Tuesday, March 26, 2013

ஸ்ரீரங்கம்: ஐயங்கார்களை மட்டும் பணிக்கமர்த்த தடை


கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 மார்ச், 2013 - 19:09 ஜிஎம்டி
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இந்து ஐயங்கார்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் செய்திருந்த அறிவிப்புக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் காலியாக இருக்கும் காவலாளி தொடங்கி உற்சவ மூர்த்தியை சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் வரையிலான ஏழு வகையான வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

ஆலயம் சார்பில் செய்யப்பட்ட இந்த அறிவிப்பு, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை ரத்து செய்யக் கோரியும் “அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம்” சார்பில் அதன் தலைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில், பிரதான ஆலய ஸ்ரீபாதம், உப கோயில் ஸ்ரீபாதம், சன்னதி வாசல், உப கோயில் பரிசாரகர் ஆகிய நான்கு வகையான பணிகளுக்கு இந்து பிராமண ஐயங்கார் ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரது மனுவில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.
“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, வழக்கறிஞர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும், மனுவை படித்துப்பார்த்து அதில் இருக்கும் நியாயத்தை பார்த்த மாத்திரத்தில் கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

No comments:

Post a Comment