Thursday, March 10, 2011

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழியுறுத்தி அர்ச்சக மாணவர்கள்,மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முற்றுகைப் போராட்டம்


அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழியுறுத்தி அர்ச்சக மாணவர்கள்,மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முற்றுகைப் போராட்டம் .................................

       4.3.2011 அன்று உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் மீண்டும் தமிழக அரசு வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிக்காமல் இருக்க வழியுறுத்திப் போராட்டம் நடத்துவதெனத் தீர்மானித்து 3.3.2011 நண்பகல் 12 மணிக்கு அர்ச்சக மாணவர்களும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்கு கோபுர வீதியில் ஊர்வலமாகச் சென்று தெற்கு கோபுர வாயில் முன்பு முற்றுகையிற்றுப் போராட்டம் நடத்தினர்.மாணவர்களும்,மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும் போராட்டம் நடத்த வருவதை அறிந்த மீனாட்சியம்மன் கோயில் பார்ப்பன சிவச்சாரியார்களும் பட்டர்களும் கோயிலின் தெற்க்கு வாயிலை அடைத்து விட்டனர்.பட்டர்களுக்கு ஆதரவாக மதுரை மாநகர காவல்துறையினர் தெற்க்கு வாயிலை அடைத்து அணிவகுத்து நின்று கொண்டன்ர்.கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காலணிகள் பாதுகாக்கும் இடத்தில் போராட்டக்காரர்களின் செருப்பைக்கூட வாங்க மறுத்து விட்ட நிலையில் செருப்புகளை வீதியிலே விட்டெறிந்துவிட்டு கொளூத்தும் வெயிலில் வழக்கறிஞர்களூம் , அர்ச்சக மாணவர்களூம் அரைமணி நேரத்திற்க்கும் மேலாக விண்ணதிர முழக்கமிட்டு முற்றுகைபோராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    போராட்டத்தில் அனைத்து சாதி அர்ச்சக மாணவர்களை அர்ச்சகராக விடாமல் சூழ்ச்சி செய்து உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆதி சிவாச்சார்யார்களைக் கண்டித்தும்,உச்சநீதிமன்ற வழக்கை விரைந்து நடத்தாத தமிழக அரசைக் கண்டித்தும்,ஆலயத் தீண்டாமையை ஈராயிரம் ஆண்டுகளாக அமல்படுத்தி தகுதி வாய்ந்த பிற்பட்ட,தாழ்த்தப்பட்ட மாணவர்களை கருவறைக்குள் அனுமதிக்க மறுக்கும் பார்ப்பன அர்ச்சகர்களிடம் தமிழர்கள் திருநீறு வாங்கக் கூடாதெனவும், பெரியாரின் வாரிசாக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் கருணாநிதியின் கபட வேடத்தை அம்பலப்படுத்தியும் ,4.3.2011 அன்று வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்தி அர்ச்சக மாணவர்களுக்கு பணிநியமனம் வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.இக்கோரிக்கைகளை வழியுறுத்தி 2000 துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

       முதலில் போராட்டம் நடத்தியவர்களிடம் போராட்டத்திற்க்கு அனுமதி பெறவில்லை முழக்கமிட்டுக் கலைந்து செல்லுங்கள் எனக் கோரிய போலீசிடம் முற்றுகைப் போராட்டத்திற்க்கு அனுமதி பெற முடியாது; கலைந்து செல்லவும் முடியாது என உறுதியாகச் சொல்லி போராட்டம் தொடர்ந்தது; போராட்டம் தொடர்ந்தால் கைது செய்வோம் எனப் போலீசு மிரட்ட கைதுக்குத்தான் போராட்டமே செய்கிறோம் உடனே கைது செய்யுங்கள் என மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டு போலீசு வேனில் ஏறினர் அர்ச்சக மாணவர்களும், வழக்கறிஞர்களும்.   
     போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்த போதும் காவல்துறையின் மிரட்டலுக்கு அஞ்சாமல் உறுதியாகப் போராடிய விதம் மக்களைக் கவர்ந்தது.

தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.
இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில்  வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் அர்ச்சக மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் மாணவர்களை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சங்கமாகத் திரட்டி. உச்ச நீதிமன்ற வழக்கிலும் இணைந்தோம். இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் மாணவர்களுக்கு சான்றிதழே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை
பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்என்றும் வலியுறுத்தியது. இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.
ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் இந்து மத உரிமைஎன்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள்  இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர். அவர்களில் தேவநாதன் போன்ற நல்லொழுக்க சீலர்களும்“  அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.
  மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் சிவாச்சார்யார்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.ஆனால் தமிழக அரசு இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கவில்லை.ஆனால் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினரான  நாங்கள் இப் பிரச்சினையை விடப் போவதில்லை.


பார்ப்பனீய சாதி ஆதிக்கத்திற்க்கு எதிராக உறுதியாக நின்ற ஒரு குமூடிமலை ஆறுமுகசாமியைக் கொண்டு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதப் பார்ப்பனர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம்,திருவாசகத்தை அரங்கேற்றி, கோயிலையே அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து  அடுத்ததாக அர்ச்சக மாணவர் போராட்டத்தில் களமிறங்கியுள்ளோம். மாணவர்களை சங்கமாக்கி உச்சநீதிமன்ற வழக்கில் இணைந்தது என்று சட்ட ரீதியிலும் , மாணவர்களை அணிதிரட்டி வீதியிலும் என்ற வகையில் இப்போராட்டம் தொடர்ந்து வருகிறோம். மனித உரிமைகளுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக எதிரி என்ற வகையில் பார்ப்பனீய  சாதி ஆதிக்கத்தை  வேரறுப்பது வரை எங்கள் மனித உரிமைப் போர் தொடரும்.....................



      ARCHAGAR TRAINED STUDENTS SOCIETY-TAMILNADU
REGD. No. 189/09
128, Gokulam Illam, Arasamara street
Tiruvannamalai.
cell: 9047400485
http://appsa-tn.blogspot.com

Friday, March 4, 2011

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் போராட்டம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவுபடி தமிழகத்தில் 6 இடங்களில் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு அர்ச்சகருக்கான சான்றிதழ்களையும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து மதுரை பாட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை கோரி மனு செய்துள்ளனர். இந்த மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம், மதுரை பாட்டர்கள் தரப்பு ஒத்திவைக்கக்கோரி மனு தந்து வருகிறது.

இதனால் இந்த வழக்கு மூன்று ஆண்டுகளாக விசாரணைக்கு வராமலேயே உள்ளது. இதனை கண்டித்து அர்ச்சர் பயிற்சி பெற்ற மாணவர்கள், மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அர்ச்சர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனை மீண்டும் ஒத்திவைக்காமல்
விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் என மாநில தலைவவர் ரெங்கநாதன் தெரிவித்தார்.

இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்திய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.