Sunday, October 15, 2017

பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !

இந்த சாதி – தீண்டாமை இழிவை சகித்துக் கொண்டும் அரசாங்கத்திடமும் நீதிமன்றத்திடமும் மன்றாடிக் கொண்டும் நாம் இருக்கமுடியாது. சாதி, தீண்டாமையை அரசமைப்பு சட்டம் நியாயப்படுத்தினால் அந்த சட்டம்தான் மாற்றப்படவேண்டுமேயன்றி, அந்த சட்டத்துக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியாது.


மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

பத்திரிக்கை செய்தி
நாள் : 12.10.2017
கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமித்திருக்கிறது. இவர்களில் 6 பேர் தலித்துகள். அதே நேரத்தில் தமிழகத்தில், முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று, சான்றிதழும் தீட்சையும் பெற்ற 206 மாணவர்கள் பத்து ஆண்டுகளாக, பணி நியமனம் மறுக்கப்பட்டு தெருவில் நிற்கிறார்கள்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், ஆலயத்தீண்டாமையை ஒழிக்கவும் 1993 -ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம். 2007 -ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி, உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். தங்களுக்குப் பணி நியமனம் கோரி பத்து ஆண்டுகளாக அர்ச்சக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தி விட்டார்கள்.

பயனில்லை. 2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்ற போதிலும், அதிமுக அரசு மாணவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. பார்ப்பனராகப் பிறக்காத ஒரேயொரு குற்றத்துக்காக தகுதியுள்ள இம்மாணவர்கள் இன்று தெருவில் நிற்கிறார்கள். பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராக வைக்கம் சென்று போராட்டம் நடத்திய பெரியார் பிறந்த தமிழகத்தின் இன்றைய நிலை இதுதான்.
2006 -ல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு திமுக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்து தடையாணை பெற்றவர்கள் மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள். 1972 -ல் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்க திமுக கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றவர்களும் இவர்கள்தான். “தங்களைத் தவிர வேறு யாரும் கடவுள் சிலையைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும்” என்ற அப்பட்டமான தீண்டாமைக் கருத்தைத்தான் ஆகமவிதி என்ற பெயரிலும் மத நம்பிக்கை என்ற பெயரிலும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.
“பார்ப்பனரல்லாதவர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களின் மற்ற உட்பிரிவினர் கூட அர்ச்சகராக முடியாது” என்று சாமர்த்தியமாக வாதிடுவதன் மூலம் தங்களது சாதி – தீண்டாமை வெறியை இவர்கள் மறைத்துக் கொள்கிறார்கள். மாரியாத்தா, காளியாத்தா கோயில்கள் போன்றவற்றில் மற்ற சாதியினர் பூசாரியாக இருப்பதை காட்டி, ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு மரபு என்று சாதியை தந்திரமாக நியாயப்படுத்துகிறார்கள்.
கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், நடராசர் கோயில், அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி கோயில், தஞ்சை, திருவையாறு, நெல்லை, ராமேசுவரம், பழனி உள்ளிட்ட எல்லா முக்கிய கோயில்களிலும் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பார்ப்பன உட்சாதியினர் மட்டும்தான். 1972 சேசம்மாள் தீர்ப்பு, “வாரிசு உரிமையாக அர்ச்சகர் பதவியைக் கோர முடியாது” என்று தெளிவாக கூறிவிட்ட பின்னரும், தற்போது இத்தகைய பெருங்கோயில்களில் இருக்கும் அர்ச்சகர்கள் 1174 -ல் 574 பேர் வாரிசுரிமையாக பதவி பெற்றவர்கள்தான்.
மேலும் 411 பேர் அவர்களால் சிபாரிசு மூலம் நுழைந்தவர்கள். அது மட்டுமல்ல, மதுரைக் கோயிலின் 116 அர்ச்சகர்களில் 28 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். சென்னை கபாலி கோயில் அர்ச்சகர்கள் 41 பேரில் 4 பேர்தான் ஆகமம் கற்றவர்கள். மற்றவர்களுடைய தகுதி சாதி மட்டும்தான் என்பதை நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்துகிறது. ஆனால் தகுதியுள்ள பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை நியமிக்க அரசு மறுத்து வருகிறது.
மேற்கண்ட கோயில்கள் அனைத்தும் பொதுக்கோயில்கள். அவை முன்னர் மன்னர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. இன்று இக்கோயில்களின் பணிநியமனம் உள்ளிட்ட நிர்வாக விவகாரங்கள் அரசு அதிகாரத்தின் கீழ் வந்திருக்க வேண்டும்.
ஆனால், “ஆகமவிதி, மரபு, பழக்கவழக்கம், இந்துக்களின் மத உரிமை” என்ற போர்வையில் தமிழ்மக்களுடைய உழைப்பில் உருவான இந்தக் கோயில்களின் கருவறைக்குள் தமிழனே உள்ளே நுழையமுடியாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலில் அர்ச்சகர் வேலைக்கு வந்த தீட்சிதர்கள், இன்று “கோயிலே தங்களுக்கு சொந்தம்” என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பும் வாங்கி விட்டார்கள்.

அர்ச்சகர்களும் சங்கராச்சாரிகளும் எதைச் சொல்கிறார்களோ அதைத்தான் “மரபு” என்று உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கிறது. கோயில் தேவதாசி முறையும், தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்பதும்கூட ஆகமவிதிகள்தான். பால்ய விவாகம், பலதார மணம், உடன்கட்டையேற்றுதல் போன்ற அனைத்தும் இந்து மரபுகள்தான். “பார்ப்பனரல்லாதவர்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது” என்பதும் அத்தகையதொரு மரபு.
ஒழிக்கப்படவேண்டிய தீண்டாமை மரபு. 1969 -ல் நியமிக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி தீண்டாமை ஒழிப்புக்கு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான், 1971 -ல் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்தையும், 2006 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியையும் திரு.கருணாநிதி கொண்டுவந்தார்.
இதற்கு எதிரான வழக்கில், 2015 -ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தந்திரமான முறையில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறோம். சட்டப்பிரிவு 25 -ன் படி அர்ச்சக மாணவர்களும், பல்வேறு சாதிகளிலும் பிறந்த இந்துக்களும் பெற்றிருக்கும் மத உரிமையைக் காட்டிலும், சட்டப்பிரிவு 26 இன்படி குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியை சேர்ந்த அர்ச்சகர்கள் கோரும் மரபுரிமைதான் பெரியது என்று கூறுகிறது அந்த தீர்ப்பு.
“தங்களைத் தவிர மற்றவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டு என்று அர்ச்சகர்ள் கூறுவது தீண்டாமைக்குற்றம் ஆகாது” என்றும் இந்த தீர்ப்பு கூறுகிறது. இருந்த போதிலும் மாணவர்களின் பணிநியமனத்துக்கு இத்தீர்ப்பு தடை விதிக்கவில்லை. அரசு இவர்களை நியமனம் செய்யலாம் என்றும், அந்த நியமனம் மரபுக்கு எதிரானது என்றால் அந்த நியமனத்துக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறுகிறது இத்தீர்ப்பு.
தற்போது கேரளத்தில் பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், அதனை எதிர்த்து பார்ப்பன அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்றம் செல்வதற்கும் வாய்ப்புண்டு. இதே கேரளத்தில் குருவாயூர், திருவனந்தபுரம், சபரிமலை போன்ற கோயில்களில் பார்ப்பனரல்லாதார் நியமிக்கப்படவில்லை என்பதையும், சபரிமலையில் வழிபடுவதற்கே பெண்களுக்கு உரிமையில்லை என்ற வழக்கு நிலுவையில் இருப்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கேரளத்து பார்ப்பன அர்ச்சகர்ளுக்கும் சாதகமானதுதான். அங்கே பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்துக்கு போகாமலிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் சமூக ரீதியாகத் தனிமைப்பட்டு விடுவோம் என்ற அச்சமாகத்தான் இருக்க வேண்டும். அத்தகைய அச்சவுணர்ச்சியை தமிழ்ச்சமூகம் அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் ஏற்படுத்தவில்லை என்பதே இந்த மாணவர்களின் அவல நிலைக்கு மிக முக்கியமான காரணம்.
2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தீண்டாமைக்கு முட்டுக்கொடுக்கிறது என்ற போதிலும், அது பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்பதால், தமிழக அரசு, 206 மாணவர்களையும் பெருங்கோயில்களில் நியமிக்க வேண்டும் என்று கோருகிறோம். அவர்களுடைய பணி நியமனத்துக்கு எதிராக அர்ச்சகர்கள் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மட்டுமின்றி வீதியிலும் நாம் போராடவேண்டும்.
இந்த சாதி – தீண்டாமை இழிவை சகித்துக் கொண்டும் அரசாங்கத்திடமும் நீதிமன்றத்திடமும் மன்றாடிக் கொண்டும் நாம் இருக்கமுடியாது. சாதி, தீண்டாமையை அரசமைப்பு சட்டம் நியாயப்படுத்தினால் அந்த சட்டம்தான் மாற்றப்படவேண்டுமேயன்றி, அந்த சட்டத்துக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியாது. மரபுக்கு தலைவணங்குவது என்ற பெயரில் சாதி ஆதிக்கத்துக்கும் தீண்டாமைக்கும் தலை வணங்க முடியாது. அர்ச்சகர் நியமனத்துக்கு மட்டுமல்ல, தலித் கோயில் நுழைவு, சாதி – தீண்டாமை மறுப்பு திருமணம் உள்ளிட்ட அனைத்துக்கும் இது பொருந்தும்.
206 மாணவர்களை பெருங்கோயில்களில் தமிழக அரசு உடனே பணி நியமனம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதற்குப் பொருள், “பார்ப்பனரல்லாதார் சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும்” என்ற பார்ப்பன அர்ச்சகர்களின் கருத்துக்கு இந்த அரசு துணை நிற்கிறது என்பதுதான்.
அதனை முறியடிக்க தமிழகமெங்கும் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்த வேண்டுமென்று தமிழ் மக்களின் நலன் நாடும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம். அதுதான் வைக்கம் வீரருக்கு நாம் செலுத்தும் மரியாதை. தமிழ் மக்கள் என்ற முறையில் அப்படிப் போராடுவதொன்றுதான் நமக்கு சுயமரியாதை! இது அர்ச்சக மாணவர்களின் பிரச்சினை அல்ல, தமிழ்ச் சமூகத்தின் தன்மானப் பிரச்சினை.


பங்கேற்றோர்
  • திரு. சி.ராஜீ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
  • திரு. சே.வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
  • திரு. சு.மில்ட்டன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
  • திரு. அரங்கநாதன், தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்
  • திரு. பாலகுரு, திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி
  • திரு. திருமுருகன், திருவல்லிக்கேணி அர்ச்சகர் பயிற்சி பள்ளி
  • திரு. வெங்கடேசன், திருவண்ணாமலை அர்ச்சகர் பயிற்சி பள்ளி
இவண் :
சே.வாஞ்சி நாதன், வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
அலுவலகம்: 150-இ,
ஏரிக்கரை சாலை,
அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை-20.
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 98653 48163.

அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்

சென்னை

அனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரம் கருத்தரங்கம் – செய்தி

க்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக சிதம்பரம் அனந்தம்மாள் சத்திரத்தில் 23-01-2016 அன்று “ஆகமம் பெரிதா? அரசியல் சட்டம் பெரிதா?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. ம.உ.பா.மைய கடலூர் மாவட்ட துணை செயலர் சி. செந்தில் கூட்ட்த்துக்கு தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் தாழை. கருணாநிதி, கோபாலகிருஷ்ணன், ம.உ.பா.மைய மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில் குமார் ஆகியோர் “இந்தத் தீர்ப்பு எத்துணை மோசமானது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழிவகுத்துள்ளது” ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேசினர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் வா.அரங்கநாதன், மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் பாலகுருஆகியோர் இந்த வழக்கு நடந்த காலத்தில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏற்படுத்தியுள்ள மன உளைச்சலையும் வெளிபடுத்தினர்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.வாஞ்சிநாதன்பேசியதாவது : “இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 17- தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்றும், சரத்து 14- சட்ட்த்தின் முன் அனைவரும் சமம் என்றும், சரத்து 16- சாதி, மத, மொழி, இன அடிப்படையில் பாகுபாடு பார்க்க்க்கூடாது என்றும் கூறுகின்றன. இதற்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.வாஞ்சிநாதன்
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அதைத்தான் செய்தது.
  • அறிவியல் ரீதியான சிந்தனையை வளர்ப்பது அரசு, மக்களின் கடமை என்கிறது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 51-க்கு அதை மீறி புராண கட்டுக்கதைகளை ஆதாரமாகக்கொண்டு உச்சநீதிம்னறம் சேது சமுத்திர திட்டம் வழக்கில் தீர்ப்பு வழ்ங்கியுள்ளது. அந்தத் திட்டம் இப்போது மாற்றுப் பாதையில் செயல்படுத்தப்படுகிறது.
  • ஒரே சட்ட்த்தையும், சாட்சிகளையும் அடிப்படையாக்க்கொண்டு ஜெயல்லிதாவை குன்ஹா தண்டிக்கிறார், குமாரசாமி விடுவிக்கிறார்.
  • இந்திய கூட்டுமனசாட்சிக்கு திருப்தியளிக்கும் வகையில் சாட்சிகள் இல்லாதபோதும் அப்சல் குருவுக்கும், யாகூப் மேமனுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட்து. ஆனால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை, தாழ்த்தப்பட்டவர்களை கொன்ற இந்து மதவெறியர்கள், ஆதிக்க சாதி வெறியர்கள் யாருக்கும் இது வரை தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட்தில்லை.
இது தான் இந்திய அரசியல் சட்ட்த்தின் இரட்டைத் தன்மை. அர்ச்சகர் தீர்ப்பிலே கூட அப்படிபட்ட நயவஞ்சகமான இரட்டை தன்மைதான் எச்.ராஜா, இராம.கோபாலன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி என இரு எதிர் கருத்து உள்ளவர்களையும் இத்தீர்ப்பை வரவேற்க செய்கிறது. உண்மையில் இந்தத் தீர்ப்பு சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு போராடுபவர்களுக்கு 100% தோல்வி தான். 1972 சேசம்மாள் வழக்கு தீர்ப்பில் ஆகமப்படி தான் அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என்பது உட்கிடையாத்தான் சொல்லப்பட்ட்து. ஆனால் இன்று 40 வருடங்கள் கழித்து இன்று இந்த தீர்ப்பில் நேரடியாகவே கூறப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஆனால் அந்தந்த கோயில்களின் நடைமுறையை முன்னிறுத்தி ஒவ்வொரு நியமனத்துக்கு எதிராகவும் வழக்கு தொடரலாம் எனக்கூறியதன் மூலம் இந்த பிரச்சினையை இன்னும் 40 வருடங்கள் இழுக்க்கடிக்கும் திட்டமிட்ட சதி இது.
இந்த வழக்கில் முக்கியமானது 206 அர்ச்சக மாணவர்களின் வேலைவாய்ப்பல்ல, கருவறை தீண்டாமையை ஒழிப்பது தான் முக்கியமானது. அது நிறைவேறியிருக்கிறதா? என்றால் இல்லை. அதற்கு நேர் எதிராக கருவறை தீண்டாமை சரி என்றே தீர்ப்பு கூறியுள்ளது. இப்படி ஒரு தீர்ப்பின் அடிப்படை இந்திய அரசியல் அமைப்பு சட்ட்த்தில் உள்ள தனிமனித உரிமை, மத நிறுவனங்களின், மதங்களின் உரிமை ஆகிய இரண்டையும் வழங்குகிறது. அவற்றுக்கிடையே முரண்பாடு வரும்போது மத நிறுவனங்களின், மதங்களின் உரிமையே மேலானது என நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியுள்ளன.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்பது மத சார்பற்றது அல்ல. அதை மதசார்பற்றதாக மாற்ற K.P.ஷா உள்ளிட்டவர்கள் கொண்டுவர முயன்ற திருத்தங்களும் ஏற்கப்படவில்லை. பின்னர் இந்திரா காந்தி ஆட்சிகாலத்தில் 42வது சட்ட்த்திருத்த்த்தின் படி முகப்புரையில் சேர்க்கப்பட்டதே. இங்கு இந்து மத ந்டவடிக்கைகளை அரசே ஊக்குவிப்பது நடந்து வருகிறது. அது அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 48-ன் படி நடக்கிறது. மேலும், நீதிபதிகள் அதிகாரத்தில் உள்ளவர்களின்
மனநிலைக்கு ஏற்றவாறே தீர்ப்பு வழங்கி வருகின்றனர். இந்த நீதிபதிகளுக்கு வரைமுறையற்ற அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர். அவர்கள் கூறுவதே சட்டமாக கருதப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் பார்ப்பனிய சிந்தனையை கொண்ட நீதிபதிகளை நியமிக்கும் RSS –பார்ப்பன நிதிபதிகளின் முயற்சியை தடுத்த தமிழக வழக்கறிஞர்களின் போராட்டமும், பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் தமிழக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டங்களும் தான் 42 வழக்கறிஞர்கள் இடைநீக்கம், உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு உள்ளிட்ட வழக்கறிஞர்களின் மீதான அடக்குமுறை ஊழல் நீதிபதிகளுடன் கரம்கோர்த்து பார்ப்பன நீதிபதிகளின் நட்த்திய திட்டமிட்ட அடக்குமுறையே. இது வழக்கறிஞர்களின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை.நீதிமன்றம் மட்டுமல்ல பல்கலைகழகம், அறிவியல் கழகங்கள், உயர் அதிகார பீடங்கள் அனைத்தையும் கைப்பற்றும் RSS- BJP யின் சதியின் ஒரு பகுதி.
இந்த பார்ப்பன பாசிச அபாயத்தை எதிர்த்து ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் ஒன்றுதிரண்டு போராடி முறியடிக்க வேண்டியுள்ளது.
மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.ராஜூ
“தீண்டாமையை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்ட சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினாலும் அதை பார்ப்பன உச்சநீதிமன்றம் செல்லாக்காசாக்கி விடுகிறது. அப்படித்தான் 1972-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு போட்ட அரசாணையை செயலிழக்க செய்துள்ளது. 1972 சேசம்மாள் வழக்கில் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமை செல்லாது, ஆனால் ஆகமப்படி தான் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு அர்ச்சகர் நியமனத்தில் அரசின் அதிகாரத்தை நிலைநாட்டியதே தவிர அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் நோக்கத்தை நிறைவேற்றவில்லை.
அன்று இது தீண்டாமை, சமத்துவத்துக்கு எதிரானது, சிவில் சட்ட உரிமைக்கு எதிரானது போன்ற வாதங்கள் வைக்கப்படவில்லை, 206 அர்ச்சகர் பயிற்சிபெற்ற சூத்திர மாணவர்கள் வேலைக்காக காத்திருக்கவில்லை. ஆனால் 2016-ல் இவை அனைத்தும் இருந்தன. நீதிபதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்பதை தீண்டாமை என ஏற்கமுடியாது. ஏனெனில் அவர்கள்”இன்னின்னார் தான் வரவேண்டும் என்கிறார்களே தவிர இன்னின்னார் வரக்கூடாது” என சொல்லவில்லை என்று நரித்தனமாக வியாக்கியனம் செய்கிறது. இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் இடமளிக்கிறது. இப்படி தான் இரட்டைக்குவளை முறையும், மற்ற தீண்டாமை பழக்கங்களும் நடைபெறுகின்றன. அவற்றையும் இந்தத் தீர்ப்பு நியாயப்படுத்துகிறது.
தமிழக அரசு இயற்றிய எந்த இந்துவும் அர்ச்சகராக பயிற்சி பெற்றிருந்தால் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை இந்தத் தீர்ப்பு ரத்து செய்யவில்லை. அதனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம், இது வெற்றி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், ஆகம விற்பன்னர் சக்திவேல் முருகனாரும் கூறி வரவேற்கின்றனர். தீர்ப்பின் இன்னொரு பகுதி ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராகவும் நீதிமன்றம் செல்ல்லாம் என சொல்லியிருப்பதையும், உண்மையில் வெற்றி என்றால் தமிழக அரசாணைக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் புறக்கணிக்கின்றனர்.
மேலும் இந்த தீர்ப்பு ஆகமத்தை கடைபிடிக்க சொல்கிறது. ஆகமம் என்பது மூணு சீட்டு விளையாட்டு போல, ஒரு மோசடி. அதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பார்ப்பனர்கள் சொல்வது ஆகமம் என்ற நிலை உள்ளது. 2002-ல் ஆதித்தன் வழக்கில் நம்பூதிரிகள் தான் அர்ச்சகராகலாம் என்ற மரபை மீறி ஈழவர் சாதியை சேர்ந்த ஒருவர் அர்ச்சகராகலாம் என தீர்ப்பளிக்கப்பட்ட்து. அதை சுட்டிக்காட்டி வாதிட்டால் அது சாதி தீண்டாமை பிரச்சினை. இந்த வழக்கில் அப்படியில்லை என நீதிபதிகள் மறுக்கின்றனர். ஆகமத்தில் குறிப்பிட்ட சாதியினர் தான் அர்ச்சகராக வேண்டும் என்று இல்லை. ஆகமம் மாற்றப்படக்கூடாது என்கிறது. ஆகமம் என்பது கோயில் கட்டமைப்பை, வழிபாட்டுமுறையை குறிப்பிடுவது. அந்த ஆகமம் இப்போது ஆகமக் கோயில் என சொல்லக்கூடிய எந்தக் கோயிலிலும் கடைபிடிக்கவில்லை. உதராணமாக கருவறையில் மின்விளக்கு போடுவது, கோயிலை நள்ளிரவிலும் திறந்து வைப்பது. என சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலும் 1972 சேசம்மாள் வழக்கு தீர்ப்புக்கு பிறகு தீர்ப்பு தமிழக வெற்றியா? இல்லையா? என ஆராய நீதிபதி கமிட்டி போடும் அவலம் நடந்தது. அப்படிபோட்ட மூன்று கமிட்டிகளும் ஆகமம் எந்த கோயிலிலும் கடைபிடிக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியது. மேலும் மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ள 116 பார்ப்பனர்களில் 28 பேர் தான் அர்ச்சகராக பயிற்சி பெற்றவர்கள் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த்து. இது தான் மற்ற கோயில்களின் நிலையும்.
இந்துக்களின் ஒற்றுமை, சமத்துவம் பேசுகின்ற ராம.கோபாலனோ, இல. கணேசனோ இந்த 206 அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களின் உரிமைக்காக கருவறை தீண்டாமையை ஒழிக்கவும் போராடவில்லை. இந்து மத நம்பிக்கையில்லாத, அதன் புராணங்களை எரிக்க வேண்டும் எனக்கூறுகின்ற மக்கள் கலை இலக்கிய கழகமும் பெரியாரிய அமைப்புகளும் இதற்காக போராடி வருகின்றன. முன்பு தாழ்த்தப்பட்டவர்கள், சூத்திர்ர்கள் கோயிலுக்குள் நுழைய கூடாது என்ற தீண்டாமையையும் எதிர்த்து கோயில் நுழைவு போராட்டங்களை நட்த்தியது அம்பேத்காரிஸ்டுகளும் பெரியாரிஸ்டுகளும் தான்.
ஆகமம் இந்து மத நம்பிக்கை அதன்படி செயல்படவேண்டும். அதை மீறுவது அரசியல் அமைப்பு சட்டம் கொடுக்கும் மத நிறுவனங்களின் உரிமை பறிப்பது என வாதிடுகின்றனர். நம்பிக்கை என்பது நடைமுறைக்கு வரும் வரை தான், வந்துவிட்டால் அந்த செயல் சட்டத்தால் கேள்விக்குள்ளாக்கப்படும். ஒருவரை கொலை செய்ய வேண்டும் என எண்ணுவது குற்றமல்ல. அதுவே அரிவாளை எடுத்து ஓங்கிவிட்டால் அது தண்டனை சட்டம் 307-படி கொலைமுயற்சி குற்றச் செயலாகும். அது காஞ்சி கோயிலில் வைத்து சங்கராச்சாரி செய்தாலும் பொருந்தும்.
பார்ப்பானை தவிர யாரும் அர்ச்சகரானால் சாமி தீட்டு ஆகிவிடும். மற்ற சாதியினர் அர்ச்சகராகக் கூடாது என்றால் சரி அப்படியே இருந்துவிட்டு போகட்டும். எங்களுக்கு தட்டும் வேண்டாம் மணியும் வேண்டாம். பார்ப்பன அர்ச்சகர் வேலையை தவிர IAS ,IPS, வெளிநாட்டு வேலை என எதற்கும் போகக்கூடாது. அனைத்து பார்ப்பனர்களும் அர்ச்சகராக மட்டுமே இருக்க வேண்டும் என நாங்கள் கூறினால் உரிமை பாதிக்கப்பட்டதாக வர மாட்டார்களா? 63 நாயன்மார்கள் விதவிதமாக கடவுளை வணங்கினார்கள் எனக்கூறுகிறது புராணங்கள். அதை மட்டும் எப்படி ஏற்கிறார்கள்?
ஆகமம் தான் பெரிது என இராம.கோபாலன், எச். ராஜா சொன்னால் பிரச்சினையில்லை. இந்திய மக்களின் சமத்துவத்தை நிலைநாட்ட உறுதியேற்ற நீதிபதிகள் பேசுவது தான் பிரச்சினை. நீதிபதி மக்களுக்காகவா? மக்கள் நீதிபதிகளுக்காகவா? என்ற கேள்வி எழுகிறது.
மக்களுக்காக தான் நீதிபதிகள் அது தான் மக்கள் அதிகாரம் என்கிறோம். மக்களின் உரிமைகளை பாதுகாக்கத் தான் மாவட்ட ஆட்சியர் காவல் துறை அதிகாரி, MLA, MP, அமைச்சர்கள். இதற்கெதிராக உங்களை தூக்கியெறியும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது.
நீங்கள் அரசு இறையாண்மை பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் மக்களின் இறையாண்மை பற்றி பேசுகிறோம்.
ஏனெனில் நீதிம்ன்றம், சட்டமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இலட்சக்கணக்கான ஏக்கர் காட்டை திருத்தி விளை நிலங்களாக மாற்ற உதிரத்தையும் உயிரையும் கொடுத்த்து உழைப்பாளிகள், விவசாயிகள், தொழிலாளிகள். அந்த மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள், மக்கள் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
உரிமைகளை காவுவாங்குகின்ற இது போலி ஜனநாயகம். உரிமைகளை பாதுகாக்கிற உண்மையான ஜனநாயகத்தை அடைய மக்கள் அதிகராத்தை கையில் எடுத்தே தீரவேண்டும்.
இறுதியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் கலைசெல்வன் நன்றியுரை நிகழ்த்தினார்.
தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர்.

தொடர்புடைய பதிவுகள்

அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

“பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் தந்திரமான சொற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்கின் தீர்ப்பு”

தருமபுரி

அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னொரு பார்ப்பன தந்திரமே என்ற முழக்கத்தின் கீழ் தருமபுரி பெரியார் சிலை முன்பு புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

தருமபுரி பகுதியில் உள்ள வி.வி,மு, பு.மா.இ.மு, மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியார் சிலை அருகே 17-12-2015 அன்று ஒன்றுதிரண்ட தோழர்கள், நீதிமன்றத்தின் பார்ப்பன தந்திரத்தை அம்பலப்படுத்தியும் தமிழக அரசிடம், அர்ச்சகர் மாணவர்களை உடனடியாக பணியில் அமர்த்த கோரியும், இந்து ஒற்றுமை நாடகமாடும் இந்து மத வெறி அமைப்புகளை அம்பலப்படுத்தியும், பார்ப்பன கும்பலின் சாதி தீண்டாமையை அம்பலப்படுத்தியும் முழக்கமிட்டனர்.
15 நிமிடம் முழக்கமிட்டதும் எஸ்ஐ, இன்சுபெக்டர் உள்ளிட்ட போலிசு 10 பேர் வந்து தடுத்தனர்.
“அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்; அனுமதி கேட்டால் கொடுத்திருக்க மாட்டோமா” என்று காவல் உதவி ஆய்வாளர் கேட்டார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ஜானகிராமன் “நீங்கள் ஜனநாயக உரிமைகளை மதிக்கிறதில்ல; அனுமதிகொடுப்பதாக கூறி அலைக்கழிப்பது. அனுமதி கொடுப்பதாக கூறிவிட்டு இறுதியில் ஒலிப்பெருக்கி வைக்க அனுமதியில்லை என்பது; அதுவும் மக்களே இல்லாத மூத்திர சந்திலதான் அனுமதி கொடுக்கிறீங்க . இதனாலதான் இப்படி ஆர்ப்பாட்டம் செய்யுறோம்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவ்வாறு போலீசிடம் தோழர்கள் ஒரு சிலர் வாக்கு வாதம் செய்து கொண்டிருக்க மறுபுறம் தோழர்கள் முழக்கமிட்டவாறை இருந்தனர். அதனை ஏற்காத போலீசு உங்களை கைது செய்கிறோம் என்று அறிவித்தது. தோழர்கள் தொடர்ச்சியாக மக்களை பார்த்து முழக்கமிட்டு கொண்டேயிருந்தனர்.
கைது செய்த போது தோழர்கள் ஒத்துழைக்க மறுக்கவே தள்ளுமுள்ளானது. தோழர்கள் தரையில் அமர்ந்து ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு முழக்கமிட்டனர். போலீசு தோழர்களை குண்டுகட்டாக சீப்பில் ஏற்றியது. சீப்பில் ஏற்றிய பிறகும் வழிநெடுகிலும் தோழர்கள் கொடிபிடித்தவாறு முழக்கமிட்டவாறை சென்றனர்.
சம்பவ இடத்தில் இந்நிகழ்வை திரளான பொது மக்கள் சுற்றி நின்று கவனித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி தோழர்கள் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை பேருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தோழர்களை கைது செய்த போலீசு அன்று மாலையே விடுதலை செய்தது. இது மறுநாள் ஆங்கில செய்தித்தாள் உள்ளிட்டு 4 தினசரி பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. உச்சநீதி மன்றத்திற்கும், இந்து மதவெறி அமைப்புகளுக்கும் எதிரான கருத்துக்கள் ஆயிரகணக்கான மக்களிடம் போய் சேர்ந்தது.
இப்படிக்கு
புஜ செய்தியாளர், தருமபுரி.

மதுரை

னைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கில் உச்சநீதி மன்றத்தின் அநீதியான மோசடியான குழப்பமான தீர்ப்பை கண்டித்து மதுரை தள்ளாகுளம், புதூர் ரோட்டில் உள்ள பெரியார் சிலை முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அமைப்பின் சார்பாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் தலைமையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்வதாகக் கூறி அனைவரையும் கைது செய்ய முயன்றது காவல்துறை. காவல்துறை வருவதைக் கண்டு பெரியார் சிலை முன்பு அமர்ந்து கொண்டு விண்ணதிர முழக்கமிட்டவாறே இருந்தவர்களை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது. காவல்துறை. கைதான தோழர்கள் மாலையில் விடுதலையானார்கள்.
தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
மதுரை

தஞ்சாவூர்

“பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் தந்திரமான சொற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது அனைத்து சாதி வழக்கு தீர்ப்பு” என்றார் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் சதீஷ் குமார். மக்கள் கலை இலக்கியக் கழகம் தஞ்சை கிளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து “அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புபார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்” என்ற முழக்கத்தை வைத்து (வெள்ளிக்கிழமை) 18-12-2015 அன்று மாலை தஞ்சை இரயிலடியில் நடைபெற்ற கண்டண ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றி மேலும் அவர் பேசியதாவது:
“2008-ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இன்றுவரை வேலை இல்லாமல் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள். வெறுத்துப்போய் ரங்கநாதன் என்பவர் தனது அர்ச்சகர் அடையாளத்தை நேற்று துறந்து பெரியார் கொள்கையைப் பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்று அறிவித்து பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். நீதிமன்றத்தின் மூலம் தீர்வு கிடைக்காது. நீதிமன்றங்களின், நீதிபதிகளின் செயல்பாடுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி மேலும் அம்பலப்பட்டு வருகிறது. வீதியில் இறங்கி போராடித்தான் தீர்வைப் பெறமுடியும்” என்றார். நீதிமன்றங்களின் நடிவடிக்கைகள் சமூகநீதிக்கு எதிராக எப்படியெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் தோலுரித்தார்.
ம.க.இ.க தஞ்சை கிளைச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தஞ்சை தோழர்கள் அருள்தேவா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத், பகுத்தறிவாளர் நன்னன், ஆதித்தமிழர் பேரவை தஞ்சை தலைவர் சந்திரன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை

தொடர்புடைய பதிவுகள்

அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு – உச்சநீதிமன்ற விவாதம்

43 ஆண்டுகளுக்கு முன்பு “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டம் செல்லும் என 1972-ல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி பார்ப்பனர்கள் வாரிசுரிமைப்படி அர்ச்சகர் பணி நியமனம் கேட்பது ஒழிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்றளவும் செல்லாக்காசாக இருக்கிறது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக இன்றளவும் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2006–ல் தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் 1972 தீர்ப்பை வைத்தே முடக்கி தடை உத்தரவு பிறப்பித்தது. பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், 2009 முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது.
கடந்த வாரம் முதல் அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை நடந்து வருகிறது. விரைவி்ல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.

அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை விரைவி்ல் முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கும் மதுரை சிவாச்சாரியர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் பராசரன் தன் சொந்த வழக்காக இன்று வரை நடத்தி வருகிறார்.
“சிவாச்சாரியார்கள் இல்லை என்றால் கோவிலுக்கு போவதை நிறுத்தி விடுவேன். கருவறையில் பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டு விடும். தெய்வீக சக்தியை இழந்து விடும்.கோவிலின் புனிதம் கெட்டு விடும்.
காலம் காலமாக பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை, மரபுகளை மாற்றக்கூடாது. இவை இந்து மதத்தின் ஆணி வேர். இவையெல்லாம் பார்ப்பனர்களின் மத உரிமை, அதில் அரசு தலையிடக்கூடாது. 1972 –ல் அர்ச்சகர் நியமனத்தில் ஆகமத்தை பின்பற்றுவோம் என, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் வாக்குறுதி அளித்தார். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என அவசரச் சட்டம் இயற்றியதுடன், அது காலாவதியான பின்பும் அரசாணை மூலம் நிற வேற்ற முயலுகிறார்கள். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார் பராசரன்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் (கோப்புப் படம்)
1972 சேசம்மாள் தீர்ப்பில் உள்ள ஆகமம் பற்றிய கட்டுக்கதைகளை ஆதாரமாக வைத்து இன்றும் ஆணித்தரமாக வாதிடுகிறார், பராசரன். உச்ச நீிதிமன்றமும் அதை நிராகரிக்காமல் கரிசனத்தோடு கேட்கிறது.
அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஙர் பி.பி. ராவ் “எதிர்காலத்தில் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்றே வழக்கு தொடுக்க முடியாது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நாங்கள் பணியமர்த்தினால் இவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்! அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், செல்லா நிலையாகும். அர்ச்சகர் பணி நியமனம் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இட ஒதுக்கீடு அடிப்படையில் அதற்கு உரிய தகுதி உள்ள மாணவர்களை பொதுக் கோவிலில் நியமிப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமை ஆகும்.
1972–ல் சேசம்மாள் வழக்கு தீர்ப்பின்படி கருவறையில் தீணடாமையை ஒழிக்க வாரிசுரிமை அரச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டது. பிற சாதியினரை அர்ச்சகராக நியமித்தால் சிவாச்சாரியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
தாங்கள் தனி வகையறா என்றால் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிரூபிக்கட்டும். சைவக் கோவில்களுக்கு உரிய பாடத்திட்டம் பயிற்சி, தகுதி, வைணவக் கோவில்களுக்கு உரிய பாடத்திட்டம், பயிற்சி, தகுதி இதில் சாதி பாகுபாடு இல்லை.
அரசு வேலை வாய்ப்பில் சாதி, மத, இன வேறுபாடும் இல்லை. அரசியலமைப்பு சட்டம் சரத்து 16-ன்படி அனைவருக்கும் சமவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அர்ச்சகராக வேண்டும். பிறர் வருவதை தடுப்பது’ என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்துக்கள் அனைவரும் சமம், அனைத்து சாதியினரும் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதை ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வும் உறுதி செய்தது. இதன் மூலம் ஆலயத்தீண்டாமை ஒழிக்கப்பட்டது. அது போல் கருவறைத் தீண்டாமையை ஒழிக்க அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணியமர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளது” என வாதிட்டார். இன்றும் தொடர்ந்து வாதிட உள்ளார்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் (கோப்புப் படம்)
அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அரங்கநாதன், சடகோபன் சார்பில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வேஸ், மற்றும் வழக்கறிஞர் கோவலின் பூங்குன்றன் ஆகியோர் வாதிட உள்ளனர்.
மாணவர்கள் தரப்பில் ”பார்ப்பனரை தவிர பிற சாதியினர் சாமியை தொட்டால் கருவறை தீட்டாகிவிடும் என்பது கட்டுக்கதை. பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தையும் வருமானத்தையும் நிலைநாட்டிக் கொள்ளவே பிற சாதியினர் அர்ச்சகராவதை எதிர்க்கின்றனர். தீட்டுப்பட்டுவிடும் என்பது அரசியலமைப்பு சட்டப்படி தீண்டாமை குறற்ம்.
1972–ல் பரம்பரை வாரிசுரிமைப்படி பார்பப்னர்கள் மட்டுமே அர்ச்சகர் என்பதை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் போடப்பட்டது. அச்சட்டம் செல்லும் எனக் கூறியதை ஒதுக்கி விட்டு, அதில் கூறப்பட்டுள்ள ஆகமம் தொடர்பான கருத்துக்களை, ஆன்மிகம் தொடர்பான விபரங்களை திரித்தும், பிரித்தும், பித்தலாட்டமாக நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றனர். 43 வருடங்களுக்கும் பிறகும் எங்களைத் தவிர யாரும் அர்ச்சகராகக் கூடாது என எதிர்க்கின்றனர். அர்ச்சகர்களுக்கு உரிய தகுதி அனைத்தும் பெற்று உரிய சான்றிதழ் பெற்றும் பிறப்பில் பிராமணர் இல்லை என்பதற்காக பணி நியமனம் கூடாது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

“இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது” – அர்ச்சகர் மாணவர்கள்
அனைத்து பொதுக்கோவில்களிலும் உரிய தகுதியுடையவர்களை அர்ச்சகராக நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிறப்பால், தனி வகையறா என எதிர்க்க முடியாது. இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது” என வாதிட உள்ளோம்.

அனைத்து சாதி அர்ச்சகர் – பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு

”சார், ஆகம விதிப்படி தான் கோயில் நடக்குதா இங்கே? மினிஸ்டர் வாராறுன்னு ஒரு மணி நேரம் சாமிய காக்க வைக்கிறாங்க. ஆகமத்துல அப்படி இருக்குதா? கோர்ட்டு என்னா வேணா சொல்லிட்டுப் போகட்டும் சார். இது நம்மோட கோயிலு. நம்மாளு உள்ளே போனா என்னான்னு கேக்கறேன்…”
வட பழனி கோயில் பக்தர் ஒருவரின் கருத்து இது. பதிலளித்தவர் ‘சூத்திரர்’.
“நானே சொல்லக் கூடாது தான்… ஆனா வேற வழியில்லே. இன்னிக்கு ப்ராமின்ஸ் எவன் யோக்கியம்னு சொல்றீங்க? வெளியில தான் கோயில் காரியம் புண்ணியம்னு எல்லாம் நினைக்கிறாங்க. உள்ளே வந்து பார்த்தா தான் புரியும். பெரியார் கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்கா எவனாலயும் பதில் சொல்ல முடியலை. அதானே எல்லாரும் அந்தப் பக்கமா போறாங்க? இவங்களாலே இன்னிக்கு கடவுள் பக்தியே குலைஞ்சி போச்சிது. எத்தனை ஸ்காண்டல் வெளியே வந்திட்டு இருக்கு தெரியுமில்லே? சின்ன பசங்களை கோயிலுக்கு கூப்டா ‘போப்பா வேற வேலையில்லே’ அப்படின்னு ஃபோனை நோண்டிட்டே பதில் சொல்றான். இந்த ஆன்மீக சிஸ்டத்தோட அடிப்படையிலயே ஏதோ பிரச்சினை இருக்கு”
எம்மிடம் சலித்துக் கொண்ட மயிலை கபாலீஸ்வரர் கோயில் பக்தர் ஒரு பார்ப்பனர். ஓய்வு பெற்ற பேராசிரியர். முசுலீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான சமன்பாட்டை பராமரிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தேவை என்று எம்மிடம் வாதிட்டவர் – அதே குரலில் மத உரிமைகள் தடுக்கப்படும் போது மதமாற்றம் நடக்கத்தானே செய்யும் என்றும் கூறுகிறார். பார்ப்பனர்களைப் பற்றி மிக கடுமையான வார்த்தைகளில் ‘அர்ச்சிக்கிறார்’.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற ஒரு பார்ப்பனர்
வினவு செய்தியாளர் குழுவினர் பொங்கலன்றும் அதற்கு மறுநாளும் சென்னையின் பிரசித்தி பெற்ற கோயில்களில் அர்ச்சகர் வழக்கு குறித்தும் ஆகம விதிகள் பற்றியும் எடுத்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் சில உண்மைகளை உணர்த்துகின்றன. கருத்துக்கணிப்பிற்காக வெகுமக்களின் கோயில்கள் என்கிற வகையில் வடபழனி முருகன் கோயிலையும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலையும் தெரிவு செய்திருந்தோம். பார்ப்பன – மேல்நிலை ஆதிக்க சாதியினர் புழங்கும் கோயில்கள் என்கிற அடிப்படையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலையும் தெரிவு செய்தோம்.

கருத்துக்கணிப்பை அலசுவதற்கு முன் முடிவுகளைப் பார்க்கலாம்:
படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற கோவில் வணிகர்.
“திருட்டுப் பசங்க சார். சீசன்னாக்க உள்ளேர்ந்து அவுனுங்களே மாலைய கொண்டாந்து குடுத்துடுவாங்க. ஒரே மாலை பூ உதிர்ர வரைக்கும் ஒரு நாலஞ்சி ரவுண்டு போயிட்டு வரும்” என்றார் திருவேற்காடு கோயிலின் வெளியே தேனீர் கடை நடத்தி வருபவர்.
“எல்லாத்துக்கும் காசு தாங்க. 100 ரூபா குடுத்த சாமி மாலை தருவாங்க. 500 ரூபா குடுத்தா பெரிய மாலைய கழட்டி குடுப்பாங்க. காசு குடுத்தா நீங்க என்ன சாதின்னெல்லாம் பார்க்காம கருவறைக்கு உள்ளே விடுவாங்க. விடறது என்ன… கூட்டிட்டு போயி சாமி மடிலயே ஒக்காத்தி வைச்சாலும் வைப்பாங்க. ஆகமம் பத்தியெல்லாம் தெரியாது… ஆனா நான் இதே ஊர்ல ஐம்பது வருசமா இருக்கேன்… எங்க அப்பா தாத்தா காலத்துல இங்கெ அய்யிருங்க பூசை செய்யலை.. பேமசு ஆன பின்னாடி தான் அய்யருங்க வந்தாங்க” என்கிறார் இன்னொரு வியாபாரி.
திருவேற்காடு கோவிலில் உழைக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர வயது மற்றும் வயதான பெண்கள் நிறைய பேரைக் காண முடிந்தது. இவர்களிடம் பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு எதிர்மறையான பதிலே வந்தது.
“அய்யய்யோ.. பொட்டப் பசங்களையா உள்ளே விடனும்னு சொல்றீங்க.. அது பெரிய பாவம் தம்பி. கங்கைல குளிச்சாலும் அந்த பாவம் போகாதுப்பா…” என்று பதறினார் கருமாரியம்மன் கோவிலில் நாங்கள் சந்தித்த வீரம்மாள் என்கிற பெண்மணி. அதே கோவிலில் நாங்கள் சந்தித்த அவர் வயதை ஒத்த பலராலும் அந்தக் கேள்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 40 வயதுக்கு உட்பட்ட பெண் பக்தர்கள், “மாதவிடாய்க் காலம் முடிந்த பெண்களை அனுமதிக்கலாம்” என்று தெரிவித்தனர்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற இளம் பக்தர்கள்
அதே நேரம், பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பது தொடர்பாக மயிலை கபாலி கோவிலில் சந்தித்த பக்தர்கள் (பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதவர்கள் உள்ளிட்டு) பெருவாரியாக ஆதரித்தனர். கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்திருப்பதாக சலித்துக் கொள்வோர் நிறைய இருந்தனர். பால், சாதி வேறு பாடுகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பது இதற்கு மேலும் தேவையற்றது என்பதை கபாலீஸ்வரர் கோவிலில் சந்தித்த பார்ப்பனர்கள் சிலரே தெரிவித்தனர்.
”நல்லா புரோகிதம் செய்யக்கூடிய விவரம் தெரிஞ்ச வாத்தியார்களே இப்ப குறைஞ்சி போயிட்டாங்க. இப்ப புரோகிதம் செய்யறவங்களும் எல்லா முறைகளையும் தெரிஞ்சிட்டு வர்ரதில்லே. இதெல்லாம் இப்ப பாஷன் இல்ல சார். கோவில்ல அர்ச்சனை செய்யறவங்களுக்கெல்லாம் என்ன சம்பளம்னு நினைக்கிறீங்க? படிச்சிட்டு ஆன்சைட் போயி ஒரு நாள் சம்பாதிக்கிற காசை விட இவாளெல்லாம் ஒரு மாசம் பூரா வேர்வைல ஊறி சம்பாதிக்கிற காசு கம்மி தான் தெரியுமா?” கபாலி கோவிலில் சந்தித்த ஹரிஹரன் நீட்டிக் கொண்டே போனார். நாங்கள் இடைமறித்தோம்.
”சரி, அதான் வருமானம் இல்லைன்னு சொல்றீங்களே அப்ப வேற சாதிக்காரர்களும் இந்த வேலையை எடுத்துக்க முன்வந்தால் விடலாம் தானே?”
”வருமானம் இல்லைன்றதாலே தான் சொல்றேன். எதுக்கு நீங்கெல்லாம் இந்த சின்ன சம்பாத்தியத்துக்கு போட்டிக்கு வர்றேள்? நல்ல படிங்கோ.. பாரின் போங்கோ” ஹரிஹரனின் வயது எழுபதுக்கும் மேல்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற ஒரு ஏழைப் பெண்
70 வயதைக் கடந்த பார்ப்பனர்களின் குரல்கள் ஒரே தன்மையுடன் இருந்தது என்றால் நடுத்தர வயது மற்றும் இளைய வயதுடையோரின் குரல்களில் கொஞ்சம் ஜனநாயகம் ஏறியிருந்தது.
“பிரதர்! கோயிலைப் பத்தியெல்லாம் எழுதி என்ன சாதிக்கப் போறீங்க, அதுக்குப் பதிலா இங்க நடக்குறதப் பத்தி எழுதுங்க! அங்க நிக்கிறாங்க(அர்ச்சகர்கள்) பாத்தீங்களா ! இவங்க மோசடிக்கு ஒரு அளவே இல்ல! பாருங்க நம்ம கடவுள கும்புடுறதுக்கு தட்டுல உண்டியல் போடனும், அப்புறம் டோக்கன் வேற, இதுல ஸ்பெஷல் டோக்கன் வாங்குனா வரிசையில நிக்காம உடனே போயி பாத்துடலாமாம் …. காசு கொடுத்து வந்து பாருன்னு கடவுளா சொன்னான்?” இது ஐம்பதைக் கடந்த பார்ப்பனர் மகாதேவனின் கருத்து.
எம்மிடம் ஆர்வத்தோடு பேசிய அவரிடம், இந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இருப்பதால் தானே மத மாற்றங்கள் நடக்கின்றன என்று கேட்டோம். அதற்கு அவர்,
”விவேகானந்தரும் இங்கே சாதி ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம்னு சொல்லி இருக்கார். ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்களை உள்ள வரக்கூடாதுன்னு தடுத்தா எப்படி கோயில்ல கும்பிட வருவார்கள்? மதம் மாறத்தான் செய்வார்கள். முதல்ல இந்து மதத்துல உள்ள எல்லாரும் சரிசமம்-னு சட்டம் கொண்டு வரனும்” என்றார்.
இந்தக் கோவில்களில் இருபதுகளில் உள்ள இளைஞர்களைப் பார்ப்பது அரிதாகவே இருந்தது அதிலும், பார்ப்பனரல்லாத சாதியைச் சேர்ந்த இளைஞர்களை தேடித் தான் பிடிக்க வேண்டியிருந்தது. வடபழனி கோவில் பின்புற பிரகாரத்தில் நான்கு இளைஞர்களைப் பிடித்தோம். பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள். ஆளுக்கொரு தொடுதிரை கைப்பேசியை வைத்துக் கொண்டு ஏதோ நோண்டிக் கொண்டிருந்தனர். வின்சென்ட் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர்கள்.
இவர்கள் அர்ச்சகர் வழக்கு பற்றியோ, ஆகம விதிகள் பற்றியோ கேள்விப்பட்டிருக்கவில்லை. பிரச்சினை பற்றி நாம் விளக்கிய பின் கொந்தளித்து விட்டனர்.
“துட்டு வாங்கிட்டு தானே பூஜை செய்யறாங்க. அதான் யாரு வேணா செய்யலாமே” – அபிஷேக்

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற நடைபாதை வியாபாரம் செய்யும் பெண்மணி
“மச்சி அது நம்ப துட்டுடா.. நம்மளாண்ட பிச்சை எடுத்துனு நம்பளையே உள்ள விடமாட்டானா?” – கணேஷ்
“இவனுங்க கைல துட்டு குடுக்க கூடாதுடா..” – நந்தா
சமஸ்கிருதம் தேவபாஷை எனப்படுவதையும் தமிழ் நீச பாசை எனப்படுவதையும் பற்றிக் கேட்ட போது அவர்களின் எதிர்வினையில் மேலும் சூடு ஏறியது
“தமிழ்நாட்டுல பொறுக்கித் தின்னுகினு தமிழையே தப்பு சொல்றானுங்களா? தெர்த்தி விடனும் பாஸ்” – ஹரி
“சொம்மா வாய்ல வந்தத உளரிக் கொட்றான்.. கேட்டா அதான் தேவபாசையா?” – நந்தா.
இவர்கள் கோவிலுக்கு வந்ததைப் பற்றிக் கேட்டோம்.
“லீவு சார்… வீட்ல ஒரே போரடிச்சிது.. அதான் சும்மா வந்தோம்”
”சாமி கும்பிட்டாச்சா?”
“அதெல்லாம் வந்த ஒடனேயே ஒரு அட்னென்ஸ் போட்டுட்டோம்”
“அடிக்கடி வருவீங்களா?
“அய்யய்யே.. எப்பனா போரடிச்சா வருவோம்”

திருவல்லிக்கேணியில் பார்ப்பனர்களும், கடவுளும் உலா!
மதம், அரசியல் குறித்த கேள்விகளுக்கு பெரும்பாலும் தெரியாது என்றே பதிலளித்தனர் இளைஞர்கள். சிறுவர்கள் மட்டுமே பெற்றோருடன் வந்தனர்… இளைஞர்களை குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை. வெகு சிலர் மட்டும் தம் வயதை ஒத்தவர்களோடு கும்பலாக வந்திருந்தனர். அந்த வருகைக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்புமில்லை. ஏன் கோவிலுக்கு வந்தீர்கள் என்று கேட்டதற்கு இப்பிரிவினர் சொன்ன பதில் “சும்மா டைம் பாசுக்கு”
நாற்பதுகளில் இருந்தவர்களுக்கு ஓரளவு வழக்கு பற்றியும் அதன் பின்னணி பற்றியும் பரிச்சயம் இருந்தது. பெரும்பாலும் குடும்பமாக வந்திருந்தனர். இவர்கள் மத்தியில் பார்ப்பனர்கள் மேலான விமர்சன்ங்களும் தூக்கலாக இருந்தன. குறிப்பாக கோவிலில் தம்மை பார்ப்பனர்கள் மதிப்பதில்லை என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
”நம்ம காசுல தான் கோயிலே நடக்குது. இதுல, நம்ம கிட்ட அவனுங்க கடு கடுன்னு மூஞ்சிய காட்றதும், ஒருமைல வா போ-ன்னு விரட்றதும்.. இதே காசு குடுங்க, தூக்கி வச்சி கொண்டாடுவானுங்க. நான் காசு குடுக்கிற பழக்கமில்ல. நம்ம சாமிய பார்க்க எதுக்கு காசு குடுக்கனும்? வெளியில நம்மை பார்த்தா மனுசனா மதிக்கிறான். சில சமயம் இந்த அவமானத்துக்கு பேசாம கோயிலுக்கே வராம விட்றலாம்னு தோணும். ஆனா, ஒரு விசேசம்னா வீட்ல எல்லாரும் குடும்பமா செலவில்லாமே வந்து போறதுக்கு இதானே இருக்கு?”
கருப்பு சட்டைகளையெல்லாம் அய்யப்ப பக்தர்களாக்கி விட்டோம் – சிவப்புச் சட்டைகளையெல்லாம் செவ்வாடை பக்தர்களாக்கி விட்டோம் என்று காலர் தூக்கி விட்டுத் திரியும் இந்துத்துவ கும்பல் சமீபத்தில் அதிகரித்திருக்கும் ’பக்தியின்’ தன்மை யாதென்று ஆய்வு செய்து பார்த்தார்களா என்பது தெரியவில்லை. பெரும்பாலான பக்தர்களுக்கு ’பக்தி’ ஒரு அனிச்சையான பழக்கமாகத் தான் இருக்கிறதே ஒழிய உணர்வுப் பூர்வமான பங்கேற்பு இல்லை. கருவறையில் நிலவும் பார்ப்பனர் ஆதிக்கம் பக்தர்களின் ஒப்புதலோடு நிலவவில்லை என்பதை கருத்துக் கணிப்பின் முடிவுகள் உணர்த்தியது என்றால், காவி கும்பலின் பெருமை பீற்றலின் தராதரம் என்பதை பக்தர்களின் கருத்துக்கள் உணர்த்தியது.
அதே நேரம் பார்ப்பனமயாக்கலின் செல்வாக்கில் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம். பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது அதற்கு ஒரு சான்று! அதே நேரம் இந்து மதத்தில் மரபு ரீதியாக இருக்கும் அடிமைத்தனங்களை மக்கள் உரிய பொருளில் புரிந்திருக்கவில்லை. பல விசயங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. அதே நேரம் எல்லாரும் அர்ச்சகராவதில் என்ன பிரச்சினை என்று எளிமையாக கேட்கவும் செய்கிறார்கள். பார்ப்பன இந்துமதத்தின் அநீதிகளை உரிய முறையில் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது உச்சநீதிமன்றமோ இல்லை சங்கபரிவாரங்களோ மக்களின் கோபத்திற்கு பதில் சொல்ல முடியாது என்பது மட்டும் உண்மை.
இந்தக் கருத்துக் கணிப்பு நான்கு கோவில்களிலும் சுமார் 200 நபர்களிடம் எடுக்கப்பட்டது. சாதி, வர்க்கம், பால் ரீதியான பிரிவினைகளில் அனைத்தும் 50 : 50 என்று இருக்குமாறு தெரிவு செய்யப்பட்டது. குடியிருப்புகள், ஏனைய பொது இடங்களை விட கோவில்களே பொருத்தமாக இருக்குமென்று முடிவு செய்யப்பட்டது. இறுதியாக இந்துமுன்னணி சொல்வது போல இங்கே பக்தியும், ஆன்மீகமும் செழித்து வளர்ந்துவிட்டதாக சொல்வது கடைந்தெடுத்த பொய். மக்களுக்கு கோவிலும், வழிபாடும் ஏதோ தவிர்க்க முடியாத ஒரு சடங்கு, வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு இப்படியும் ஒரு சுமாரான தீர்வு உண்டு என்பதைத் தாண்டி பெரிய பிடிப்பு இல்லை.
– வினவு செய்தியாளர்கள்.

தொடர்புடைய பதிவுகள்




http://www.vinavu.com/2016/03/07/temple-survey/

அர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்!