இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் அர்ச்சக மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் மாணவர்களை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சங்கமாகத் திரட்டி. உச்ச நீதிமன்ற வழக்கிலும் இணைந்தோம். இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் மாணவர்களுக்கு சான்றிதழே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை
பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது. “இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.
ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள் இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர். அவர்களில் தேவநாதன் போன்ற “ நல்லொழுக்க சீலர்களும்“ அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.
மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் சிவாச்சார்யார்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.ஆனால் தமிழக அரசு இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கவில்லை.ஆனால் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினரான நாங்கள் இப் பிரச்சினையை விடப் போவதில்லை.