Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Sunday, December 12, 2010

வீடு புகுந்து அடிப்போம்: சொன்னதை செய்த இந்து முன்னணியினர் !

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் 6 இடங்களில் அர்ச்சக பயிற்சிப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.
IMG_5020.JPG

அந்த பயிற்சி நிலையங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட 260 மாணவர்கள் பயிற்சியை முடித்தனர். அதனால் இவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கக்கூடாது என மதுரை பாட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

இதனால் அர்ச்சக பயிற்சி முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் தங்களை அர்ச்சககர்களாக நியமிக்க வேண்டும் என்று கேட்டும், தொடர்ந்து அர்ச்சக பயிற்சிப்பள்ளியை நடத்த வேண்டும் என்று கூறி, மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தங்களது கோரிக்கை வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக 6 அர்ச்சக பயிற்சி மாணவர்களூம் இணைந்து தமிழ்நாடு அர்ச்சக மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலம் துண்டு பிரசுரங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Rangan 1.jpg
தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்து போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனை பொதுமக்களூக்கு தெரியப்படுத்த தமிழகம் முழுவதும் துண்டுபிரசுரங்களை கொடுத்து வருகின்றனர்.

இரண்டு நாட்களூக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் முன்பு நின்றபடி அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ரங்கநாதன் தலைமையில் மாணவர்கள் துண்டு பிரசுரங்களை தந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திருவண்ணாமலை இந்து முன்னணி நிர்வாகிகள் எங்களூக்கு எதிர்ப்பாக போராட்டம் இனியும் செய்தால் வீடு புகுந்து அடிப்போம் என எச்சரித்துள்ளனர்.

100_1834.JPGஇதையடுத்து அர்ச்சக மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் பாண்டியனிடம் புகார் தெரிவித்தனர். இதனை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் நேற்று மாநிலத்தலைவர் ரங்கநாதனை பேருந்து நிலையம் அருகே அடித்துள்ளனர். அவர் சத்தம் போட்டதால் தப்பிவிட்டனர்.
பின்னர் ரங்கநாதனின் வீட்டிற்கும் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகிறார் ரங்கநாதன்.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?


தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.

இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் இந்த மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் இம்மாணவர்களை நாங்கள் சங்கமாகத் திரட்டினோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தோம். இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் இவர்களுக்கான சான்றிதழே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை. இவ்வழக்கு 2010, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இறுதி விசாரணைக்கு வருகிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சார்பில் இவ்வழக்கில் நாங்கள் இணைந்து (implead) கொண்டிருக்கிறோம்.

பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது. “இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.

ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள் இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர். அவர்களில் தேவநாதன் போன்ற “ நல்லொழுக்க சீலர்களும்“ அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.

மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் பட்டர்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இந்தக் கணம் வரை தில்லைக் கோயில் தீட்சிதர்கள், நகைகளையும், கணக்குகளையும், நிர்வாகத்தையும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. அரசும் அவர்கள் மீது நடவடக்கை எடுக்கவில்லை.

அரசின் ஆணைகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் துச்சமாக மதிக்கும் அர்ச்சகர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசைக் கோருகிறோம். தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்குரைஞர் திரு. பராசரன் அவர்கள்தான், அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக மதுரை பட்டர்கள் சார்பில் வாதாடுகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொருத்தமான தகுதி வாய்ந்த மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி, தமிழக அரசு இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தலையிட்டிருக்கிறோம். ஆலயத்தீண்டாமையை ஒழிப்பதற்கான இந்த முயற்சியில் இறுதிவரை போராடுவோம்.

(Source:- http://www.vinavu.com/2010/02/09/hrpc-case/)

ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!

பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை

கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது.

தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அரச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு மதுரை பார்ப்பன அர்ச்சகர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியதும் அதனால் தி.மு.க அரசு ஜகா வாங்கியது குறித்தும் முன்னர் நிறைய எழுதியிருக்கிறோம். தொடர்புடைய கட்டுரைகளை கீழே வாசிக்கலாம்.

அதை எதிர்த்து திருவண்ணாமலை பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் படிப்பு படித்த அனைத்து சாதி மாணவர்களையும் அணிதிரட்டி ம.உ.பா.மை பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே அவர்களை சங்கமாக்கியதோடு இந்த சமத்துவ போராட்டித்திற்காக விடாதும் போராடி வருகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில்தான பெரியார் சிலைக்கு அர்ச்சக மாண்வர்கள் மரியாதை செய்யும் கண்கொள்ளாக் காட்சி இடம்பெற்றிருக்கிறது. பெரியார் கண்ட சமத்துவம் கோவிலில் வருவதற்கு இது முன்னோட்டம் என்பதோடு ஆலயத்தில் தொழில் செய்யும் அர்ச்சகர்கள் சமூகத்தோடு சமமாய் இரண்டறக் கலப்பதற்கும் இது உற்சாகமளிக்கும் செய்தி.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் போராட்டம் வெல்வதற்கு வாழ்த்துக்கள்!!

________________________________________________________________________________________

இது தொடர்பாக ம.உ.பா.மை வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரம்:

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்னைத்து சாதியினரையும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கும் நோக்கத்துடன் 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது. இந்தப் பள்ளிகளைத் தொடங்கியவுடனேயே, மதுரைக் கோயிலைச் சேர்ந்த பார்ப்பன அர்ச்சகர்களும் அவர்களுடைய சங்கமும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த சிவாச்சாரியார்கள் மற்றும் வைணவ பட்டாச்சாரியார்கள் தவிர வேறு யாருக்கும் சாமி சிலையைத் தொட்டு பூசை செளிணியும் அருகதை கிடையாது; பூசை முறைகளையும் மந்திரங்களையும் கற்றுத் தேறியிருந்தாலும், பார்ப்பனர்களைத் தவிர மற்ற சாதியினர்க்கு அர்ச்சகராகும் அருகதை கிடையாது; அவர்கள் தொட்டால் சாமி சிலை மட்டுமின்றி, கோயிலே தீட்டாகி விடும்; அந்தச் சிலையிலிருந்து கடவுளும் வெளியேறிவிடுவார்; இதன் காரணமாக கோயிலுக்கு வருகின்ற இந்து மதத்தைச் சேர்ந்த இலட்சக் கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்காலத் தடையையும் பெற்றுவிட்டனர்.

இதன் காரணமாக, மேற்கூறிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து, சான்றிதழும் வாங்கிய 206 மாணவர்களை தமிழக அரசு பணி நியமனம் செய்யவில்லை. மதுரை அர்ச்சகர்கள் பெற்றிருக்கின்ற தடையாணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது. மாணவர்கள் சார்பில் நாங்களும் வழக்கு தரப்பினர்களாக சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறோம். நீதிமன்றத் தடை காரணமாக எல்லா அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன.

இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களில் பிறந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், மருத்துவர் ஆகலாம், பொறியாளர் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், குடியரசுத் தலைவராகக் கூட ஆகலாம் ஆனால் கோயில் அர்ச்சகராக முடியாதாம். அந்த வேலைகளுக்கெல்லாம் தேவைப்படுகின்ற அறிவையும் திறமையையும் காட்டிலும் அதிகமான அறிவும் திறமையும் அர்ச்சகர் வேலைக்கு தேவை போலும்!

அப்படியே பார்த்தாலும் இந்த 206 மாணவர்களும் ஒன்றரை ஆண்டு காலம் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், அன்றாடம் காலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையில்
இவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதவும், அபிசேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம் முதலானவற்றை செய்யவும் முறையாகப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒழுக்கமானவர்கள்தானா என்று சோதித்து, அதன் பின்னர்தான் சைவ, வைணவப் பெரியோர்கள் இவர்களுக்கு தீட்சையும் வழங்கியிருக்கிறார்கள். எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் பிறப்பால் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அல்ல என்பதற்காக அர்ச்சகராக முடியாது என்கின்றனர் பார்ப்பனர்கள்.

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்காஞ்சிபுரம் தேவநாதனையும், சங்கராச்சாரியையும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. சாமி கும்பிட வந்த பெண் பக்தர்களை மயக்கி, மிரட்டி கோயில் கருவறையை படுக்கையறையாக்கி அதைப் படமும் எடுத்தவர் தேவநாத சிவாச்சாரியார், தன்னுடைய காமலீலைகளைத் தட்டிக்கேட்ட குற்றத்துக்காக சங்கரராமன் என்ற பார்ப்பனரை, வரதராஜ பெருமாளின் கண் முன்னாலேயே போட்டுத் தள்ளியவர் சங்கராச்சாரியார். இரண்டு பேரும் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் என்று புகழப்படும் சிதம்பரம் தீட்சிதர்களோ, அம்மன் தாலியையே அறுத்து விற்றவர்கள்; ஆடல்வல்லானுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பொய் கையெழுத்து போட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விற்றதற்காக இவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கோயிலுக்கு சொந்தமான 2500 ஏக்கர் நிலத்தில் தீட்சிதர்கள் எவ்வளவு மிச்சம் வைத்திருக்கிறார்கள் என்று வருவாய்த்துறை ஆவணங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். பிறப்பால் உயர்ந்த உத்தமர்களின் யோக்கியதைக்கு இவை சில சான்றுகள் மட்டும்தான். ஒவ்வொரு கோயிலிலும் என்ன நடக்கிறது என்பது அன்றாடம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களாகிய உங்களுக்குத் தெரியும்.

போலீசிடம் பிடிபடும்வரை எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து கொண்டுதான் தேவநாதன்களும் தீட்சிதர்களும் கடவுளைத் தொட்டுப் பூசை செய்திருக்கிறார்கள். இவர்கள் தொட்டு ஓடிப்போகாத கடவுள், பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் தொட்டால் ஓடிப்போய் விடுவார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் பக்தர்களாகிய நீங்களெல்லாம் அப்படி நம்புவதாகச் சொல்லித்தான் மதுரைக் கோயில் அர்ச்சகர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்கள்.

பார்ப்பனர் அல்லாத சாதியில் பிறந்தவர்கள் தமிழ்நாட்டின் பல கோயில்களில் அய்யனாருக்கும், மாரியம்மனுக்கும், அங்காள பரமேசுவரிக்கும் பூசை செளிணியவில்லையா? அந்தச் சிலைகளிலெல்லாம் கடவுள் இல்லையா? மாரியம்மனைத் தொடலாம், மீனாட்சியம்மனைத் தொட்டால் மட்டும் தீட்டா? பிறப்பால் புனிதமானர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த பட்டாச்சாரியார்களும் சிவாச்சாரியார்களும், திருப்பாணாழ்வாரையும், நந்தனாரையும் விடக் கடவுளுக்கு நெருக்கமானவர்களா? அல்லது வள்ளலாரையும் ஐயா வைகுந்தரையும் நாராயணகுருவையும் விடப் புனிதமானவர்களா?

ஆலயத் தீண்டாமையை எதிர்ப்போம்படிப்பறிவில்லாத ஒரு பாமரன் கூடக் கேட்கக் கூடிய கேள்விகள் இவை. ஆனால் இப்படிப்பட்ட கேள்விகள் எதையும் கேட்காமலேயே பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தடையாணை வழங்கியிருக்கிறதே, அது ஏன்? ஏனென்றால், பார்ப்பனரல்லாதவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று பக்தர்களாகிய நீங்கள் நம்புவதாக உச்சநீதிமன்றத்தில் சொல்லி தடை ஆணை வாங்கியிருக்கிறார்கள் மதுரை அச்சர்கர்கள். இந்த 206 மாணவர்கள் அர்ச்சகர்களாகி, சாமி சிலையைத் தொட்டுப் பூசை செய்வதால் கோயிலைவிட்டே கடவுள் ஓடிவிடுவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பக்தர்களாகிய நீங்களெல்லாம் பிறப்பால் கீழானவர்கள் என்று நீங்களே நம்புகிறீர்களா? இல்லை என்றால் அதை நீங்கள் சொல்ல வேண்டும். உரத்துக் குரல் எழுப்பவேண்டும்.

இது 206 மாணவர்களின் வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சனை அல்ல. நம் அனைவருடைய மானப்பிரச்சனை. இந்த வேலை இல்லையென்றால் இன்னொரு வேலையை அவர்கள் தேடிக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் அர்ச்சகர்களாகவில்லை என்றால், பிறப்பால் கீழானவர்கள், தீட்டானவர்கள் என்ற இழிவை நாம் எப்படி போக்கிக் கொள்ள முடியும்? எனவே இது மாணவர்களின் பிரச்சினை அல்ல, நம்முடைய மானப்பிரச்சனை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இது ஒரு தீண்டாமைக் குற்றம். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் வேதம் படிக்கக்கூடாது, சூத்திரன் கல்வி கற்கக்கூடாது என அன்றைக்குச் சொன்னது மனுநீதி. இன்றோ, அப்படியே படித்து விட்டாலும் அர்ச்சகராகக் கூடாது என்கிறது நீதிமன்றம். ஆகமம், சாத்திரம், சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும் இந்த அநீதிக்குப் பெயர்தான் தீண்டாமை. தொட்டால் தீட்டு என்ற இந்தத் தீண்டாமையை சமூகத்தில் அமல்படுத்தினால் இன்று அது சட்டப்படி கிரிமினல் குற்றம். ஆனால் கோயிலுக்குள் அமல்படுத்தினால் அதன் பெயர் சாத்திரம், சம்பிரதாயம்.

இதற்கு எதிராகத்தான் அன்று பெரியார் குரல் எழுப்பினார். இன்று நாங்கள் போராடுகிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கும் போட்டிருக்கிறோம். நீதிமன்றத்தில் மட்டும் வழக்காடித் தீர்த்துக் கொள்வதற்கு இது சொத்துப் பிரச்சனை அல்ல. நம் அனைவரின் சுயமரியாதைப் பிரச்சனை. எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக நீங்கள் அனைவரும் குரல் எழுப்பவேண்டும் என்று கோருகிறோம். ஆலயத் தீண்டாமை எனும் இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் நடத்தும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசே!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு கடந்த 4
ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள
தடையாணையை நீக்க விரைந்து நடவடிக்கை எடு!
ஆலயங்களில் தீண்டாமையை கடைபிடிக்கும் பார்ப்பனர்களை
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்

_________________________________________________________

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 90474 00485

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 94432 60164


(Source:- http://www.vinavu.com/2010/09/17/untouchability-in-temples/)

Sunday, March 28, 2010

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!



அறிமுகக் குறிப்பு: அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி அரசு ஒரு அரசு உத்தரவை(GO) வெளியிட்டது. அதன்படி சம்பிரதாயம், மரபு என்ற பெயரில் மற்ற சாதியினர் அர்ச்சகராவதை தடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க அர்ச்சகர் பள்ளியும் திறக்கப்பட்டது. மாணவர்களும் சேர்க்கப்பட்டு பயிற்சி தொடங்கியது. இடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் பார்ப்பன அர்ச்சகர்கள் இந்த அரசு உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்.



இதற்குப் பிறகு தி.மு.க அரசு வெளியிட்ட அவசரச் சட்டம், சட்டம் இரண்டிலும் மேற்கண்ட சம்பிரதாயம், மரபுக்கெதிரான என்ற வரிகள் இல்லை. அதாவது இந்த சட்டப்படியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்பதுதான் அதன் பொருள். பார்ப்பனர்களின் நீதி மன்ற தடையாணையை முறியடிக்க வேண்டிய கருணாநிதி அரசு அதற்குப் பதில் நீதிமன்றத்தின் ஆணைக்கு பங்கம் வராமல் நடந்து கொள்ள முடிவெடுத்தது. அர்ச்சகர் பள்ளியில் முதல் அணியாய் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இப்போது இந்த பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கப்படவில்லை.

தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடுவதற்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. அந்த மாணவர்களை அணிதிரட்டி சங்கம் அமைத்து வீதியில் இறங்கிய பிறகுதான் அவர்களுக்குரிய சான்றிதழே அளிக்கப்பட்டது. அடுத்து இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் சென்று வாதடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் பார்ப்பனர்கள் மற்றும் தி.மு.க அரசின் சதிகளை விளக்கும் வண்ணம் தொடர் பிரச்சாரமும் செய்யப்படுகிறது. இங்கே அதை ஒட்டி சமீபத்தில் மதுரையில் அந்த அர்ச்சக மாணவர்கள் பங்கேற்ற உண்ணாவிரதத்தை ம.உ.பா.மை நடத்தியது. அதன் பதிவு கீழே தரப்படுகிறது.

___________________________________

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம், ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து மதுரையில் 10.3.2010 புதன்கிழமை காலை 9.00 மதி முதல் 5.00 மதி வரை மதுரை ஜான்சிராணி பூங்கா அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு ஆகியவை இணைந்து நடத்திய இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்டம் சற்றும் கலையாமல் அமர்ந்திருந்தது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் 29 பேர் அர்ச்சகர்களாகவே கலந்து கொண்டனர். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில ஒருங்கிணைப்பாளர் ராஜூ கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சிதம்பரம் நடராசர் கோவிலை மக்கள் சொத்தாக்கியதைப் போல அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் பிற போராட்ட அமைப்புகளும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தலைமை உரையாற்றிய ராஜூ “அரசியல் சட்டம் 17வது பிரிவு தீண்டாமை குற்றம் என்று கூறுகிறது. ஆனால் ஆலய கருவறைக்குள் பார்ப்பனர் அல்லாதவர்கள் நுழைய முடியாது என்ற தீண்டாமை இருந்து வருகிறது. அரசியல் சட்டமா? ஆகம விதிகளா? என்று கேள்வி எழும்போது உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது? சட்டப்படி போராடி தீர்வு கண்டாலும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் பிற சாதியினரை நுழைய அனுமதிப்பார்களா? அனுமதிக்கமாட்டார்கள் என்பதை சிதம்பரம் போராட்ட அனுபவம் உணர்த்துகிறது. எனவே மக்கள் இந்த கோரிக்கைக்கு பெருவாரியாக ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான் இந்தப் போராட்டம் வெல்லும்” என்று வலியுறுத்தினார்.

உண்ணா நிலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட அர்ச்சக மாணவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த தவறவில்லை. மேடைகளில் பேசிப் பழக்கமில்லாதவர்கள் மந்திரம் மற்றும் பாடல் வடிவங்களில் தங்களுடைய திறனை வெளிப்படுத்தினர்.

“வேதம், ஆகமம் அதன் விதிகள் சொல்லுகின்ற அடிப்படையில் பார்ப்பனர்கள் யாருமே இல்லை. ஆகம விதிகளுக்கு புறம்பாக கருவறைக்குள் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மந்திரம் சொல்லும் போது வருகிற கடவுள் நாங்கள் சொல்லும் போது மட்டும் வராது என்று ஆகம விதிகளை நீதிமன்றத்தில் காரணம் காட்டுகின்றார்கள். ஆகம விதிகளின் படி தலைவழுக்கையாக இருந்தால் கூட அர்ச்சகராக இருக்க தகுதியில்லை. திருமணமாகி பிள்ளைகள் பெற்றவர்கள் மட்டும் தான் அர்ச்சகராக இருக்க வேண்டும். ஊனம் இருக்கக் கூடாது. பத்துவிரல்களுக்கு மேலோ, கீழோ இருக்கக் கூடாது.”

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவர் ஆனந்தன் பார்ப்பனர்களைப் போலவே தோற்றத்தில் இருந்தார். ஆனால் பூணூல் மட்டும் இல்லை. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மிக அழகாக, துல்லியமாக மந்திரங்களை ராகத்துடன் அவர் பாடிக் காட்டி இது எந்த வகையில் பார்ப்பனர்களின் திறமைக்கு குறைவானது என்று கேட்டார்.

மேலும் “படித்து அர்ச்சகராகி நமது பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை வாழுமென்று எதிர்பார்த்த பெற்றோர்களும், நாங்களும் இப்போது வேறு வழியில்லாமல் திகைத்துக்கொண்டிருக்கின்றோம். நம்முடைய பிள்ளையின் எதிர்கால வாழ்க்கை வீணாகி விடுமோ என்று கவலைப்படுகின்றனர். இதற்கு யார் காரணம். உச்சநீதிமன்றத்தில் தடைஆணை பெற்ற மதுரை பார்ப்பன பட்டர்கள் தான் இதற்கு காரணம். பார்ப்பானுடைய பிள்ளைகள் பட்டம் பெறாமலே, தகுதியில்லாமலே அர்ச்சகர்களாக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தகுதி பெற்றவர்கள், முச்சந்தியிலே நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் இந்த வேலையை செய்யாமலிருந்திருக்கலாம். அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகராக்கி விட்டோம் என்று பெயரளவில் செய்து விட்டு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.” என்றும் குமுறினார்.

மாணவர் சங்க பொருளாளர் திரு.சண்முகம் பார்ப்பனர்களின் பகல் வேசத்தை தோலுரித்துக் காட்டினார். “தன்னை ஒரு பூஜைக்காக அழைத்துச் சென்ற பார்ப்பனர் ஒருவர் தன்னையும் ஒரு பார்ப்பனராகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். ஹோமம் ஆரம்பிக்கும் முன் ஒரு சரம் பான்பராக்கை எடுத்து எனக்கு இரண்டு கொடுத்தார். எனக்குப் பழக்கமில்லை என்று சொன்னேன். அவரோ இதைப் போட்டால் தான் எனக்கு மந்திரமே வரும் என்று சொன்னார். ஆறிப்போன காப்பியை ஹோமத்தில் சுடவைத்து குடித்தார். மறு நாள் காப்பி வரவில்லை என்பதால் ஹோமத்திற்காக வைத்திருந்த பாலை எடுத்து ஹோமத்தில் வைத்து காப்பி போட்டுக் குடித்தார். இது தான் பார்ப்பன அர்ச்சகர்களின் லட்சணம்.” என்றார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர் ஒருவர் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மந்திரங்களை மிக இனிமையாக பாடி, தான் எத்தனையோ திருமணங்கள் மற்றும் கிரகப்பிரவேசங்கள் நடத்தி வைத்திருக்கிறதாகவும் அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள் அவர்களைத் தள்ளியா வைத்துவிட்டார் என்று வினா எழுப்பினார்.

மாணவர்கள் சிலர் “பள்ளியில் பயிற்சி பெறும் போது எப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தோம். எவ்வளவு நம்பிக்கையோடு கல்வியை கற்றோம். அத்தனையும் பார்ப்பனர்களுடைய சாதி வெறியினாலே தகர்க்கப்பட்டு விட்டது. அதற்கு சட்டமும் துணை நிற்கிறது” என்று மனம் வருந்தினர். மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர விடாமல் பல்வேறு வேண்டாத சக்திகள் தடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மதுரை மாணவர் மாரிமுத்து முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மனது வைத்தால் நாங்கள் எல்லோரும் அர்ச்சகர் ஆகிவிடலாம் என்று கருணாநிதிக்குக் கோரிக்கை வைத்தார்.

பார்ப்பனர்கள் கருவறைக்குள் பிற சாதியினர் நுழையக்கூடாது. தாங்கள் அழைக்கும் போது மட்டுமே கடவுள் வருவார் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய பிள்ளைகளையெல்லாம் கலெக்டர், செக்கரட்டரி, வங்கி மேலாளர், தொழில் அதிபர்கள் ஆக்கிவிட்டு சொகுசாக வாழ்கின்றனர். பார்ப்பனர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்று ஆகமங்கள் சொல்கின்றன. ஆனால் இந்தியாவிலுள்ள பெரும்பாலான பார்ப்பனர்களின் வாரிசுகள் கடல் கடந்து கண்டம் கடந்து பல நாடுகளில் வாழ்கின்றனர். பிற சாதியினர் கருவறைக்குள் நுழையக்கூடாது என்று சொல்கின்ற பார்ப்பனர்களைப் பார்த்து நீங்கள் கருவறையைத் தவிர வேறு எங்கும் வரக்கூடாது என்று நாங்கள் சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அர்ச்சகர் வேலையைத் தவிர வேறு வேலை கிடையாது என்று சொன்னால் ஒப்புக் கொள்வார்களா? எல்லா இடத்திலும் அவர்கள் தங்களை முன்னணியில் வைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நமக்கெல்லாம் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது எந்த வகையான நீதி?

சாதி, தீண்டாமை, அர்ச்சகராகுவதற்கான தடை, தங்கள் மூலமாக மட்டுமே கடவுள் வருவார் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கை இவற்றுக்கெல்லாம் பார்ப்பனியமே காரணம் என்பதை மாணவர்கள் உணர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே. ராமசாமி பேசும் போது “நித்யானந்தா, சங்கராச்சாரி போன்றவர்களுடைய காமவக்கிரங்களுக்கு அடிப்படை கிருஷ்ணனுடைய லீலைகள்தான். கிருஷ்ணன் ஒழுக்கக் கேட்டினுடைய சின்னம். அவன் தமிழ் கடவுளே அல்ல. ராமன் கடவுளுடைய அவதாரம் என்று சொல்வதும் உத்தமன் என்று சொல்வதும் பொய். பார்ப்பனர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏமாற்று வேலை. நான் ஒருமுறை கோவிலுக்குச் சென்ற போது அங்கே அர்ச்சகர் இல்லை. அர்ச்சகர் இதோ வருவார் அதோ வருவார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அர்ச்சகர் வந்த பாடில்லை. பொறுமை இழந்த நான் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்வேன் எனக்கு எல்லா மந்திரங்களும் என்று கூறி கருவறைக்குள் நுழைய முயற்சி செய்தேன். அதற்குள் பட்டரை அழைத்து வந்துவிட்டார்கள். சிவாச்சாரியார்கள் பட்டாச்சாரியார்களை விட ஆகம வேத மந்திரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். என்னுடன் மோதத் தயரா என்று நான் சவால் விட்டேன். மதுரையிலுள்ள திருப்புகழ் பக்த சபையை கட்டிக்காத்தவர்களிலே நானும் ஒருவன்” என்று கூறினார்.

குச்சனூர் ஆதீன நிர்வாகி குச்சனுர் கிழார் அவர்கள் “வடநாட்டு கடவுளர்களையும் கந்த சஷ்டி, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி போன்ற விழாக்களை தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு. நம்மை அறியாமலேயே கொண்டாட வைத்து விட்டார்கள். விநாயகன், ராமன், கிருஷ்ணன், ராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் தமிழர்களுக்குரியதே இல்லை” என்று அடித்துக் கூறிய அவர் சைவ சித்தாந்தம் பற்றி அவர் வெளியிட்ட இரண்டு நூல்களை மேடையில் அறிமுகம் செய்து பலரும் அதை வாங்கி சென்றார்கள்.

திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை தலைவர் வழக்கறிஞர் திரு.கி.மகேந்திரன் கி.மகேந்திரன் பேசியது : “1970ல் தந்தை பெரியார் கர்பக்கிரக நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். அப்போது ஆட்சியில் இருந்த கருணாபிதி இதற்காக நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம். என்னுடைய அரசு அதற்கான சட்டம் ஒன்றினை இயற்றும் என்று கூறினார். கர்ப்பக்கிரகத்துக்குள் நிற சாதியினர் நுழைய முடியாத பிலை என்னுடைய நெஞ்சிலே தைத்திருக்கின்ற முள் என்று கூறினார். பெரியார் மறைந்த போது பெரியாரின் நெஞ்சிலே தைத்த முள்ளோடு அவரை நான் புதைக்கும்படியாக ஆகிவிட்டது என்று கருணாநிதி கூறியதை” கருணாநிதிக்கு நினைவுபடுத்தினார்.

தமிழ்நாடு வழக்கறிஞர் தமிழ் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சின்ன ராஜா, ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி, மதச்சார்பற்ற ஜனாதாத்தள பிரமுகர் வேலுச்சாமி, ம.க.இ.க தோழர்கள் கதிரவன், எழில்மாறன், வி.வி.மு தோழர் குருசாமி, பு.ஜ.தொ.மு.தோழர் நாகராஜன் ஆகியோர் உரையாற்றினர். ஆதித் தமிழர் பேரவை மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்கள் சிலரும், தனிநபர்களும், தாங்களும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதிலும் நேரமின்மையின் காரணமாக அவர்களுக்கு வாய்ப்பளிக்க இயலவில்லை. மாலை 5.15 மதியளவில் குமுடி மூலை ஆறுமுகசாமி அவர்கள் போராட்டத்தை முடித்து வைத்தார். அனைத்து ஊடகங்களும் செய்தி சேகரித்துச் சென்றன.

போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் முழங்கப்பட்டன. அதன்பின் அர்ச்சக மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து “”"”வாழ்மிகு வராது பொய்க மதிவளம் சுரக்க மன்னன் கோல்முறை அரசு செய்க”" என்ற பெரியபுராண பாடல் வரிகளைப் பாடி உண்ணாநிலைப் போராட்டம் முடிக்கப்பட்டது.


(Source:- http://www.vinavu.com/2010/03/15/hrpc-case-2/)

இப்படிக்கு,

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு (APPSA - TN)
அலை பேசி எண்: +91 90474 00485