Sunday, October 15, 2017

அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு – உச்சநீதிமன்ற விவாதம்

43 ஆண்டுகளுக்கு முன்பு “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டம் செல்லும் என 1972-ல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி பார்ப்பனர்கள் வாரிசுரிமைப்படி அர்ச்சகர் பணி நியமனம் கேட்பது ஒழிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்றளவும் செல்லாக்காசாக இருக்கிறது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக இன்றளவும் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2006–ல் தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் 1972 தீர்ப்பை வைத்தே முடக்கி தடை உத்தரவு பிறப்பித்தது. பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், 2009 முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது.
கடந்த வாரம் முதல் அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை நடந்து வருகிறது. விரைவி்ல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.

அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை விரைவி்ல் முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கும் மதுரை சிவாச்சாரியர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் பராசரன் தன் சொந்த வழக்காக இன்று வரை நடத்தி வருகிறார்.
“சிவாச்சாரியார்கள் இல்லை என்றால் கோவிலுக்கு போவதை நிறுத்தி விடுவேன். கருவறையில் பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டு விடும். தெய்வீக சக்தியை இழந்து விடும்.கோவிலின் புனிதம் கெட்டு விடும்.
காலம் காலமாக பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை, மரபுகளை மாற்றக்கூடாது. இவை இந்து மதத்தின் ஆணி வேர். இவையெல்லாம் பார்ப்பனர்களின் மத உரிமை, அதில் அரசு தலையிடக்கூடாது. 1972 –ல் அர்ச்சகர் நியமனத்தில் ஆகமத்தை பின்பற்றுவோம் என, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் வாக்குறுதி அளித்தார். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என அவசரச் சட்டம் இயற்றியதுடன், அது காலாவதியான பின்பும் அரசாணை மூலம் நிற வேற்ற முயலுகிறார்கள். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார் பராசரன்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் (கோப்புப் படம்)
1972 சேசம்மாள் தீர்ப்பில் உள்ள ஆகமம் பற்றிய கட்டுக்கதைகளை ஆதாரமாக வைத்து இன்றும் ஆணித்தரமாக வாதிடுகிறார், பராசரன். உச்ச நீிதிமன்றமும் அதை நிராகரிக்காமல் கரிசனத்தோடு கேட்கிறது.
அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஙர் பி.பி. ராவ் “எதிர்காலத்தில் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்றே வழக்கு தொடுக்க முடியாது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நாங்கள் பணியமர்த்தினால் இவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்! அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், செல்லா நிலையாகும். அர்ச்சகர் பணி நியமனம் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இட ஒதுக்கீடு அடிப்படையில் அதற்கு உரிய தகுதி உள்ள மாணவர்களை பொதுக் கோவிலில் நியமிப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமை ஆகும்.
1972–ல் சேசம்மாள் வழக்கு தீர்ப்பின்படி கருவறையில் தீணடாமையை ஒழிக்க வாரிசுரிமை அரச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டது. பிற சாதியினரை அர்ச்சகராக நியமித்தால் சிவாச்சாரியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
தாங்கள் தனி வகையறா என்றால் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிரூபிக்கட்டும். சைவக் கோவில்களுக்கு உரிய பாடத்திட்டம் பயிற்சி, தகுதி, வைணவக் கோவில்களுக்கு உரிய பாடத்திட்டம், பயிற்சி, தகுதி இதில் சாதி பாகுபாடு இல்லை.
அரசு வேலை வாய்ப்பில் சாதி, மத, இன வேறுபாடும் இல்லை. அரசியலமைப்பு சட்டம் சரத்து 16-ன்படி அனைவருக்கும் சமவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அர்ச்சகராக வேண்டும். பிறர் வருவதை தடுப்பது’ என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்துக்கள் அனைவரும் சமம், அனைத்து சாதியினரும் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதை ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வும் உறுதி செய்தது. இதன் மூலம் ஆலயத்தீண்டாமை ஒழிக்கப்பட்டது. அது போல் கருவறைத் தீண்டாமையை ஒழிக்க அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணியமர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளது” என வாதிட்டார். இன்றும் தொடர்ந்து வாதிட உள்ளார்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் (கோப்புப் படம்)
அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அரங்கநாதன், சடகோபன் சார்பில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வேஸ், மற்றும் வழக்கறிஞர் கோவலின் பூங்குன்றன் ஆகியோர் வாதிட உள்ளனர்.
மாணவர்கள் தரப்பில் ”பார்ப்பனரை தவிர பிற சாதியினர் சாமியை தொட்டால் கருவறை தீட்டாகிவிடும் என்பது கட்டுக்கதை. பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தையும் வருமானத்தையும் நிலைநாட்டிக் கொள்ளவே பிற சாதியினர் அர்ச்சகராவதை எதிர்க்கின்றனர். தீட்டுப்பட்டுவிடும் என்பது அரசியலமைப்பு சட்டப்படி தீண்டாமை குறற்ம்.
1972–ல் பரம்பரை வாரிசுரிமைப்படி பார்பப்னர்கள் மட்டுமே அர்ச்சகர் என்பதை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் போடப்பட்டது. அச்சட்டம் செல்லும் எனக் கூறியதை ஒதுக்கி விட்டு, அதில் கூறப்பட்டுள்ள ஆகமம் தொடர்பான கருத்துக்களை, ஆன்மிகம் தொடர்பான விபரங்களை திரித்தும், பிரித்தும், பித்தலாட்டமாக நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றனர். 43 வருடங்களுக்கும் பிறகும் எங்களைத் தவிர யாரும் அர்ச்சகராகக் கூடாது என எதிர்க்கின்றனர். அர்ச்சகர்களுக்கு உரிய தகுதி அனைத்தும் பெற்று உரிய சான்றிதழ் பெற்றும் பிறப்பில் பிராமணர் இல்லை என்பதற்காக பணி நியமனம் கூடாது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

“இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது” – அர்ச்சகர் மாணவர்கள்
அனைத்து பொதுக்கோவில்களிலும் உரிய தகுதியுடையவர்களை அர்ச்சகராக நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிறப்பால், தனி வகையறா என எதிர்க்க முடியாது. இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது” என வாதிட உள்ளோம்.

அனைத்து சாதி அர்ச்சகர் – பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு

”சார், ஆகம விதிப்படி தான் கோயில் நடக்குதா இங்கே? மினிஸ்டர் வாராறுன்னு ஒரு மணி நேரம் சாமிய காக்க வைக்கிறாங்க. ஆகமத்துல அப்படி இருக்குதா? கோர்ட்டு என்னா வேணா சொல்லிட்டுப் போகட்டும் சார். இது நம்மோட கோயிலு. நம்மாளு உள்ளே போனா என்னான்னு கேக்கறேன்…”
வட பழனி கோயில் பக்தர் ஒருவரின் கருத்து இது. பதிலளித்தவர் ‘சூத்திரர்’.
“நானே சொல்லக் கூடாது தான்… ஆனா வேற வழியில்லே. இன்னிக்கு ப்ராமின்ஸ் எவன் யோக்கியம்னு சொல்றீங்க? வெளியில தான் கோயில் காரியம் புண்ணியம்னு எல்லாம் நினைக்கிறாங்க. உள்ளே வந்து பார்த்தா தான் புரியும். பெரியார் கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்கா எவனாலயும் பதில் சொல்ல முடியலை. அதானே எல்லாரும் அந்தப் பக்கமா போறாங்க? இவங்களாலே இன்னிக்கு கடவுள் பக்தியே குலைஞ்சி போச்சிது. எத்தனை ஸ்காண்டல் வெளியே வந்திட்டு இருக்கு தெரியுமில்லே? சின்ன பசங்களை கோயிலுக்கு கூப்டா ‘போப்பா வேற வேலையில்லே’ அப்படின்னு ஃபோனை நோண்டிட்டே பதில் சொல்றான். இந்த ஆன்மீக சிஸ்டத்தோட அடிப்படையிலயே ஏதோ பிரச்சினை இருக்கு”
எம்மிடம் சலித்துக் கொண்ட மயிலை கபாலீஸ்வரர் கோயில் பக்தர் ஒரு பார்ப்பனர். ஓய்வு பெற்ற பேராசிரியர். முசுலீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான சமன்பாட்டை பராமரிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தேவை என்று எம்மிடம் வாதிட்டவர் – அதே குரலில் மத உரிமைகள் தடுக்கப்படும் போது மதமாற்றம் நடக்கத்தானே செய்யும் என்றும் கூறுகிறார். பார்ப்பனர்களைப் பற்றி மிக கடுமையான வார்த்தைகளில் ‘அர்ச்சிக்கிறார்’.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற ஒரு பார்ப்பனர்
வினவு செய்தியாளர் குழுவினர் பொங்கலன்றும் அதற்கு மறுநாளும் சென்னையின் பிரசித்தி பெற்ற கோயில்களில் அர்ச்சகர் வழக்கு குறித்தும் ஆகம விதிகள் பற்றியும் எடுத்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் சில உண்மைகளை உணர்த்துகின்றன. கருத்துக்கணிப்பிற்காக வெகுமக்களின் கோயில்கள் என்கிற வகையில் வடபழனி முருகன் கோயிலையும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலையும் தெரிவு செய்திருந்தோம். பார்ப்பன – மேல்நிலை ஆதிக்க சாதியினர் புழங்கும் கோயில்கள் என்கிற அடிப்படையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலையும் தெரிவு செய்தோம்.

கருத்துக்கணிப்பை அலசுவதற்கு முன் முடிவுகளைப் பார்க்கலாம்:
படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற கோவில் வணிகர்.
“திருட்டுப் பசங்க சார். சீசன்னாக்க உள்ளேர்ந்து அவுனுங்களே மாலைய கொண்டாந்து குடுத்துடுவாங்க. ஒரே மாலை பூ உதிர்ர வரைக்கும் ஒரு நாலஞ்சி ரவுண்டு போயிட்டு வரும்” என்றார் திருவேற்காடு கோயிலின் வெளியே தேனீர் கடை நடத்தி வருபவர்.
“எல்லாத்துக்கும் காசு தாங்க. 100 ரூபா குடுத்த சாமி மாலை தருவாங்க. 500 ரூபா குடுத்தா பெரிய மாலைய கழட்டி குடுப்பாங்க. காசு குடுத்தா நீங்க என்ன சாதின்னெல்லாம் பார்க்காம கருவறைக்கு உள்ளே விடுவாங்க. விடறது என்ன… கூட்டிட்டு போயி சாமி மடிலயே ஒக்காத்தி வைச்சாலும் வைப்பாங்க. ஆகமம் பத்தியெல்லாம் தெரியாது… ஆனா நான் இதே ஊர்ல ஐம்பது வருசமா இருக்கேன்… எங்க அப்பா தாத்தா காலத்துல இங்கெ அய்யிருங்க பூசை செய்யலை.. பேமசு ஆன பின்னாடி தான் அய்யருங்க வந்தாங்க” என்கிறார் இன்னொரு வியாபாரி.
திருவேற்காடு கோவிலில் உழைக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர வயது மற்றும் வயதான பெண்கள் நிறைய பேரைக் காண முடிந்தது. இவர்களிடம் பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு எதிர்மறையான பதிலே வந்தது.
“அய்யய்யோ.. பொட்டப் பசங்களையா உள்ளே விடனும்னு சொல்றீங்க.. அது பெரிய பாவம் தம்பி. கங்கைல குளிச்சாலும் அந்த பாவம் போகாதுப்பா…” என்று பதறினார் கருமாரியம்மன் கோவிலில் நாங்கள் சந்தித்த வீரம்மாள் என்கிற பெண்மணி. அதே கோவிலில் நாங்கள் சந்தித்த அவர் வயதை ஒத்த பலராலும் அந்தக் கேள்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 40 வயதுக்கு உட்பட்ட பெண் பக்தர்கள், “மாதவிடாய்க் காலம் முடிந்த பெண்களை அனுமதிக்கலாம்” என்று தெரிவித்தனர்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற இளம் பக்தர்கள்
அதே நேரம், பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பது தொடர்பாக மயிலை கபாலி கோவிலில் சந்தித்த பக்தர்கள் (பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதவர்கள் உள்ளிட்டு) பெருவாரியாக ஆதரித்தனர். கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்திருப்பதாக சலித்துக் கொள்வோர் நிறைய இருந்தனர். பால், சாதி வேறு பாடுகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பது இதற்கு மேலும் தேவையற்றது என்பதை கபாலீஸ்வரர் கோவிலில் சந்தித்த பார்ப்பனர்கள் சிலரே தெரிவித்தனர்.
”நல்லா புரோகிதம் செய்யக்கூடிய விவரம் தெரிஞ்ச வாத்தியார்களே இப்ப குறைஞ்சி போயிட்டாங்க. இப்ப புரோகிதம் செய்யறவங்களும் எல்லா முறைகளையும் தெரிஞ்சிட்டு வர்ரதில்லே. இதெல்லாம் இப்ப பாஷன் இல்ல சார். கோவில்ல அர்ச்சனை செய்யறவங்களுக்கெல்லாம் என்ன சம்பளம்னு நினைக்கிறீங்க? படிச்சிட்டு ஆன்சைட் போயி ஒரு நாள் சம்பாதிக்கிற காசை விட இவாளெல்லாம் ஒரு மாசம் பூரா வேர்வைல ஊறி சம்பாதிக்கிற காசு கம்மி தான் தெரியுமா?” கபாலி கோவிலில் சந்தித்த ஹரிஹரன் நீட்டிக் கொண்டே போனார். நாங்கள் இடைமறித்தோம்.
”சரி, அதான் வருமானம் இல்லைன்னு சொல்றீங்களே அப்ப வேற சாதிக்காரர்களும் இந்த வேலையை எடுத்துக்க முன்வந்தால் விடலாம் தானே?”
”வருமானம் இல்லைன்றதாலே தான் சொல்றேன். எதுக்கு நீங்கெல்லாம் இந்த சின்ன சம்பாத்தியத்துக்கு போட்டிக்கு வர்றேள்? நல்ல படிங்கோ.. பாரின் போங்கோ” ஹரிஹரனின் வயது எழுபதுக்கும் மேல்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற ஒரு ஏழைப் பெண்
70 வயதைக் கடந்த பார்ப்பனர்களின் குரல்கள் ஒரே தன்மையுடன் இருந்தது என்றால் நடுத்தர வயது மற்றும் இளைய வயதுடையோரின் குரல்களில் கொஞ்சம் ஜனநாயகம் ஏறியிருந்தது.
“பிரதர்! கோயிலைப் பத்தியெல்லாம் எழுதி என்ன சாதிக்கப் போறீங்க, அதுக்குப் பதிலா இங்க நடக்குறதப் பத்தி எழுதுங்க! அங்க நிக்கிறாங்க(அர்ச்சகர்கள்) பாத்தீங்களா ! இவங்க மோசடிக்கு ஒரு அளவே இல்ல! பாருங்க நம்ம கடவுள கும்புடுறதுக்கு தட்டுல உண்டியல் போடனும், அப்புறம் டோக்கன் வேற, இதுல ஸ்பெஷல் டோக்கன் வாங்குனா வரிசையில நிக்காம உடனே போயி பாத்துடலாமாம் …. காசு கொடுத்து வந்து பாருன்னு கடவுளா சொன்னான்?” இது ஐம்பதைக் கடந்த பார்ப்பனர் மகாதேவனின் கருத்து.
எம்மிடம் ஆர்வத்தோடு பேசிய அவரிடம், இந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இருப்பதால் தானே மத மாற்றங்கள் நடக்கின்றன என்று கேட்டோம். அதற்கு அவர்,
”விவேகானந்தரும் இங்கே சாதி ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம்னு சொல்லி இருக்கார். ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்களை உள்ள வரக்கூடாதுன்னு தடுத்தா எப்படி கோயில்ல கும்பிட வருவார்கள்? மதம் மாறத்தான் செய்வார்கள். முதல்ல இந்து மதத்துல உள்ள எல்லாரும் சரிசமம்-னு சட்டம் கொண்டு வரனும்” என்றார்.
இந்தக் கோவில்களில் இருபதுகளில் உள்ள இளைஞர்களைப் பார்ப்பது அரிதாகவே இருந்தது அதிலும், பார்ப்பனரல்லாத சாதியைச் சேர்ந்த இளைஞர்களை தேடித் தான் பிடிக்க வேண்டியிருந்தது. வடபழனி கோவில் பின்புற பிரகாரத்தில் நான்கு இளைஞர்களைப் பிடித்தோம். பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள். ஆளுக்கொரு தொடுதிரை கைப்பேசியை வைத்துக் கொண்டு ஏதோ நோண்டிக் கொண்டிருந்தனர். வின்சென்ட் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர்கள்.
இவர்கள் அர்ச்சகர் வழக்கு பற்றியோ, ஆகம விதிகள் பற்றியோ கேள்விப்பட்டிருக்கவில்லை. பிரச்சினை பற்றி நாம் விளக்கிய பின் கொந்தளித்து விட்டனர்.
“துட்டு வாங்கிட்டு தானே பூஜை செய்யறாங்க. அதான் யாரு வேணா செய்யலாமே” – அபிஷேக்

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற நடைபாதை வியாபாரம் செய்யும் பெண்மணி
“மச்சி அது நம்ப துட்டுடா.. நம்மளாண்ட பிச்சை எடுத்துனு நம்பளையே உள்ள விடமாட்டானா?” – கணேஷ்
“இவனுங்க கைல துட்டு குடுக்க கூடாதுடா..” – நந்தா
சமஸ்கிருதம் தேவபாஷை எனப்படுவதையும் தமிழ் நீச பாசை எனப்படுவதையும் பற்றிக் கேட்ட போது அவர்களின் எதிர்வினையில் மேலும் சூடு ஏறியது
“தமிழ்நாட்டுல பொறுக்கித் தின்னுகினு தமிழையே தப்பு சொல்றானுங்களா? தெர்த்தி விடனும் பாஸ்” – ஹரி
“சொம்மா வாய்ல வந்தத உளரிக் கொட்றான்.. கேட்டா அதான் தேவபாசையா?” – நந்தா.
இவர்கள் கோவிலுக்கு வந்ததைப் பற்றிக் கேட்டோம்.
“லீவு சார்… வீட்ல ஒரே போரடிச்சிது.. அதான் சும்மா வந்தோம்”
”சாமி கும்பிட்டாச்சா?”
“அதெல்லாம் வந்த ஒடனேயே ஒரு அட்னென்ஸ் போட்டுட்டோம்”
“அடிக்கடி வருவீங்களா?
“அய்யய்யே.. எப்பனா போரடிச்சா வருவோம்”

திருவல்லிக்கேணியில் பார்ப்பனர்களும், கடவுளும் உலா!
மதம், அரசியல் குறித்த கேள்விகளுக்கு பெரும்பாலும் தெரியாது என்றே பதிலளித்தனர் இளைஞர்கள். சிறுவர்கள் மட்டுமே பெற்றோருடன் வந்தனர்… இளைஞர்களை குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை. வெகு சிலர் மட்டும் தம் வயதை ஒத்தவர்களோடு கும்பலாக வந்திருந்தனர். அந்த வருகைக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்புமில்லை. ஏன் கோவிலுக்கு வந்தீர்கள் என்று கேட்டதற்கு இப்பிரிவினர் சொன்ன பதில் “சும்மா டைம் பாசுக்கு”
நாற்பதுகளில் இருந்தவர்களுக்கு ஓரளவு வழக்கு பற்றியும் அதன் பின்னணி பற்றியும் பரிச்சயம் இருந்தது. பெரும்பாலும் குடும்பமாக வந்திருந்தனர். இவர்கள் மத்தியில் பார்ப்பனர்கள் மேலான விமர்சன்ங்களும் தூக்கலாக இருந்தன. குறிப்பாக கோவிலில் தம்மை பார்ப்பனர்கள் மதிப்பதில்லை என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
”நம்ம காசுல தான் கோயிலே நடக்குது. இதுல, நம்ம கிட்ட அவனுங்க கடு கடுன்னு மூஞ்சிய காட்றதும், ஒருமைல வா போ-ன்னு விரட்றதும்.. இதே காசு குடுங்க, தூக்கி வச்சி கொண்டாடுவானுங்க. நான் காசு குடுக்கிற பழக்கமில்ல. நம்ம சாமிய பார்க்க எதுக்கு காசு குடுக்கனும்? வெளியில நம்மை பார்த்தா மனுசனா மதிக்கிறான். சில சமயம் இந்த அவமானத்துக்கு பேசாம கோயிலுக்கே வராம விட்றலாம்னு தோணும். ஆனா, ஒரு விசேசம்னா வீட்ல எல்லாரும் குடும்பமா செலவில்லாமே வந்து போறதுக்கு இதானே இருக்கு?”
கருப்பு சட்டைகளையெல்லாம் அய்யப்ப பக்தர்களாக்கி விட்டோம் – சிவப்புச் சட்டைகளையெல்லாம் செவ்வாடை பக்தர்களாக்கி விட்டோம் என்று காலர் தூக்கி விட்டுத் திரியும் இந்துத்துவ கும்பல் சமீபத்தில் அதிகரித்திருக்கும் ’பக்தியின்’ தன்மை யாதென்று ஆய்வு செய்து பார்த்தார்களா என்பது தெரியவில்லை. பெரும்பாலான பக்தர்களுக்கு ’பக்தி’ ஒரு அனிச்சையான பழக்கமாகத் தான் இருக்கிறதே ஒழிய உணர்வுப் பூர்வமான பங்கேற்பு இல்லை. கருவறையில் நிலவும் பார்ப்பனர் ஆதிக்கம் பக்தர்களின் ஒப்புதலோடு நிலவவில்லை என்பதை கருத்துக் கணிப்பின் முடிவுகள் உணர்த்தியது என்றால், காவி கும்பலின் பெருமை பீற்றலின் தராதரம் என்பதை பக்தர்களின் கருத்துக்கள் உணர்த்தியது.
அதே நேரம் பார்ப்பனமயாக்கலின் செல்வாக்கில் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம். பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது அதற்கு ஒரு சான்று! அதே நேரம் இந்து மதத்தில் மரபு ரீதியாக இருக்கும் அடிமைத்தனங்களை மக்கள் உரிய பொருளில் புரிந்திருக்கவில்லை. பல விசயங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. அதே நேரம் எல்லாரும் அர்ச்சகராவதில் என்ன பிரச்சினை என்று எளிமையாக கேட்கவும் செய்கிறார்கள். பார்ப்பன இந்துமதத்தின் அநீதிகளை உரிய முறையில் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது உச்சநீதிமன்றமோ இல்லை சங்கபரிவாரங்களோ மக்களின் கோபத்திற்கு பதில் சொல்ல முடியாது என்பது மட்டும் உண்மை.
இந்தக் கருத்துக் கணிப்பு நான்கு கோவில்களிலும் சுமார் 200 நபர்களிடம் எடுக்கப்பட்டது. சாதி, வர்க்கம், பால் ரீதியான பிரிவினைகளில் அனைத்தும் 50 : 50 என்று இருக்குமாறு தெரிவு செய்யப்பட்டது. குடியிருப்புகள், ஏனைய பொது இடங்களை விட கோவில்களே பொருத்தமாக இருக்குமென்று முடிவு செய்யப்பட்டது. இறுதியாக இந்துமுன்னணி சொல்வது போல இங்கே பக்தியும், ஆன்மீகமும் செழித்து வளர்ந்துவிட்டதாக சொல்வது கடைந்தெடுத்த பொய். மக்களுக்கு கோவிலும், வழிபாடும் ஏதோ தவிர்க்க முடியாத ஒரு சடங்கு, வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு இப்படியும் ஒரு சுமாரான தீர்வு உண்டு என்பதைத் தாண்டி பெரிய பிடிப்பு இல்லை.
– வினவு செய்தியாளர்கள்.

தொடர்புடைய பதிவுகள்




http://www.vinavu.com/2016/03/07/temple-survey/

அர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்!

அர்ச்சகர் வழக்கு – பார்ப்பன அறநிலையத்துறை சதி

Monday, September 22, 2014

பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்

பெரியார் பிறந்த நாளில் அவரது உணர்வை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் பற்றிய செய்தி, ஊடகங்களில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.


17-9-14 அன்று காலை 11-00 மணியளவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கருவறை முன்பாக அமர்ந்து போராடிய அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் அரங்கநாதன், பாலகுரு இவர்களுக்கு ஆதரவளித்த மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ராமசந்திரன், அரிராகவன், ராஜசேகர், நடராசன், சரவணசெல்வி மற்றும் உறுப்பினர்கள் உட்பட 15 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். பெரியார் பிறந்த நாளில் அவரது உணர்வை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த போராட்டம் பற்றிய செய்தி, ஊடகங்களில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று பெரியார் தொடங்கி வைத்த போராட்டத்தை முறியடிப்பதற்கு தமிழக அரசும், நீதிமன்றங்களும் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், ஊடக நிறுவனங்களும் இந்த ஜனநாயக கோரிக்கைக்கு எதிராக செயல்படுவது இப்போது அம்பலமாகியிருக்கிறது.
“2008 முதல் அர்ச்சகராக பயிற்சி பெற்று சாதி தீண்டாமை இழிவை சுமந்து கொண்டு இருக்கிறோம். மதுரை சிவாச்சாரியர்கள் நாங்கள் சாமி சிலையை தொட்டால் தீட்டாகிவிடும் என சொல்லிதான் உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவை பெற்றுள்ளனர். தமிழக அரசு வழக்கை நடத்தாமல் வாய்தா வாங்கி கொண்டு இருக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் இன்னும் எத்தனை நூற்றாண்டு காலம் பட்டர்களின் தீண்டாமைக் கொடுமையை பார்த்து கொண்டிருப்பாள்” என்பதை முறையிடவே அர்ச்சக மாணவர்கள் மீனாட்சியம்மன் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர். தமிழ் பக்தர்களுக்கு இதன் மூலம் தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். உச்சநீதிமன்றத்தில் அர்ச்சக மாணவர்கள் சார்பில் 2010 முதல் மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கு நடத்தி வருகிறது. தமிழக அரசு வாய்தா வாங்குவதால் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
மீனாட்சியம்மன் கோவிலில் விமான நிலையத்திற்கு செல்வது போன்ற காவல் துறை பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு இடையில் உள்ளே மாணவர்கள் சென்றனர். கருவறை முன்பாக பக்தர்கள் நின்று வழிபடும் இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் இருந்ததால் பட்டர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
12 மணி ஆனதும் கோவில் நடையை சாத்த வேண்டும் என பக்தர்களை நைச்சியமாக வெளியே போகச் சொல்லி உள் பிரகார நடையை சாத்தினர். உள்ளே மாணவர்களும் நமது வழக்கறிஞர்களும் இருந்தனர். பார்ப்பன பட்டர்களுக்கு ஆதரவாக கோவில் ஊழியர் நமது வழக்கறிஞரை தாக்க முயன்றார். நாமும் எதிர்த்து மிரட்டவே அவர் ஓடி விட்டார். அர்ச்சக மாணவர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் இந்து அறநிலையத்துறை அதிகாரி இணை ஆணையர், மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு வாரத்தை நடத்தினர்.
மாணவர்கள், “எங்கள் கோரிக்கை உரிய பதில் கிடைக்கும் வரை நாங்கள் வெளியே போக மாட்டோம்” என உறுதியாக கூறினர்.
“கோரிக்கையை மனுவாக தாருங்கள் நான் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்கிறேன்” என ஆணையர் கூறினார்.
“பல முறை கொடுத்து விட்டோம். சமீபத்தில் அறநிலையதுறை மானியக் கோரிக்கையின் போதும் தலைமைச் செயலகத்தில் மனு கொடுத்தோம். தற்போதும் தருகிறோம்” என அர்ச்சக மாணவர் சங்கத்தலைவர் அரங்க நாதன் மனு கொடுத்தார்.
மனுவில் “அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஆகமப்படி அமைந்த கோவிலில் பணி நியமனம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மதுரை பட்டாச்சாரியர்கள் பெற்ற தடை ஆணையை விளக்க தமிழக அரசு திறமையான மூத்த வழக்கறிஞரை வைத்து வழக்கை விரைவாக நடத்த வேண்டும். பணி நியமனம் கிடைக்கும் வரை பயிற்சி முடித்த மாணவர்களுக்கு இடைக்கால ஊதியமாக மாதம் ரூ 5,000 வழங்க வேண்டும்” என குறிப்பிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் கொடுத்தனர்.
“தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் 1,144 பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். தந்தை வழி வாரிசாக பணிபுரிபவர்கள் 574 பேர் மற்றும் வெறும் பரிந்துரை கடிதம் கொடுத்தும் கொடுக்காமலும் 411 பேர் அர்ச்சகராக இருக்கிறார்கள். அர்ச்சக மாணவர்களாகிய நாங்கள் முறையாக படித்து பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளோம். நாங்கள் பார்ப்பனர் இல்லை என ஒன்றை மட்டுமே வைத்து சாதி ரீதியாக தடுப்பது தீண்டாமை குற்றம் தான். இதை அகற்றும் வரை தொடரந்து போராடுவோம்” என அறநிலையத்துறை ஆணையரிடம் வாதிட்டனர்.
காவல் துறை, “அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுங்கள்” என அறிவுறுத்தினர்.
“நாங்கள் கோவில் நடை திறந்த பிறகு மீண்டும் 4-00 மணிக்கு போராட்டத்தை தொடருவோம்” என மாணவர்கள் காவல் துறையிடம் தெரிவித்தனர். “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது எங்கள் தனிப்பட்ட கோரிக்கை அல்ல, அனைத்து மக்களுக்கும் எங்கள் போராட்டத்தின் நியாயத்தை தெரிவிக்க வேண்டும். எனவே நாங்கள் கலைந்து போக மாட்டோம்” என உறுதியாக கூறினர்.
அனைவரும் மதியம் 3-00 மணியளவில் காவல் துறையால் கைது செய்யபட்டனர்.
போராட்டத்தின் போது
சாதி தீண்டாமை ஒழிக!
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் என்ன இழிபிறவிகளா?
பணி வழங்கும் வரை இடைக்கால ஊதியம் கொடு!
உச்ச நீதிமன்ற வழக்கை விரைந்து நடத்து!
தலித் ஜனாதிபதி, தலைமை நீதிபதி ஆகலாம்
அர்ச்சகர் ஆக முடியாதா?
ஆகமப்படி அமைந்த கோவிலில் பணி வழங்கு!
அனைத்து கோவில்களும் பொதுக் கோவில்
பார்ப்பன அர்ச்சகர்களின் தனிச்சொத்தல்ல!
அர்ச்சகர் பணி என்பது அரசு பணிதான்
என்பதை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்.
இந்த போராட்டம் தொடர்பாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு காலையில் பல பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். ஆனால், கோயிலுக்குள் நடந்த நீண்ட போராட்டம், வாக்குவாதங்கள், அதைத் தொடர்ந்து காவல் துறை கைது நடவடிக்கை இவை அனைத்துக்கும் பிறகும் டெக்கான் குரோனிக்கிள் ஆங்கிலப் பத்திரிகையைத் தவிர பிற பத்திரிகைகள் இந்த போராட்டம் குறித்த செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான ஜனநாயக போராட்டம் அனைத்து தளங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டியதற்கான அவசியத்தை இது வலியுறுத்துகிறது.





















தகவல்
மனித உரிமை பாது காப்பு மையம்,
மதுரை
9443471003, 9865348163
http://www.vinavu.com/2014/09/18/archagar-students-protest-in-madurai-meenakshi-amman-temple/

தொடர்புடைய பதிவுகள்


WWW.VINAVU.COM

Friday, August 8, 2014

பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக அர்ச்சகர் பள்ளி மாணவர்கள்

“பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது” என உச்ச நீதிமன்றம் 2002–ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
பதிவு எண் : 189/09
50, அர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை
வா. அரங்கநாதன்
மாநில தலைவர்
பத்திரிகை செய்தி
கோரிக்கைகள்
1. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடித்து மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்க வேண்டி
2. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி பெற்று 8 ஆண்டுகள் ஓடிவிட்டதால் வயது முதிர்ந்து வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே இடைக்காலமாக மாதம் குறைந்தபட்சம் ரூ.5000 ஊதியமாக வழங்க வேண்டியும் தமிழக அரசை வேண்டுகிறோம்.
அர்ச்சகர் மாணவர்கள்
206 மாணவர்கள் 2007 – 2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம்.
எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007 – 2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால் உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம், ‘ஆகமவிதிப்படி பார்ப்பன சிவாச்சாரியார்களைத் தவிர பிற சாதியினர் அர்ச்சகராகி, கருவறையில் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார்’ எனக் கூறி மதுரை சிவாச்சாரியார்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு தடை பெற்றுவிட்டனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கியதுடன், உச்ச நீதிமன்றத்தில் தங்களையும் வழக்கில் முக்கிய தரப்பினராக சேர்க்க வேண்டும் என போராடி வெற்றி பெற்றது, வழக்கை மனித உரிமைப்பாதுகாப்பு மையம் நடத்தி வருகிறது.
தமிழக அரசு 1971-ம் வருடம் வாரிசுரிமைப்பபடி அர்ச்சகர் பணி நியமனத்தை ஒழித்து, இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்தது. இச்சட்டத் திருத்தம் தங்கள் மத உரிமைக்கு எதிரானது என மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச்சேர்ந்த பார்ப்பனர்களும், 2 மடாதிபதிகளும் நேராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ராஜகோபாலாச்சாரியார், சங்கராச்சாரியார், ஜீயர் ஆகியோர் இவர்களுக்கு ஆணை வழங்கியதுடன், பிரபல வழக்குரைஞர் நானி பல்கிவாலாவை வாதாட ஏற்பாடும் செய்து கொடுத்தனர். வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து 14-03-1972 அன்று தீர்ப்பளித்தது. “அர்ச்சகர் என்பவரும் கோயில் ஊழியர்தான். வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமன உரிமையை ஒழித்து தமிழக அரசு இயற்றிய சட்ட திருத்தம் செல்லும். அரசை பொறுத்தவரை, அர்ச்சகர் நியமனம் மதசார்பற்றது, மத நடவடிக்கையாக கருத முடியாது” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
“அதே சமயம் கோயில் பூசகர் தெய்வ வழிபாட்டில் எவ்வளவு வல்லவராக இருந்தாலும், ஆகமங்கள்படி குறித்த வகையைச் (Denomination) சேர்ந்தவராகத்தான் இருத்தல் வேண்டும். எனவே, கோயிலின் மரபு, பழக்கவழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட இனத்தைச் சேராத ஒருவர், சாமி சிலையைத் தொட்டால் புனிதத் தன்மை கெட்டுவிடும்” என்பதை அரசு கருத்தில் கொண்டு, அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதை அன்றே தந்தை பெரியார், “ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம்” என நுட்பமாக கண்டித்தார். இன்றுவரை அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியாமல் இருப்பதற்கு காரணமே, மேற்படி அறிவார்ந்த நீதிபதிகள் வழங்கிய இத்தீர்ப்புதான். அரசியலமைப்புச் சட்டத்தில் பார்ப்பனர்களின் மத உரிமைகளுக்கு பாதுகாப்பாக உள்ள சரத்து 25, 26-ஐ ஒழிக்க வேண்டும் என்று பெரியார் பேசினார், இறுதி மூச்சுவரை கருவறை தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். இதன் விளைவாக தி.மு.க அரசாங்கமும் அதன்பிறகு அ.தி.மு.க அரசாங்கமும் அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்குறிப்பிட்ட சரத்துக்களை திருத்தியமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து பல கடிதங்கள் எழுதின.
தந்தை பெரியார்
தந்தை பெரியார், “ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம்” என நுட்பமாக கண்டித்தார்.
1972-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களையும் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த இக்குழு, 1982-ம் ஆண்டு தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அதில் “பூசையின்போது பிராமண அர்ச்சகர்கள் மந்திரத்தை தவறாக உச்சரிப்பது, மாற்றிச் சொல்வது, வேத வழிபாடுடைய ஸ்மார்த்த பிராமணர்கள் நடராசருக்கு பூசை செய்யும் மோசடிகள், முறையாக பயிற்சியின்றி பணியில் இருக்கும் அர்ச்சகர்கள்” என ஆகமத்திற்கு எதிராக நடைபெறும் பல்வேறு மாற்றங்களை பட்டியலிட்டுள்ளது. மேற்கண்ட ஆய்விலிருந்து, “தமிழகம் முழுவதும் முறையாக பயிற்சி வழங்கும் அர்ச்சகர் பள்ளிகளை நிறுவ வேண்டும், இந்து சமய அறநிலையச் சட்டத்தில் பழக்கவழக்கம் என்பதை ஒழித்து திருத்தம் செய்ய வேண்டும்” என அக்குழு பரிந்துரை செய்தது.
கேரளாவில் ஈழவர் சாதியைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டதை எதிர்த்து ஆதித்தியன் என்பவர் தொடுத்த வழக்கில், “பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது” என உச்ச நீதிமன்றம் 2002–ம் ஆண்டு தீர்ப்பளித்தது. “அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ள பழக்கவழக்கம், மரபுகள் செல்லத் தக்கதல்ல. அதோடு சரத்து 17-ன் படி பிறப்பால் பாகுபாடு பார்ப்பது தீண்டாமைக்குற்றம், மனித உரிமைகளுக்கு எதிரானது” என முற்போக்காக தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டுதான், தமிழக அரசு, இந்து அறநிலையச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த 2006-ம் ஆண்டு, முதலில் அரசாணையையும், பின்பு அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்கவழக்கம், மரபு என்பதை ஒழிக்கும் வகையில் அவசரச் சட்டத்தையும் (Ordiance) இயற்றியது. உடனடியாக மதுரையைச் சார்ந்த பார்ப்பன ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம், 1972 உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசரச் சட்டத்திற்கு தடையாணை பெற்றது. இதனால் திமுக அரசாங்கம் சட்டமன்றத்தில் சட்டமாக கொண்டு வந்தபோது சட்டத்திருத்தத்தில் உள்ள முக்கியப் பகுதியை விட்டு விட்டு சட்டம் இயற்றியது.
“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்” என 2006-ல் போடப்பட்ட அரசாணையின் மூலம், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம் மற்றும் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் பூசை முறைகள், பணியிலிருக்கும் அர்ச்சகர்களின் தகுதிகள் என ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கையாக சில பரிந்துரைகளை செய்தது. அதன்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய கோயில்களில் வைணவ பயிற்சி பள்ளிகளும், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய பள்ளிகளில் சைவ பயிற்சி பள்ளிகளும் அமைக்கப் பட்டது. மொத்தம் 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து, 2008-ல் தீட்சையும் பெற்றனர். ஆனால், தமிழக அரசோ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை.
archakar-bookஆலயத் தீண்டாமை, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான எமது போராட்டச் சூழலில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் உச்ச நீதிமன்ற தடையாணையைக் காரணம் காட்டி, தமிழக அரசு கைவிட்ட நிலையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் அதன் வழக்குரைஞர்களின் உதவியால் ( தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மாணவர்களை சந்தித்தனர். “கருவறைச் தீண்டாமையை ஒழிப்பது என்பது அரசால் மட்டுமே முடியும் காரியம் அல்ல. பணி நியமன பிரச்சனையுமல்ல, இது கருவறைத்தீண்டாமைக்கெதிரான, வரலாற்றுப் போராட்டம்” என்பதை விளக்கிப் பேசினோம். நாம் சங்கமாக ஒன்றுதிரண்டு, “தகுதியுடைய நாங்கள் கடவுள் சிலையை தொட்டால் எப்படி தீட்டாகும்? என மக்கள் கேள்வி எழுப்பும் போதுதான் தீர்வு கிடைக்கும்” என விளக்கினோம்.)
10-10-2009 அன்று திருவண்ணாமலையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மதுரை சிவாச்சாரியார்களுக்கு எதிராக மாணவர்களையும் ஒரு தரப்பினராக சேர்க்க வழக்காடியதன் பயனாக 8-03-2010 அன்று உச்ச நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவையும் பெற்றோம். வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், தீண்டாமையை மத உரிமையாக நிலைநிறுத்த முயலும் பார்ப்பனர்களைக் கண்டித்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரமும் செய்து வருகிறோம்.
இதைத் தொடர்ந்து, அர்ச்சகர் மாணவர் சங்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, மதுரை – திருவண்ணாமலையில் உண்ணாநிலைப் போராட்டங்கள், மீனாட்சி அம்மன் கோயிலை முற்றுகையிட்டுக் கைது, பெரியாரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தல், அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவராகிய நான் இந்து முன்னணி ரவுடிகளால் தாக்கப்பட்டது என தொடர் போராட்டத்தின் மூலமும், தொலைக்காட்சி பேட்டிகள், நாளிதழ், வார-மாத இதழ்களில் கருவறைத் தீண்டாமை குறித்து தொடர்ச்சியாக செய்திகளாக்கி மக்கள் ஆதரவை பெற தொடர்ந்து போராடி வருகிறோம்.
உச்ச நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசாரணைக்காக வந்த போது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவகாசம் கோரினார். இதையடுத்து, சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஆர்ப்பாட்டத்தை நடத்தி, “கருவறை தீண்டாமைக் குற்றமா? இல்லையா? இதில் சமரசம் எப்படி காண முடியும்” என கேள்வி எழுப்பி மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றோம். இதனை கருவறைத்தீண்டாமைக்கெதிரான சமூக நீதி போராட்டத்தின் பகுதியாக பார்க்க வேண்டுமென்று போராடி வருகின்றோம்.
பெரியார் சிலைக்கு மாலைகடந்த 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்துவிட்டது. பார்ப்பன அர்ச்சகர்கள் சார்பில் வழக்குரைஞர் பராசரன் தனது வாதங்களை முன்வைக்க தொடங்கிவிட்டார். தமிழக அரசு சார்பில் பி.பி.ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் நியமிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மூத்த வழக்குறைஞர் காலின் கன்சால்வேஸ் ஆஜராகிறார். இன்று வரை தமிழக அரசு இவ்வழக்கில் வாய்தா வாங்கிக்கொண்டு வருகின்றது. .
மதுரையில் மொத்தம் உள்ள 116 பார்ப்பன அர்ச்சகர்களில் 28 பேரும், மயிலை கபாலீசுவரர் கோவிலில் 41 பேரில் 4 பேரும்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். மற்ற பார்ப்பன அர்ச்சர்கள் முறைப்படி ஆகமம் பயிலாதவர்கள். ஆனால் எங்கள் சங்கத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் முறைப்படி ஆகமம் பயின்றிருந்த போதிலும் பிறப்பின் காரணமாக பாகுபடுத்தப்பட்டு வருகிறோம்.
1972 சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வாரிசுரிமை அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களில் உள்ள 1144 அர்ச்சகர்களில் 574 பேர் வாரிசுரிமைப்படி தான் இன்றுவரை பணி புரிந்து வருகின்றனர். மேலும் 411 பேர் பார்ப்பனர்களின் பரிந்துரையின்பேரில் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றவர்கள். இது கருவறைத் தீண்டாமையாகும். அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வருகிறோம். அது மட்டுமல்ல இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.
எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண உதவியாக தலா ஒருவருக்கு ரூ 5000 வழங்கி ஆணையிட வேண்டும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
வா.அரங்கநாதன்
நாள் : 04.08.2014
இடம் : சென்னை.
அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட அர்ச்சக மாணவர்களுக்கு இடைக்காலமாக மாதம் ரூ.5000 ஊதியம் வழங்க வேண்டியும் கோரிக்கை மனு.
விடுநர்:
வா.அரங்கநாதன், மாநில தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு,
நெ.128, அரசமரத் தெரு, திருவண்ணாமலை.
பெறுநர்:
1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை.
2. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்,
தலைமைச்செயலகம், சென்னை.
3. உயர்திரு.இந்து சமய அறநிலையத்துறைச் செயலர் அவர்கள்,
தலைமைச்செயலகம், சென்னை.
பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
பொருள்:
1. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடித்து மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்க வேண்டி
2. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இடைக்காலமாக மாதம் குறைந்தபட்சம் ரூ.5000 நிவாரண ஊதியமாக வழங்க வேண்டி
பெரியார் சிலை முன் ஆர்ப்பாட்டம்எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007-2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால் உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம் மதுரை சிவாச்சாரியார்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் அனைத்து சாதி அர்ச்சகர் ஆக தடை பெற்றுவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசாரணைக்காக வந்த போது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவகாசம் கோரினார். அதன்பிறகு 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்துவிட்டது. மதுரை சிவாச்சாரியர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பராசரன் அவர்கள் தனது வாதங்களை முன்வைக்க தொடங்கினார். தமிழக அரசு சார்பில் பி.பி.ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் ஆஜரானார். ஆனால் வழக்கு அதற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 08.07.2014 அன்று பட்டிலிடப்பட்டாலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வருகிறோம். அது மட்டுமல்ல இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.
எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண ஊதியமாக ஒவ்வருவருக்கும் தலா ரூ.5000 வழங்கி ஆணையிட வேண்டும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
வா.அரங்கநாதன்
நாள் : 04.08.2014
இடம் : சென்னை.

தொடர்புடைய பதிவுகள்

Vinavu