Monday, July 11, 2011

பயிற்சி மாணவர் பூஜை செய்த விநாயகருக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் பூஜை செய்ய மறுப்பு!!!

  • திருவண்ணாமலை கோயிலுக்குள்ளே அராஜகம்!
  • அனைத்து ஜாதியினருக்கான அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிமீது தாக்குதல்!!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினையில் அ.தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன?

திருவண்ணாமலை, ஜூலை 9: திருவண்ணாமலை அருணாசல ஈசுவரர் கோயிலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது, அனைத்து ஜாதியனரும் அர்ச்சகராகும் வகையில் பயிற்சி அளிக்கப் பட்டிருந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பெயர் பொறிக்கப்பட்ட பதாகையும் கிழித்து எறியப்பட்டது.
இது குறித்து நமது சிறப்புச் செய்தியாளர் தெரிவிப்பதாவது: திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோயிலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தில், திருவண்ணாமலை பெரிய கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி 2007-08 முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த மாணவர்களைப் பணியமர்த்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், பயிற்சிப் பள்ளியில் உள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி என்ற டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்ததை மர்ம நபர்கள் கிழித்து எறிந் துள்ளனர். சிறு சிறு சிற்பங்கள் உடைக்கப்பட்டிருந்தன என தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து விடுதலை செய்தியாளர் விரைந்து சென்று அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள பயிற்சிப் பள்ளியை பார்வையிட்டார். ஆனால் அனைத்து வாயில்களிலும் பூட்டுப் போடப்பட்டு இருந்தது.  அங்குள்ளவர்களிடம் கேட்டபோது யாரும் அது குறித்து சரியான விளக்கம் அளிக்கவில்லை. அதன் பின்னர் அந்தப் பள்ளியில் படித்த பழைய மாணவரும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க மாநிலத் தலை வருமான வா. அரங்கநாதன் அவர்களை, கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சந்திக்க உள்ளதாகவும் அங்கு வாருங்கள். நேரில் பேசிக்கொள்ளலாம் எனக் கூறினார். அவரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோயிலில் நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:

நான் சில தினங்களுக்கு முன் கோயிலில் சாமி கும்பிடுவதற்காகச் சென்றிருந்தேன். சாமி தரிசனம் முடித்துக் கொண்டு பயிற்சியின்போது பயன்படுத்திய சிலைகள் இருக்குமிடத்திற்குப் போனேன்.  ஆனால் நாங்கள் பயிற்சியில் பயன்படுத்திய சிலைகளுக்கு பூஜைகள் செய்யாமல் தூசி படிந்த நிலையில் இருந்தன.   கோயில் அலுவலரிடம் கேட்டேன். நீங்கள் பூஜை செய்த சிலையை அய்யர் பூஜை செய்யமாட்டார் என்று கூறியதாகச் சொன்னார். அதன்பின் பயிற்சிப் பள்ளி உள்ளே சென்றேன். அங்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி, திருவண்ணாமலை என பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை கிழித்து எறியப் பட்டிருந்தது. அங்கு நாங்கள் பயன்படுத்திய சிறுசிறு சிலைகள் உடைத்து நொறுக்கப் பட்டிருந்தன. பிறகு என்ன நடந்தது என கேட்டதற்கு நான் என் நண்பர்களுடன்  கலந்தாலோசித்து இந்தத் தீண்டாமை செயலை வெளியுலகிற்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தி யாளர் அவர்களைத் தொடர்பு கொண்டுநடந்ததைச் சொன்னேன்.  அவரும் என்னுடன் வாருங்கள் செய்தி  சேகரிக்க என்று கூறி ஒளிப்பதிவு கேமராவுடன் சென்றோம். 6-7-2011 மாலை கோயிலுக்குச் சென்று நாங்கள் பயன்படுத்திய சிலைகளைப் படம் பதிவு செய்து கொண்டு பயிற்சிப் பள்ளியின் உள்சென்று அங்கு கிழிக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகை, உடைக்கப்பட்டு இருந்த சிலைகளைப் படப் பதிவு செய்து கொண் டிருந்தோம்.
அப்போது (ஜவான்) சேகர் காவலாளி வேகமாக வந்து கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளரையும், பயிற்சிப் பள்ளி மாநிலத் தலைவரான அரங்கநாதன் ஆகிய என்னையும் படம் எடுக்கக் கூடாது என்று தள்ளினார். பிறகு தள்ளு முள்ளு ஏற்பட்டு தாக்கவும் முயற்சித்துள்ளார். சேகர் காவலாளி. இவர் பயிற்சி நடைபெற்றிருந்த நாள்களிலே கூட பல இடையூறுகளைச் செய்து வந்தார் எனவும் கூறினார். பின்னர் அருகிலுள்ள நிருவாக அலுவலக ஊழியர் கோபி இருவரையும் விலக்கி விட்டார். பின்னர் கோயில் கண்காணிப்பாளர் சீனுவாசன் என்பவர் அரங்கநாதனை, நீ எல்லாம் பயிற்சிப் பள்ளி உள்ளே வரக்கூடாது என ஆவேசமாகப் பேசினார். பிறகு வாக்கு வாதம் முற்றியது. அலுவலக ஊழியர்கள் வந்து விலக்கினார்கள் என அரங்கநாதன் கூறினார். கோயில் நிருவாக அலுவலகம் அருகே உள்ள இந்தப் பயிற்சிப் பள்ளியில் சிலைகள் உடைக்கப்பட்டு, பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அங்கு உள்ளவர் களைத் தவிர வேறு எவரும் இந்தச் செயலைச் செய்திருக்க முடியாது எனக் கூறினார். இந்த விவரங்களை மனுவில் உள்ளடக்கி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் 7-7-2011 அன்று மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அதன்மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

(குறிப்பு: அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் மா. அரங்க நாதன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிக் கொடுத்த கடிதம் 3-ஆம் பக்கம் காண்க)

 http://viduthalai.in/new/headline/13410-2011-07-09-10-03-26.html

Tiruvannamalai Archagarpalli.mpg


http://www.youtube.com/watch?v=tUllL_Wq648

No comments:

Post a Comment