்த ஆட்சியில் பார்ப்பனர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அதன் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த சோழர்களின் ஆட்சி காலத்தில்தான் பார்ப்பனர்களுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இருப்பினும் தேவாரம், திருமறைகளை தொகுத்து ஓத, 48 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கோயிலில் தமிழில் பாடல்கள் பாடிட பாட்டாலகன், அமுதன் காணி, வானராசி கூத்தன், சூற்றி எனும் நால்வர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். வடமொழியை விட, தமிழ் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
சோழர், பாண்டியர் ஆட்சியில் இம்முறைதான் நிலைநின்றது. அவர்களது வீழ்ச்சிக்குப்பிறகு கி.பி. 14ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பெறும் கோயில்கள் பல தமது செல்வாக்கை இழந்துபோயின. விஜய நகர பேரரசின் காலத்தில் மீண்டும் எழுந்தன. 1750களில் ஆங்கிலேய, நவாப் ஆட்சிகளில் அரசின் நேரடி ஆதரவை கோயில்கள் இழந்தன. இருப்பினும் பல்வேறு வழிகளில் தொடர்ந்து தனது இருப்பை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டே வந்தன.
கோயில் நுழைவு போராட்டம்:
பட்டியலின மக்கள் நுழைய கூடாது என தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, 1939ம் ஆண்டில் ஜுலை மாதம் 10ம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் நுழைந்ததை தொடர்ந்து, அங்கு பணிபுரிந்து வந்த பார்ப்பன பணியாளர்கள் 1945ம் ஆண்டு வரையிலும் அந்த கோயிலுக்குள் நுழையவில்லை. இந்து என்று பொதுபடையாக அழைக்கப்பாடாலும், இப்படியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தமிழகத்தின் பெரிய பெரிய இந்து கோயில்களுக்குள் நுழைந்திட வெளிப்படையாக தடை நீடித்தே வந்தது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டம்,1959
இந்த சூழலில், சுதந்திரத்துக்கு பிறகு, தமிழகத்திலுள்ள பெரும் இந்து கோயில்களை நிர்வகிக்க வேண்டி, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டம், 1959ம் ஆண்டு இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் படி, தமிழ்நாட்டிலுள்ள பெரிய இந்து கோயில்களில், அர்ச்சகர் மற்றும் இதர சில பணிகள் வாரிசுரிமை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படும் என்று கூறியது. இதனைத் தொடர்ந்து கோயில்களில் ஏற்படும் காலி பணியிடங்களில், பார்ப்பனர் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அந்த பணி நியமனங்களை அந்தந்த கோயிலின் அறங்காவலர் குழுவே பார்த்துக்கொள்ளும். இப்படியாக சட்ட ரீதியாக ஒரு பாகுபாடு தமிழ்நாட்டில் நீடித்து வந்தது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்:
இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து பொது கோயில்களில், அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க நீடிக்கும் தடையும், வாரிசுரிமை அடிப்படையிலான பணி நியமன முறையும், கோயில்களுக்குள் அரசே புரியும் தீண்டாமையாகும்; எனவே, அந்த சட்ட பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும், என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 1970ம் ஆண்டு தந்தை பெரியார், கோயில் நுழைவு போராட்டம் அறிவித்தார். உடனடியாக அப்போது தமிழகத்தில், ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசானது, எங்களது நோக்கமும் அதுவாகத்தான் இருக்கிறது என்று கூறியதோடு, விரைவில் அந்த கோரிக்கைகள் சட்டமாக்கப்படும் என்று அறிவிப்பும் செய்ததைத் தொடர்ந்து, தந்தை பெரியார் தனது போராட்டத்தை கைவிட்டார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்ட திருத்தம்:
அதனைத் தொடர்ந்து, 1971ம் ஆண்டு தி.மு.க. அரசாங்கம், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து பொது கோயில்களில் அதுநாள் வரையிலும் இருந்துவந்த, அர்ச்சகர் உள்ளிட்ட இதர பணிகளில் ஏற்படும் காலி பணியிடங்களில், வாரிசுரிமையின் அடிப்படையிலான பணி நியமனத்தை ரத்து செய்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையிலான சட்ட திருத்தத்தை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டத்தில் கொண்டு வந்தது. இப்படியாக கோயில்களில் அர்ச்சகர் உள்ளிட்ட பணியிடங்கள், வாரிசுரிமை அடிப்படையில் நியமிக்கப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:
இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக, “ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில், குறிப்பிட்ட சைவ, வைணவ பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினரை அர்ச்சகராக்க முடியாது என்றும் பிற சாதியினர் சிலையைத் தொட்டால் சாமி தீட்டுபட்டு தனது சக்தியை இழந்து விடும் என்பது ஆகம விதி. எனவே, இந்து மத நம்பிக்கையில் தலையிட அரசுக்கு உரிமை கிடையாது” என்பதால் தமிழக அரசின் இந்த சட்டமானது செல்லாது என்று அறிவிக்க கோரி, 10 பார்ப்பனர்களும், 2 மடாதிபதிகளும் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில், 14.03.1972 அன்று, 5 நீதிபதிகள் அடங்கிய குழுமம், “கோயில் பணியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்கும் உரிமை அரசுக்கு உண்டு அதில் எவரும் வாரிசுரிமை கோர முடியாது” என்று தீர்ப்பிட்டது. ஆனால் அந்த தீர்ப்பில், “கோயிலின் மரபு, பழக்கவழக்கத்திற்கு மாறாக, குறிப்பிட்ட இனத்தைச் சேராத ஒருவர் சாமி சிலையைத் தொட்டால் அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் எனும் ஆகம விதியைக் கருத்தில்கொண்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்” என்று, பார்ப்பனர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக தனது கருத்தைப் பதிவுசெய்தது. இத்தீர்ப்பின் காரணமாக முன்பிருந்த நிலையே மீண்டும் தொடர்ந்தது.
நீதியரசர் மகாராசன் குழு:
இதனைத் தொடர்ந்து, அத்தீர்ப்பினை ஆராய்ந்து அதனை நடைமுறைபடுத்திட, அந்த ஆண்டே, நீதியரசர் மகாராசன் தலைமையிலான ஒரு குழுவினை தமிழக அரசு நியமித்தது. அக்குழுவானது, தமிழகத்தின் பல்வேறு கோயில்களை பார்வையிட்டு, பத்து ஆண்டுகள் விரிவாக ஆய்வு செய்து 1982ம் ஆண்டு தனது அறிக்கையை சமர்பித்தது. அதில், பல கோயில்களில் ஆகம விதிகளுக்குப் புறம்பாக நிகழ்த்தப்படும் பல்வேறு செயல்களை பட்டியலிட்டதுடன், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில், அர்ச்சகர் பயிற்சி பள்ளியை நிறுவிடவும், பணி நியமனங்களில் பழக்க வழக்கங்களை ஒழித்திடவும் பரிந்துரைத்தது.
ஆதித்யன் வழக்கு:
கேரள மாநிலத்தைச் சேர்ந்த, ஆதித்யன் என்பவர் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், 2002ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், “பழக்க வழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்பதை ஏற்கமுடியாது” என்று தீர்ப்பிட்டது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்ட திருத்தம்:
16.07.2006 அன்று தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டத்தின் பிரிவு 55ல், “மத நிறுவனங்களில், கடைசியாக பணியிலிருந்தவரின் வாரிசுதாரர் அல்லது பழக்க வழக்கம், மரபு என்பதுபோன்ற காரணத்தின் அடிப்படையில், எவரொருவரும் பணி நியமனம் செய்யப்பட மாட்டார்” என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக, மதுரையைச் சேர்ந்த, ஆதி சைவ சிவாச்சாரியர்கள் நல சங்கம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 14.08.2006 அன்று தடையாணை பெற்றுவிட்டது. இந்நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு, அந்த சங்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பும் இணைந்து இந்த தடையாணையை ரத்து செய்திடவும், அது தொடர்பான பணிகளையும் முன்னெடுத்து வருகின்றன. இருப்பினும், தற்போது வரையிலும் அந்த தடையாணை நீடித்து வருகிறது.
இதற்கிடையில், 23.05.2006 அன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில், தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டு, நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினை நியமித்தது. அக்குழுவானது, அர்ச்சகர் பயிற்சி, மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வடிவமைத்தது. இதனை தொடர்ந்து, பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படிருந்த பயிற்சி மையங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த, 34 பட்டியல் சாதியினரும், 76 பிற்படுத்தப்பட்ட மற்றும் 55 மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் உட்பட 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகாலம் படித்து அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழும் பெற்றுள்ளார்கள். ஆனபோதிலும் மேலே கண்ட உச்சநீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக இவர்களில் எவரும் பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, அடிப்படை உரிமைகளாக உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளவைகளுக்கு முரணாக பின்பற்றப்படும் பழக்க வழக்கம், மரபுகள் போன்ற எவையும் செல்லதக்கதல்ல. எனவே, உச்சநீதிமன்றமானது, விரைவில் தன்முன் விசாரணைக்கு வரவுள்ள இவ்வழக்கில், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்கி, அனைத்து சாதியிலுள்ள இந்துக்களும் அர்ச்சகர் ஆவதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதோடு, தமிழகத்தில் தொடரும் மத ரீதியான தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்து தரப்பினர்களது விருப்பமாகவும் இருக்கமுடியும். தமிழகத்தில் சமநீதியை நிலைபெறச் செய்திட உச்சநீதிமன்றம் வழிவகுக்குமா என்பது இந்த வழக்கில் வழங்கவிருக்கும் தீர்ப்பின் வாயிலாகவே தெரியவரும்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23802
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23802
- இ.இ.இராபர்ட் சந்திரகுமார் செவ்வாய், 07 மே 2013 10:50