Sunday, March 24, 2013

ஸ்ரீரங்கம் கோயிலில் அய்யங்காருக்கு மட்டும் வேலை; மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!


ஸ்ரீரங்கம் கோயிலில் அய்யங்காருக்கு மட்டும் வேலை; மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயில் பணிக்கு அய்யங்கார் சமுதாயத்தினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரிவிப்புக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் சார்பில் கடந்த மாதம் காவலாளி தொடங்கி சாமியை தூக்கிச் செல்லும் ஸ்ரீபாதம் வரையிலான ஏழு வகையான வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், பிரதான ஆலய ஸ்ரீபாதம், உப கோயில் ஸ்ரீபாதம், சன்னதி வாசல், உப கோயில் பரிசாரகர் ஆகிய பணிகளுக்கு இந்து பிராமண அய்யங்கார் சமுகத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கும்படி கூறப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை ரத்து செய்யக் கோரியும் 'அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம்' சார்பில் அதன் தலைவர் திருவண்ணாமலை அரங்கநாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.



அந்த மனுவில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களில் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர வேறு யாரும் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்.

தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எதுவும் கருவறைப் பணிகள் கிடையாது. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண அய்யங்கார் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல அறநிலையத் துறையும் அரசின் துறைதான். இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து அய்யங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்.’’ என்று கூறப்பட்டிருந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நம்மிடம், "மேற்கண்ட பணிகளுக்கு இந்து பிராமண அய்யங்கார்களை நியமிப்பது பாரம்பரியமாக நடந்து வரும் மரபு என்று கோயில் நிர்வாகம் சொல்கிறது. பால்ய விவாகம், உடன் கட்டை ஏறுதல், தேவதாசி முறை போன்றவையும் ஒரு காலத்தில் இந்தியாவில் பாரம்பரிய மரபாக இருந்தன. 1956ல் அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இது எல்லாம் சட்டவிரோதச் செயல்களாக மாறிவிட்டன. அதே போல கோயில் பணிக்கு மற்ற சாதியினரை நியமிக்கக் கூடாது என்று சொல்வதும் தவறுதான். அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டிய தி.க., தி.மு.க. போன்ற அரசியல் இயக்கங்கள் அமைதியாக இருப்பது வேதனை அளிக்கிறது" என்றார்.

-  கே.கே.மகேஷ்

No comments:

Post a Comment