Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Monday, December 13, 2010

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக தாக்கப்பட்ட கொடுமை

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக தாக்கப்பட்ட கொடுமை
அர்ச்சகர் பயிற்சியின் போதும் அவமதிப்புகள்
குமுறும் பார்ப்பனரல்லாத இளைஞர்கள்

அர்ச்சகர் பயிற்சி பெறச் சென்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள், பயற்சிக் காலத்தில் அவமதிக்கப்பட்ட பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து அர்ச்சகர் பயிற்சி முடித்து விட்டு, கோயில் பணியில் அமர்த்தப்படாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அர்ச்சக இளைஞர்கள் கூறிய தகவல்கள்:
 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை நாங்கள்
100_0549.JPGஅர்ச்சகர்களாக பயிற்சி பெற்றோம். பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலிலும் அர்ச்சகர் பயிற்சி நடந்தது. இங்கே பயிற்சி பெற்றவர் களுக்கு கோயில் தலைமை அர்ச்சகப் பயிற்சியாளர் வேதம், தியான சுலோகம், காயத்ரி மந்திரங்களை கற்றுத் தர மறுத்து விட்டார். ஆகமம் கற்றுத் தரும் ஆசிரியரே வர வில்லை. ஒரு தமிழ்ப் புலவர் மட்டும் தேவாரம், திரு வாசகங்களை கற்பித்தார். பழனி கோயில் தலைமை அர்ச்சகராக இருப்பவர் பாலு குருக்கள் என்ற பார்ப்பனர். அவர்தான் பயிற்சி தர வேண்டும். ஆனால், உங்களுக்கு எல்லாம் வேதம், தியான சுலோகங்களையோ அர்ச்சகருக்கான பயிற்சியையோ கற்றுத் தர முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்.
 திருவண்ணாமலையில் நடந்த பயிற்சியிலும், நாங்கள் அவமானப்பட்டோம். அங்கும் எங்களுக்கு வேதம், ஆகமம் கற்றத்தர பார்ப்பன அர்ச்சகர்கள் மறுத்து விட்டார்கள். வெளியிலிருந்து தாமாக முன்வந்து ஒரு பார்ப்பனர், எங்களுக்கு கற்றுத்தர முயன்றபோது, பார்ப்பன அர்ச்சகர்கள், அவரை உடல் ரீதியாக தாக்கி, வெளியே தள்ளினர். நாங்கள் மொத்தம் 207 பேர் பயிற்சி பெற்றோம். 4 இடங்களில் சைவப் பயிற்சியும், 2 இடங்களில் வைணவ பயிற்சியும் நடந்தது.
 எழுத்துத் தேர்வு மட்டுமின்றி, நேர்முகத் தேர்வும், அதற்கு மதிப்பெண்ணும் உண்டு. அற நிலையத் துறை ஆணையர், உதவி ஆணையர் ஆகிய அதிகாரிகளோடு, பழனி தலைமை அர்ச்சகரான பாலு குருக்கள், நேர்முக தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தார். அதிகாரிகள் கை கட்டி வாய் பொத்தி, பார்ப்பன குருக்கள் சொல்வதைத்தான் கேட்பார்கள். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது பார்ப் பனர்களைப் போன்ற தோற்றத்துடன் தான் வரவேண்டும் என்பது கட்டாயம். காதில் கடுக்கண், தலையில் குடுமி, முதுகில் பூணூல் அணிந்து, மீசையில்லாமல் வரவேண்டும். அதிலும்கூட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 16 பேருக்கு பூணூல் அணியவும் தடை விதித்தார்கள்.
 “நீங்கள் எந்த பூசையும் செய்ய வேண்டாம். சர்க்கரைப் பொங்கல் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் அதுவே போதும்என்று பழனி பார்ப்பன அர்ச்சகர் கூறினார். இவ்வளவு அவமானங்களைச் சுமந்து, நாங்களே, எங்கள் முயற்சியால், எங்களை தகுதியாக்கிக் கொண்டோம். ஆனாலும், பணி நியமனம் இல்லாமல் திண்டாடுகிறோம். தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத் தடையை நீக்கும் முயற்சி களில் மெத்தனம் காட்டுகிறது. உச்சநீதிமன்றத்தில் நாங்களே சங்கத்தின் வழியாக நிதி திரட்டி எதிர் வழக்காடி வருகிறோம்” - என்று கண்ணீர் மல்க கூறுகிறார்கள், இந்த இளைஞர்கள்.
 செப்டம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. அரங்கநாதன் தலைமையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் திருவண்ணா மலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சில இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் அரங்கநாதனை தாக்கி உள்ளனர். இது குறித்து வா. அரங்கநாதன் நடந்த சம்பவங்களை விளக்கி, கழக ஏட்டுக்கு விடுத்துள்ள செய்தி:
IMG_4827.JPG “நான் தமிழக அரசு நடத்திய அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தில் திருவண்ணாமலையில் படித்து முடித்துள்ளேன். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த 207 மாணவர்களுக்கும் பணி நியமனம் செய்யப்பட வில்லை. எனவே, மாநில அளவில் அனைத்து மாணவர் களையும் திரட்டி, சங்கம் அமைத்து நடத்தி வருகிறோம். இந்த நிலையில் மதுரையைச் சார்ந்த பார்ப்பன பட்டர்கள் எங்களை பணி நியமனம் செய்யாதிருக்க உச்சநீதிம ன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், தமிழக அரசு எங்களை பணியமர்த்தவில்லை. எங்கள் சங்கத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் வழக்கை எதிர்கொண்டு வருகிறோம். சங்கத்தின் சார்பாக போராட்டங்களையும் நடத்தி வருகின்றோம். இதனால் ஆரம்பத்தில் இருந்தே இந்து முன்னணியினர் பார்ப்பனர்களுக்கு எதிராக பேசக் கூடாது என எச்சரித்து வந்தனர்.
 பெரியார் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17 அன்று திருவண்ணாமலையில் காலை 9 மணியளவில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரும் அர்ச்சகர்களாக வேண்டும் என போராடிய தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு இரவு வரை நகரின் பல பகுதிகளில் மக்கள் மத்தியில் எங்கள் பணி நிய மனத்திற்கு தடையாக உள்ள உச்சநீதிமன்ற வழக்கை தமிழக அரசு விரைந்து நடத்த வலியுறுத்தி துண்டறிக்கைகளை வழங்கி வந்தோம். அன்று இரவு 8.30 மணியளவில் அண்ணாமலையார் கோவில் வாயிலின் அருகில் நானும் மனித உரிமை பாதுகாப்பு மய்ய வழக் கறிஞர்களும் துண்டறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் போது இந்து முன்னணியின் நகர செயலாளர் இளமாறன் உட்பட ஐந்து பேர், “ஏண்டா கிறித்துவ பசங்களை கூட்டி வந்து நோட்டீஸ் கொடுத்து பிரச்சினை செய்ய பார்க்கிறியாஎன கேட்டார். இதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்து முன்னணி யினர் என்னைப் பார்த்து தொடர்ந்து நீ பிராமணர்களுக்கு எதிராக பேசி வர; நீ என்ன கதி ஆவர பார்என எச்சரித்தார். ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டினார்
.
 இதற்கிடையில் 14.10.2010 இரவு 9 மணியளவில் கோயிலுக்குள் நாங்கள் இருந்தபோது இந்து முன்னணியைச் சார்ந்த காமராஜ் மற்றும் சுரேஷ் இருவரும் என்னைப் பார்த்து, தெவிடியா பையா நீ தானே பெரியார் சிலைக்கு மாலை போட்டவன். நீ ஏன்டா பார்ப்பானாக பாக்குற, பெரியாரு நாட்டைக் கெடுத்தார். நீ திருவண்ணா மலையை கெடுக்க பார்க்கியா. உன்னால எங்க கட்சியில எங்களுக்கு நெருக்கடி. இனிமேல் சங்கம் சார்பில் ஏதாவது பண்ணிப் பாரு. கோவில் வாசலிலேயே வெட்டுப்பட்டு சாவ என்று திட்டி, கழுத்தை நெரித்து, முதுகில் தாக்கினார்.
 நான் தனி ஆளாக இருந்ததால் எதையும் பேசாமல் அங்கிருந்து வந்து விட்டேன். இந்து அமைப்புகள் எங்க சங்க செயல்பாடுகளால் காழ்ப்புணர்ச்சி கொண்டு என்னையும், சங்க மாணவர்களையும் எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என பல்வேறு வகையில் மிரட்டி வருகின்றனர். எதிரிகளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. இவர்களுக்கு பின்னணியில் பார்ப்பனர்கள் உள்ளனர் என உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார்.
 ஆண்டவனைமறுத்து ஆள்கிறவரை நம்பும் அர்ச்சகர்கள்
 தமிழ்நாட்டில் பழனி, திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட 38000 கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள், 6 வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்கக் கோரி, வேலை நிறுத்தம் செய்துள்ளனர். கோயில்களில் அன்றாட தெய்வத் திருப்பணிகளானஅர்ச்சனைகள், பூசைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. பிறகு, தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக உடன்பாடு ஏற்பட்டு, வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாம்.
 கோரிக்கைகளை பகவான்களிடம் முறையிடுவதில் எந்தப் பயனும் கிடைத்து விடாது என்பது அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு  நன்றாகவே தெரியும். அதனால்தான் ஆண்டவன் திருப்பணிகளையே நிறுத்திக் கொண்டு வேலை நிறுத்தம் செய்கிறார்கள். ஏமாந்து போன பக்தர்கள்தான் அர்ச்சனைத் தட்டில் காசைப் போட்டு, ‘பெயருக்கும்’, ‘ராசிக்கும் அர்ச்சகரிடம் அர்ச்சனை செய்யுமாறு கேட்கிறார்கள்.
IMG_4828.JPG அர்ச்சகர்களோ, தங்களது கோரிக்கையை அரசிடம் வைக்கிறார்கள். அர்ச்சகர்களே; உங்களுக்கே
கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றால், மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? இது தெய்வ நிந்தனை ஆகாதா?” என்று எந்த வைதீகப் பார்ப்பனரும் கேட்கவில்லை. ஆயுதபூசையை நிறுத்தச் சொல்வது கடவுள் உணர்வைப் புண்படுத்து வதாகும் என்று கூப்பாடு போடும், இந்த முன்னணியினரும் கண்டிக்கவில்லை.
 கருப்புச் சட்டையுடன் மோதுவதற்கு முன்பு, கருவறைக்குள்ளேயிருந்தே கடவுளுக்கு எதிராகக் கலகக் குரல் கேட்கிறதே; அதை செவிமடுப்பார்களா, இந்த கடவுள் போலீஸ்காரர்கள்’?

Sunday, December 12, 2010

பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி ரவுடித்தனம் !!

இந்து முண்ணனி குண்டர்களால் தாக்கப்பட்ட வ.அரங்கநாதன்

இந்து முண்ணனி ரவுடிகள் தாக்கப்பட்ட வ.அரங்கநாதன், மருத்துவமனையில்

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும், இதனால் சமூகநீதியை நிலைநாட்டி விடுவோம் என கருணாநிதியால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல்வேறு சாதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகம விதிகள், பூஜைகள் போன்ற கோயில் விதிகளில் பயிற்சியளிக்க 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.

அப்போதே மதுரையைச் சேர்ந்த சில பார்ப்பன அர்ச்சகர்களும், பட்டர்களும் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த தம்மைத் தவிர வேறு யாரும் சிலைகளைத் தொட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்ய தகுதி இல்லையென்றும், அப்படிச் செய்வதால் சிலை தீட்டுப் பட்டுப்போகும் என்றும் மீறி அப்படிச் செய்வதால் சிலையை விட்டும் கோயிலை விட்டும் சாமி வெளியேறி விடுவார் என்றும், என்னதான் மந்திரங்களையும், ஆகம விதிகளையும் படித்து இருந்தாலும் கருவறைக்குள் நின்று சிலையைத் தொடும் உரிமை தமக்கு மட்டுமே உரித்தானது என்றும் சொல்லி ஒரு தடையாணையைப் பெற்றனர்.

சமூகநீதியின் ஒரே அத்தாரிட்டி தாம் தான் என்று வெளியே சூரத்தனம் காட்டும் கருணாநிதி அரசு, பார்ப்பன அர்ச்சகர்களை வழக்குமன்றத்தில் முறியடிக்கும் உத்வேகம் இல்லாமல் வெறும் ஒப்புக்குச்சப்பாணி போல எதிர்வழக்காடி வருவகிறது.

மட்டுமல்லாமல், மேற்கண்ட பயிற்சிக் கல்லூரிகளில் படித்துத் தேறிய மாணவர்களுக்கு இன்று வரையில் பணிநியமன ஆணையை வழங்காமல் உள்ளது. கல்லூரியில் படித்துத் தேறிய மாணவர்களுக்கான சான்றிதழையும் ம.உ.பா மையம்(HRPC) தலையிட்டு மாணவர்களை சங்கமாகத் திரட்டிப் போராடிய பின் தான் வழங்கப்பட்டுள்ளது.

தில்லி உச்சிக்குடுமிமன்றம் இடைக்காலத்தடை விதித்ததை சாக்காக வைத்துக் கொண்டு தி.மு.க அரசு எல்லா பயிற்சி பாடசாலைகளையும் மூடிவிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக தமிழக அரசு சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் பராசரன்தான் இப்போது தமிழக அரசை எதிர்த்து மதுரை பார்ப்பன பட்டர்களுக்காக வழக்காடுகிறார்.

இது வெறுமனே வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லையென்பதாலும், பார்ப்பனத் திமிர் உறைந்து கெட்டிப்பட்டுக் கிடக்கும் கருவறையை கழுவிச் சுத்தப்படுத்த சூத்திரர்களுக்குக் கிடத்துள்ள பொன்னான ஒரு வாய்ப்பு என்பதை அறிந்திருந்ததாலும், மாணவர்கள் சங்கம் சார்பில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு தரப்பினராகச் சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இவ்வழக்கின் தன்மை என்பது வெறும் சட்டவாத சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் உள்ள வளைவு சுழிவுகளால் மட்டுமே தீர்க்கக் கூடிய ஒன்றல்ல. கொலைகார காஞ்சி ஜெயேந்திரனும், காமவெறிபிடித்த பார்ப்பன அர்ச்சகனான தேவநாதன் போன்றவர்களுக்கும் சிலைகளைத் தொட்டு பூஜைகள் செய்ய தடையேதும் இல்லாத போது, மந்திரங்களையும் பூஜாவிதிகளையும் முறையாகப் படித்தாலும் பிறப்பைக் கொண்டு இம்மாணவர்களை ஒதுக்குவதானது கருவறைத் தீண்டாமையாகும்.

இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெரியாரின் பிறந்த நாள் அன்று அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை ரங்கநாதன் தலைமையில் அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் ம.உ.பா மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், பகுதி பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் வ.அரங்கநாதன்

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் வ.அரங்கநாதன்

இது பற்றிய செய்தி முதலில் வினவிலும் பின்னர் விகடனிலும் விரிவாக வெளியானது. முக்கியமாக தந்தை பெரியார் சிலைக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை அணிவித்ததை இந்து மதவெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களது கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியார் இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்து அதை நிறைவேறப் போராடியவர் பெரியார். அவர் நாத்திகரே ஆனாலும் சூத்திர ஆத்திகர்கள் மீதுள்ள தீண்டாமையை ஒழிக்க போராடினார். அதனால் அவருக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை சூட்டியது நிச்சயமாக பொருத்தமானதுதான். இதுதான் இந்து முன்னணிக்கு பிடிக்கவில்லை.

இப்படி இந்து பார்ப்பன தீண்டாமை வெறியாட்டம் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்து முண்ணனியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அன்று இரவே அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த ரங்கநாதனையும் ம.உ.ப மையத் தோழர்களையும் மறித்து ‘ஏன் இவ்வாறு போராடுகிறீர்கள்?’ என்று கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு, ‘இப்பவே கூட்டிப் போய் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேலை வாங்கித் தந்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்’ என்று பதில் சொல்லியுள்ளார்கள் தோழர்கள். அதில் மூக்குடைபட்டுப்போன அவர், ‘அண்ணாமலையார் கோயிலிலெல்லாம் முடியாது. வேணும்னா ஏதாவது ரோட்டோர கோயில்ல பூசாரி வேலை வாங்கித் தருவோம்’ என்று திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

‘எல்லாரும் இந்துக்கள் தான்’ என்று ஊர் ஊருக்கு சொல்லிக் கொண்டு அலையும் இராம கோபாலன் பிராண்டு சமத்துவத்தின் யோக்கியதை இதுதான். பார்ப்பனர்களுக்கு உசந்த சாமி; கீழ் சாதிக்காரர்களுக்கு ரோட்டோர சாமியாம். பார்ப்பனர்களுக்கு நன்றாக கலெக்ஷன் கட்டும் மதுரை மீனாட்சி – சூத்திரனுக்கு ரோட்டோரத்தில் அம்போவெனக்கிடக்கும் பட்டத்தரசி. இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் போன்ற பார்ப்பன தீவிரவாத இயக்கங்களைப் பொருத்தளவில் சாமியோ ஆசாமியோ எல்லாவற்றிலும் மேன்மையானவைகளை மட்டும் குடுமிக்குள் முடிந்து வைத்துக் கொள்வார்கள்.

ஊடகங்களில் விவகாரம் நாறத் துவங்கியதும் இந்து முண்ணனியின் மாவட்டச் செயலாளர் ரங்கநாதனின் வீட்டுக்குச் சென்று விசாரிப்பது, அக்கம் பக்கத்தில் விசாரிப்பது என்று ரங்கநாதனின் உறுதியைக் குலைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட முயல்கிறார். இது போன்ற மிரட்டல் சம்பவங்கள் தொடர்வதை அடுத்து, அக்டோபர் 15ம் தேதி ரங்கநாதனும் ம.உ.பா மையத் தோழர்களும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியைச் சந்தித்து ரங்கநாதனின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி மனு கொடுக்கிறார்கள்.

அவர் அந்த மனுவை டி.எஸ்.பியை விட்டு விசாரிக்கச் சொல்வதாகவும் அன்று மாலை அவரைச் சென்று பார்க்குமாறும் கேட்டுக் கொள்கிறார். அன்று மாலையே டி.எஸ்.பி அலுவலகத்திற்கு ரங்கநாதன் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடிகள், அவரை பலமாகத் தாக்குகிறார்கள். சுதாரித்துக் கொண்ட ரங்கநாதன் தன்னைத் தாக்கியவர்களை செல்போன் கேமராவில் படம் பிடித்து விடுகிறார். போட்டோ ஆதாரத்துடன் காவல் துறையில் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தற்போது விசாரித்து வருகிறார்கள்.

முதலில் மாணவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களின் சங்கத்தைப் பிளந்து வழக்கை நீர்த்துப் போய்விடச் செய்து விடலாம் என்று பார்ப்பனர்கள் தரப்பில் முயன்றுள்ளனர். அந்தத் திட்டங்கள் மண்ணைக் கவ்வியதால், அடுத்து சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ‘உனக்கு என்ன வேண்டும், ஏதாவது சின்னக் கோயிலைத் உன் பொறுப்பில் தருகிறோமே. இல்லை நீ ஏதாவது கம்ப்யூடர் படி -நாங்கள் செலவைப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றெல்லாம் பலவாறு ஆசை காட்டி அவர்கள் வழக்கை திரும்பப் பெற வைக்க முயன்றனர். அதுவும் மண்ணைக் கவ்வியது.

இப்போது பார்ப்பனர்களின் வழக்கமான உத்தியான ‘ஆனமட்டும் காலைப் பிடி ஆனபின்பு கழுத்தைப் பிடி’ என்கிற கதையாக தமிழகத்தில் பார்ப்பனர்களின் உருட்டுக் கட்டையாக விளங்கும் இந்து முண்ணனியைச் சேர்ந்த ரவுடிகளை ஏவி விட்டுள்ளனர்.

ஆனால், எத்தனை முறை எப்படியெல்லாம் ஆசை காட்டினாலும் சரி – மிரட்டினாலும் சரி – ஏன் உயிரே போவதானாலும் சரி; பார்ப்பனர்களிடம் சரணடைவதில்லை என்பதில் ரங்கநாதன் மிகத் தெளிவாய் இருக்கிறார். தொட்டால் தீட்டு என்று தெருவில் சொன்னால் அது குற்றம் என்பதற்கு சட்டம் இருக்கிறது – அதையே கருவறைக்குள் நின்று சொன்னால் சட்டம் செருப்பை வாசலிலேயே கழட்டி விட்டுவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு பவ்வியமாய் நிற்கிறது. இதை எதிர்த்து தீண்டாமையின் கோட்டையாக விளங்கும் கருவறையிலேயே அதற்கு சமாதி கட்டும் தோழர்களின் போராட்ட உறுதியின் முன் பார்ப்பன இந்துமதவெறியர்களின் சதிகள் நிச்சயமாய் தோற்றுப் போகும்.


(Source: http://www.vinavu.com/2010/10/25/ranganathan-attacked/)