கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது.
தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அரச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு மதுரை பார்ப்பன அர்ச்சகர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியதும் அதனால் தி.மு.க அரசு ஜகா வாங்கியது குறித்தும் முன்னர் நிறைய எழுதியிருக்கிறோம். தொடர்புடைய கட்டுரைகளை கீழே வாசிக்கலாம்.
அதை எதிர்த்து திருவண்ணாமலை பெரியார் சிலை முன்பு அர்ச்சகர் படிப்பு படித்த அனைத்து சாதி மாணவர்களையும் அணிதிரட்டி ம.உ.பா.மை பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே அவர்களை சங்கமாக்கியதோடு இந்த சமத்துவ போராட்டித்திற்காக விடாதும் போராடி வருகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில்தான பெரியார் சிலைக்கு அர்ச்சக மாண்வர்கள் மரியாதை செய்யும் கண்கொள்ளாக் காட்சி இடம்பெற்றிருக்கிறது. பெரியார் கண்ட சமத்துவம் கோவிலில் வருவதற்கு இது முன்னோட்டம் என்பதோடு ஆலயத்தில் தொழில் செய்யும் அர்ச்சகர்கள் சமூகத்தோடு சமமாய் இரண்டறக் கலப்பதற்கும் இது உற்சாகமளிக்கும் செய்தி.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் போராட்டம் வெல்வதற்கு வாழ்த்துக்கள்!!
________________________________________________________________________________________
இது தொடர்பாக ம.உ.பா.மை வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரம்:
அனைத்து சாதியினரையும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கும் நோக்கத்துடன் 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது. இந்தப் பள்ளிகளைத் தொடங்கியவுடனேயே, மதுரைக் கோயிலைச் சேர்ந்த பார்ப்பன அர்ச்சகர்களும் அவர்களுடைய சங்கமும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த சிவாச்சாரியார்கள் மற்றும் வைணவ பட்டாச்சாரியார்கள் தவிர வேறு யாருக்கும் சாமி சிலையைத் தொட்டு பூசை செளிணியும் அருகதை கிடையாது; பூசை முறைகளையும் மந்திரங்களையும் கற்றுத் தேறியிருந்தாலும், பார்ப்பனர்களைத் தவிர மற்ற சாதியினர்க்கு அர்ச்சகராகும் அருகதை கிடையாது; அவர்கள் தொட்டால் சாமி சிலை மட்டுமின்றி, கோயிலே தீட்டாகி விடும்; அந்தச் சிலையிலிருந்து கடவுளும் வெளியேறிவிடுவார்; இதன் காரணமாக கோயிலுக்கு வருகின்ற இந்து மதத்தைச் சேர்ந்த இலட்சக் கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்காலத் தடையையும் பெற்றுவிட்டனர்.
இதன் காரணமாக, மேற்கூறிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து, சான்றிதழும் வாங்கிய 206 மாணவர்களை தமிழக அரசு பணி நியமனம் செய்யவில்லை. மதுரை அர்ச்சகர்கள் பெற்றிருக்கின்ற தடையாணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது. மாணவர்கள் சார்பில் நாங்களும் வழக்கு தரப்பினர்களாக சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறோம். நீதிமன்றத் தடை காரணமாக எல்லா அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன.
இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களில் பிறந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், மருத்துவர் ஆகலாம், பொறியாளர் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், குடியரசுத் தலைவராகக் கூட ஆகலாம் ஆனால் கோயில் அர்ச்சகராக முடியாதாம். அந்த வேலைகளுக்கெல்லாம் தேவைப்படுகின்ற அறிவையும் திறமையையும் காட்டிலும் அதிகமான அறிவும் திறமையும் அர்ச்சகர் வேலைக்கு தேவை போலும்!
அப்படியே பார்த்தாலும் இந்த 206 மாணவர்களும் ஒன்றரை ஆண்டு காலம் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், அன்றாடம் காலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையில்
இவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதவும், அபிசேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம் முதலானவற்றை செய்யவும் முறையாகப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒழுக்கமானவர்கள்தானா என்று சோதித்து, அதன் பின்னர்தான் சைவ, வைணவப் பெரியோர்கள் இவர்களுக்கு தீட்சையும் வழங்கியிருக்கிறார்கள். எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் பிறப்பால் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அல்ல என்பதற்காக அர்ச்சகராக முடியாது என்கின்றனர் பார்ப்பனர்கள்.
காஞ்சிபுரம் தேவநாதனையும், சங்கராச்சாரியையும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. சாமி கும்பிட வந்த பெண் பக்தர்களை மயக்கி, மிரட்டி கோயில் கருவறையை படுக்கையறையாக்கி அதைப் படமும் எடுத்தவர் தேவநாத சிவாச்சாரியார், தன்னுடைய காமலீலைகளைத் தட்டிக்கேட்ட குற்றத்துக்காக சங்கரராமன் என்ற பார்ப்பனரை, வரதராஜ பெருமாளின் கண் முன்னாலேயே போட்டுத் தள்ளியவர் சங்கராச்சாரியார். இரண்டு பேரும் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் என்று புகழப்படும் சிதம்பரம் தீட்சிதர்களோ, அம்மன் தாலியையே அறுத்து விற்றவர்கள்; ஆடல்வல்லானுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பொய் கையெழுத்து போட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விற்றதற்காக இவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கோயிலுக்கு சொந்தமான 2500 ஏக்கர் நிலத்தில் தீட்சிதர்கள் எவ்வளவு மிச்சம் வைத்திருக்கிறார்கள் என்று வருவாய்த்துறை ஆவணங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். பிறப்பால் உயர்ந்த உத்தமர்களின் யோக்கியதைக்கு இவை சில சான்றுகள் மட்டும்தான். ஒவ்வொரு கோயிலிலும் என்ன நடக்கிறது என்பது அன்றாடம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களாகிய உங்களுக்குத் தெரியும்.
போலீசிடம் பிடிபடும்வரை எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து கொண்டுதான் தேவநாதன்களும் தீட்சிதர்களும் கடவுளைத் தொட்டுப் பூசை செய்திருக்கிறார்கள். இவர்கள் தொட்டு ஓடிப்போகாத கடவுள், பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் தொட்டால் ஓடிப்போய் விடுவார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் பக்தர்களாகிய நீங்களெல்லாம் அப்படி நம்புவதாகச் சொல்லித்தான் மதுரைக் கோயில் அர்ச்சகர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்கள்.
பார்ப்பனர் அல்லாத சாதியில் பிறந்தவர்கள் தமிழ்நாட்டின் பல கோயில்களில் அய்யனாருக்கும், மாரியம்மனுக்கும், அங்காள பரமேசுவரிக்கும் பூசை செளிணியவில்லையா? அந்தச் சிலைகளிலெல்லாம் கடவுள் இல்லையா? மாரியம்மனைத் தொடலாம், மீனாட்சியம்மனைத் தொட்டால் மட்டும் தீட்டா? பிறப்பால் புனிதமானர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த பட்டாச்சாரியார்களும் சிவாச்சாரியார்களும், திருப்பாணாழ்வாரையும், நந்தனாரையும் விடக் கடவுளுக்கு நெருக்கமானவர்களா? அல்லது வள்ளலாரையும் ஐயா வைகுந்தரையும் நாராயணகுருவையும் விடப் புனிதமானவர்களா?
படிப்பறிவில்லாத ஒரு பாமரன் கூடக் கேட்கக் கூடிய கேள்விகள் இவை. ஆனால் இப்படிப்பட்ட கேள்விகள் எதையும் கேட்காமலேயே பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தடையாணை வழங்கியிருக்கிறதே, அது ஏன்? ஏனென்றால், பார்ப்பனரல்லாதவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று பக்தர்களாகிய நீங்கள் நம்புவதாக உச்சநீதிமன்றத்தில் சொல்லி தடை ஆணை வாங்கியிருக்கிறார்கள் மதுரை அச்சர்கர்கள். இந்த 206 மாணவர்கள் அர்ச்சகர்களாகி, சாமி சிலையைத் தொட்டுப் பூசை செய்வதால் கோயிலைவிட்டே கடவுள் ஓடிவிடுவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பக்தர்களாகிய நீங்களெல்லாம் பிறப்பால் கீழானவர்கள் என்று நீங்களே நம்புகிறீர்களா? இல்லை என்றால் அதை நீங்கள் சொல்ல வேண்டும். உரத்துக் குரல் எழுப்பவேண்டும்.
இது 206 மாணவர்களின் வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சனை அல்ல. நம் அனைவருடைய மானப்பிரச்சனை. இந்த வேலை இல்லையென்றால் இன்னொரு வேலையை அவர்கள் தேடிக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் அர்ச்சகர்களாகவில்லை என்றால், பிறப்பால் கீழானவர்கள், தீட்டானவர்கள் என்ற இழிவை நாம் எப்படி போக்கிக் கொள்ள முடியும்? எனவே இது மாணவர்களின் பிரச்சினை அல்ல, நம்முடைய மானப்பிரச்சனை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இது ஒரு தீண்டாமைக் குற்றம். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் வேதம் படிக்கக்கூடாது, சூத்திரன் கல்வி கற்கக்கூடாது என அன்றைக்குச் சொன்னது மனுநீதி. இன்றோ, அப்படியே படித்து விட்டாலும் அர்ச்சகராகக் கூடாது என்கிறது நீதிமன்றம். ஆகமம், சாத்திரம், சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும் இந்த அநீதிக்குப் பெயர்தான் தீண்டாமை. தொட்டால் தீட்டு என்ற இந்தத் தீண்டாமையை சமூகத்தில் அமல்படுத்தினால் இன்று அது சட்டப்படி கிரிமினல் குற்றம். ஆனால் கோயிலுக்குள் அமல்படுத்தினால் அதன் பெயர் சாத்திரம், சம்பிரதாயம்.
இதற்கு எதிராகத்தான் அன்று பெரியார் குரல் எழுப்பினார். இன்று நாங்கள் போராடுகிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கும் போட்டிருக்கிறோம். நீதிமன்றத்தில் மட்டும் வழக்காடித் தீர்த்துக் கொள்வதற்கு இது சொத்துப் பிரச்சனை அல்ல. நம் அனைவரின் சுயமரியாதைப் பிரச்சனை. எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக நீங்கள் அனைவரும் குரல் எழுப்பவேண்டும் என்று கோருகிறோம். ஆலயத் தீண்டாமை எனும் இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் நடத்தும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசே!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு கடந்த 4
ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள
தடையாணையை நீக்க விரைந்து நடவடிக்கை எடு!
ஆலயங்களில் தீண்டாமையை கடைபிடிக்கும் பார்ப்பனர்களை
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்
_________________________________________________________
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 90474 00485
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 94432 60164
(Source:- http://www.vinavu.com/2010/09/17/untouchability-in-temples/)