சூத்திரன், பஞ்சமன் தொட்டால் சாமிக்குத் தீட்டா?
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை முறியடிக்க ஆலயத் தீண்டாமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்ற வழக்கில் சதி செய்யும்
பார்ப்பன அறநிலையத்துறையைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம்
21.4.2015 மதியம் 1.30 மணி சென்னை உயர்நீதிமன்ற வாயிலில்
அன்பார்ந்த தமிழ் மக்களே,
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு 1972-க்குப் பின் தற்போது மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
“கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் ஈனச்சாதியாய், சூத்திரர்களாய் வாழ்வதை விட கிளர்ச்சி செய்து சிறை செல்வது மேல் அல்லவா?” என நம்மீது சுமத்தப்பட்ட சாதி இழிவை அகற்றப் போராடுமாறு, தனது 95 வயதில் தமிழக மக்களை நோக்கிக் அறைகூவினார் பெரியார்.
இன்றோ, “நீங்கள் ஈனச்சாதிதான். பார்ப்பனரல்லாத பிற சாதியினர் சாமி சிலையைத் தொட்டால், கோயில் தீட்டாகிவிடும்; கடவுள் வெளியேறி விடுவார்” என்று கருவறைத் தீண்டாமையைத் தொடர்ந்து பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள்.
“அப்படி நடந்தால் நான் கோவிலுக்குப் போவதையே நிறுத்தி விடுவேன்” என்று உச்ச நீதிமன்றத்தில் ஆத்திரமாகப் வாதிடுகிறார் மூத்த வழக்குரைஞர் எனப்படும் பராசரன்.
“சூத்திரன் என்று அழைத்தால் ஆத்திரம் கொண்டு அடி” என்று சுயமரியாதையுடன் முழங்கிய தமிழகமோ, இன்று சொரணையே இல்லாமல் சுருண்டு கிடக்கிறது. இந்த அவலநிலை நோக்கி உங்கள் கவனத்தை ஈர்க்க விழைகிறோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006–ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அறநிலையத்துறை நிறுவிய அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி முடித்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பணி நியமனத்தை, அவர்கள் பார்ப்பனரில்லை என்ற ஒரே காரணத்துக்காக தடுத்து வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அர்ச்சக மாணவர்கள் சார்பில் இந்த வழக்கை 2009 முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்தி வருகிறது.
அர்ச்சகர் நியமனத்தில் பரம்பரை நியமனத்தை ஒழிக்கும் சட்டம் செல்லும் என்று 1972-லேயே 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்து விட்டது. இருந்த போதிலும் இன்று வரையில் பார்ப்பன அர்ச்சகர்கள் வாரிசு அடிப்படையில்தான் அறநிலையத்துறையால் நியமனம் செய்யப்படுகிறார்கள். வாரிசுரிமை ஒழிக்கப்பட்டாலும், ஆகமவிதிகளின் படி அர்ச்சகராகும் தகுதி பிறப்பால் பார்ப்பனருக்கு மட்டும்தான் உண்டு என்பதுதான் நீதிமன்றத்தில் அவாள் முன்வைத்து வரும் வாதம். இது பார்ப்பனரல்லாத பிற சாதியினரை தீண்டத்தகாதவர்களாக்கும் தீண்டாமைக் குற்றம் என்பது நமது வாதம்.
இனி, உச்ச நீதிமன்றத்தில் நடப்பதென்ன என்ற விசயத்துக்கு வருவோம்.
ஜெயலலிதாவைப் போல வாய்தா வாங்கியே இந்த வழக்கை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் பார்ப்பன அர்ச்சகர்களின் திட்டம். அதனை முறியடித்து பல முறை இந்த வழக்கை இறுதி விசாரணை நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் வழக்கை இழுத்தடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக டில்லிக்கு அலைந்து அலைந்து போக்குவரத்து செலவும் வழக்குரைஞர் கட்டணமுமாக இதுவரை பல இலட்சங்கள் செலவாகி விட்டன. இறுதியாக 8 ஆண்டுகளுக்குப் பின் வழக்கு இப்போது விசாரணைக்கு வந்திருக்கிறது.
பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகராகக் கூடாது என்பதில் ஜெயலலிதா தெளிவாக இருக்கிறார். சாலைப்பணியாளர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ததைப் போல, வெளிப்படையாக செய்தால், தனது பார்ப்பனப் பாசம் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினால், தந்திரமாகச் செய்கிறார். அறநிலையத்துறைக்கு எதிராக நடக்கும் இந்த வழக்கை நடத்த, இந்து அறநிலையத்துறை சார்பில் யாரும் உச்ச நீதிமன்றத்துக்கு வரவில்லை. தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் பி.பி.ராவ் என்ற மூத்த வழக்குரைஞர் தனது சொந்த ஆர்வத்தில் மட்டுமே வாதிடுகிறார். அவருக்கு தமிழக அரசின் வழக்குரைஞர் ஒத்துழைக்கவில்லை
உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையைப் பற்றியோ சொல்லத்தேவையில்லை. தலைமை நீதிபதி தத்து, ஜெயலலிதாவுக்கு அதிரடியாகப் பிணை வழங்கியவர். மேல் முறையீட்டை மூன்றே மாதத்தில் முடிக்க உத்தரவிட்டவர். இவையெல்லாம் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்கள், சட்ட விரோத நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டி ஆயிரம் வழக்குரைஞர்கள் கையொப்பமிட்டு குடியரசுத் தலைவரிடம் மனுக்கொடுத்தோம். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் கர்நாடக தலைமை நீதிபதி வகேலாவுக்கு மாற்றல் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் தத்து.
தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும், 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்திருந்த போதிலும் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு சென்ற ஆண்டு ஆட்சேபம் தெரிவித்தது. இதன் விளைவாக நாடு முழுவதும் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சுமார் 1500 கைதிகள் விடுதலையாக முடியாமல், சிறையில் வாடுகிறார்கள். ஓராண்டு காலமாக இதற்கு ஒரு சிறப்பு அமர்வை நியமிக்க முடியாத தலைமை நீதிபதி தத்து, பவானி சிங் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, பதிவாளர் அலுவலகத்துக்கு நடந்தே சென்று, ஜெயாவுக்காக ஒரே நாளில் சிறப்பு அமர்வை நியமித்து, வண்டு முருகனையே விஞ்சப் பார்க்கிறார்.
அம்மா வழக்கிலும், அர்ச்சகர் வழக்கிலும், சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கிலும் பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதிதான் – உங்களால் என்ன செய்ய முடியும் என்று நமக்குச் சவால் விடுகிறது உச்சுக் குடுமிமன்றம். நம் சட்டைப்பையில் கைவிட்டு திருடினாலும், நீதிபதிக்கு மட்டும் சட்டப்பாதுகாப்பு உண்டு. மக்களை மிரட்டுவதற்கு நீதிமன்ற அவமதிப்பு என்ற அதிகாரம் வேறு. இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டாமா? ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற இந்த மனுதர்ம வருணாசிரமக் கொடுமையை ஒழிக்க நீதிமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் நாம் போராட வேண்டும்.
அர்ச்சக மாணவர்களின் வழக்கை நடத்துவதற்கு நாங்கள் எடுத்து வரும் முயற்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ந்த அமைப்புகள் துணை நிற்கின்றன. சென்னையைச் சேர்ந்த திரு கிருபானந்தசாமி அவர்களும் இதில் எங்களுடன் தோளோடு தோள் நின்று போராடி வருகிறார். ஆயிரம் வழக்குரைஞர்களிடம் கையெழுத்து, தத்துவுக்கு எதிராக குடியரசுத்தலைவரிடம் மனு, டில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு, அர்ச்சகர் வழக்கு என்பன போன்ற பணிகளில் கடந்த சில வாரங்களாக எமது வழக்குரைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழுணர்வும், சுயமரியாதை உணர்வும் கொண்ட தனிப்பட்ட சில மனிதர்களும், ஐந்தும் பத்துமாக நன்கொடை அளித்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் அளித்த காசிலும், கடனிலும்தான் இந்த வழக்கை இதுவரை தள்ளிக் கொண்டு வந்திருக்கிறோம்.
எனவே,
- இயன்றவர்கள் அனைவரும் வழக்கு நிதி தாருங்கள்.
- “இயலாது” என்று இருந்து விடாமல் பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராகப் பரப்புரை செய்யுங்கள்.
- இந்தத் துண்டறிக்கை கூறும் செய்தியை மக்களிடையே பரப்புங்கள்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
பெண்கள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் கலை இலக்கியக் கழகம்
பெண்கள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு: மில்ட்டன், வழக்குரைஞர் கைபேசி: 90946 66320
No comments:
Post a Comment